» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருமகனை அடித்துக் கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

திங்கள் 9, மார்ச் 2026 9:45:18 PM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு மாப்பிள்ளையூரணி பகுதியில் வசித்து வந்த ஹரிகுமார் (25), குடும்பப் பிரச்சினை காரணமாக அவரது மாமனார் சுப்பிரமணி (58) மற்றும் உறவினர் சத்தியநாராயணன் (34) ஆகியோரால் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது குறித்து தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, புலனாய்வு முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தாண்டவம் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு விசாரணைகளையும் முடித்த நீதிபதி இன்று (09.03.2026) தீர்ப்பளித்தார்.

அதில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சத்தியநாராயணனை விடுதலை செய்தும், முக்கியக் குற்றவாளியான சுப்பிரமணிக்கு கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், கொலையை மறைத்த குற்றத்திற்காக அவருக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைகளை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கின் சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத் தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், வழக்கைப் புலனாய்வு செய்த அப்போதைய ஆய்வாளர் தங்ககிருஷ்ணன், அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ் மற்றும் உதவி புரிந்த தலைமை காவலர் சங்கரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு (2026) இதுவரை மொத்தம் 7 கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory