» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?

சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

சென்னை - கன்னியாகுமரி பாதை 160 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க திட்டம் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயனாளிகள் சங்கத்தின் தலைவர்  எஸ்.ஆர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில்வே துறையில் எப்போதும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருவது புதிது ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டின் முக்கிய அதிக வருவாய் தரும் இருப்பு பாதையாக உள்ள சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதையை ரயிலின் வேகத்தை அதிகரித்து மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்க இதுவரை எந்த ஒரு திட்டமும் தெற்கு ரயில்வேயிடம் இல்லை. சென்னை எழும்பூர்– மதுரை - நாகர்கோவில் - திருவனந்தபுரம் 805 கிலோமீட்டர் மெயின் லைனில் முக்கிய சிக்னல் மேம்பாடு பணிகள் அதிவேக பாதை அமைத்தல் திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது  

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது பாதை பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?

ரயில்வேதுறை திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் வரை உள்ள 71 கி.மீ தூரத்தில் மூன்றாவது இருப்பு பாதை அமைக்கும் திட்டத்திற்கு இறுதி கட்ட இட ஆய்வுக்கு கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் மிகமிக முக்கியமாக விழிஞம் துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்திற்காக அறிவிக்கப்பட்டது. எனவே இந்த திட்டம் அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த பட்ஜெட்  அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. நமது கோரிக்கையின் படி இந்த திட்டத்தில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்து திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் வரை மூன்றாவது இருப்பு பாதை திட்டத்தை வீராணி ஆளூர் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வரை உள்ள இருப்பு பாதை திட்டத்தை மாற்று பாதையில் ஆளுரிலிருந்து தொடங்கி ஆசாரிப்பள்ளம், கோணம், பொட்டல், பறக்கை வழியாக சுசீந்திரம் ரயில் நிலையத்தில் வந்து சேருமாறு அமைக்க வேண்டும்.

நெடுமங்காடு முதல் குலசேகரம் வழி மேற்கு தொடர்ச்சி மலையோரம் வழியாக ஆரல்வாய்மொழி க்கு ரயில்வே இருப்பு பாதை அமைக்க சர்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா.

கேரளா அரசு அங்கமாலி-எரிமேலி சபரி வழித்தடத்தை பாலராமபுரம் வழியாக விழிஞம் வரை நீட்டிக்க ரயில்வே வாரியத்திடம் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ரயில் திட்டம் எருமேலியில் இருந்து ராணி, பத்தனம்திட்டா, பத்தனாபுரம், புனலூர், அஞ்சல், கிளிமானூர், வெஞ்சாரமூடு, நெடுமங்காடு, காட்டாக்கடை, பலராமபுரம் வழியாக விழிஞ்சம் வரை நீட்டிக்கப்படும்.  இந்த பாதை கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள காட்டாகடைக்கும் வெள்ளரடை க்கும் இடைப்பட்ட இடம் வழியாக பாலராமபுரம் செல்ல இருக்கிறது. இந்த நிலையில்; இவ்வாறு வரும் இருப்பு பாதையை குமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையோரம் வெள்ளராடா, நெட்டா, சிற்றார் அணை, குலசேகரம் ஆவுட்டர், கழியல், பொன்மனை அவுட்டர்,சுருளகோடு, தடிக்காரகோணம், அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி, செண்பகராமன்புதூர், வழியாக ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் கொண்டு இணைக்க வேண்டும் அதற்கான பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு  பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

திருவனந்தபுரம் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு திருநெல்வேலி வரை நீட்டிப்பு 

கேரளாவில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (பிஆர்டிஎஸ் ): திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை இணைக்கும் உயர் வேக பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு  (Regional Rapid Transit System - RRTS)  நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும். இது டெல்லி மீரட் பிஆர்டிஎஸ்  -ஐ மாதிரியாகக் கொண்டு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  முதல் கட்டம் 2027 ஜனவரி அன்று திருவனந்தபுரம் மற்றும் திருச்சூரை இணைக்கும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் பின்னர் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மற்றும்  கோயம்புத்தூர் கர்நாடகாவில் உள்ள மங்களூர் வரை நீட்டிக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது . கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவை போன்று அதிக மக்கள் நெருக்கடி நிறைந்த மாவட்டம் ஆகும் எனவே  இந்த திட்டத்தில் கடைசி கட்ட திட்டமாக இல்லாமல் ஒரே நேரத்தில் கேரளாவில் இந்த திட்டம் தொடங்கும் போது தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி வரை இந்த திட்டத்தை நீட்டிப்பு செய்து தொடங்குமாறு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து அனுமதி பெற்று இந்த திட்டத்துக்கு ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை திருநெல்வேலியில் மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் அமைக்க வேண்டும். இதற்காக சர்வே வருகின்ற பட்ஜெட்டில் அறிவிப்பு எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

நாகர்கோவில் நகரில் நியோ மெட்ரோ அமைக்க சாத்தியக்கூறுகள் அறிக்கை தயாரிக்கப்படுமா?

நாட்டின் நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், நகரங்களில் வாழும் மக்களின் போக்குவரத்தை மேம்படுத்துவதில் இந்தாண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதன்படி மெட்ரோ லைட் மற்றும்  மெட்ரோ நியோ ஆகிய சேவைகள் இரண்டாவது நிலை நகரங்களிலும் முதல் நிலை நகரங்கள் புறநகர் பகுதிகளில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதி ஆகும். அதனால்தான் நாகர்கோவிலை மாநகராட்சியாக அரசு அறிவித்தது. நகரில் தற்போது வாகனங்கள் இரட்டிப்பாகி, போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் பல மடங்கு அதிகமாகி  வருகிறது ஆகவே நாகர்கோவில் நகரில் நியோ மெட்ரோ அமைக்க சாத்தியக்கூறுகள் அறிக்கை தயார் செய்ய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திருவனந்தபுரம் மெட்ரோ மார்த்தாண்டம் வரை  நீட்டிப்பு:

கேரளா மாநில தலைநகர் பிஜேபி கைபற்றியதிலிருந்து திருவனந்தபுரத்தில் லைட் மெட்ரோ திட்டம் அது வேகமெடுத்துள்ளது. இந்த திட்டம் கேரளாவில் உள்ள நெய்யாற்றின்கரை வரை திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் பாறசாலை வரை நீட்டிக்கும் திட்டம் உள்ளது. இவ்வாறு பாறசாலை வரை நீட்டிக்கும் பட்சத்தில் இந்த திட்டத்தை சுமார் 10 கி.மீ தூரத்தை மார்த்தாண்டம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கோரிக்கை வைக்கப்படுகிறது. மார்த்தாண்டம் அவுட்டர் பகுதியில் இந்த மெட்ரோ ரயில் பெட்டிகள் பராமரிக்கும் பணிமனையும் வைக்கலாம் என்று ஆலோசனை வைக்கப்படுகின்றது. தற்போது இந்த திட்டங்கள் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு கேரள அரசு மற்றும் டெல்லி மெட்ரோ, சென்னை மெட்ரோ நிர்வாகங்கள் இணைந்து அதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மற்ற பல்வேறு திட்டங்கள்

1. அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் அருகே  மின்சார ரயில் இஞ்சின் பராமரிப்பு தொழிற்கூடம்  

2. ரயில்வேயில் தற்போது மின்சார இஞ்சின் தயாரிக்கும் தொழிற்சாலை மேற்கு வங்காளத்தில் சித்தரஞ்சன் இஞ்சின் தொழிற்சாலையும் டீசல் இஞ்சின் தொழிற்சாலை வாரணாசியில் உள்ளது. நாங்குநேரியில் அருகே  மின்சார ரயில் இஞ்சின் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

3. திருநெல்வேலியில் மெமு ரயில் இஞ்சின் பராமரிப்பு பணிமனை அமைக்க வேண்டும்.

4. நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நடைமேடை 4 மற்றும் 5 அமைத்து நான்கு வழிச்சாலைக்கு இணைப்பு ஏற்படுத்த வேண்டும்.

5. கன்னியாகுமரி – நாகர்கோவில் இடையே மூன்றாவது பாதை அமைக்க வேண்டும்.

6. கிழக்கு கடற்கரை ரயில் பாதை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி வரை சர்வே செய்யப்பட்டது. இந்த திட்டம் சர்வே மேம்படுத்துதல் 

7.குழித்துறை ரயில் நிலையத்தில் விழிஞம் சரக்கு துறைமுகத்துக்கு தேவையான  தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் 

8. கன்னியாகுமரியில் இரண்டு பிட்லைன்கள் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டார்கள் அந்த இரண்டு பிட்லைன்களை ரத்து செய்யாமல் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் அமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory