» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூரில் விஜய், சாத்தூரில் நயினார் நாகேந்திரன் வேட்புமனுக்கள் ஏற்பு!

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:48:16 AM (IST)



கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேட்பு மனு ஏற்க்கப்பட்டுள்ளது. பெரம்பூரில் விஜய்யின் வேட்புமனு ஏற்க்கப்பட்டுள்ளது. 

சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கடந்த 30-ந்தேதி வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் தாக்கல் செய்தார்.

இதேபோல, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கடந்த 2-ந்தேதி திருச்சியில் விஜய் தாக்கல் செய்தார். 2 இடங்களில் வேட்புமனு தாக்கலில் பிரமாண பத்திரத்தில் தனது சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு இருந்தார்.

இதில் திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் தன் மீது 2 குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவில், தன் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என பிரமாண பத்திரத்தில் விஜய் குறிப்பிட்டு இருந்தார்.

இதேபோல, விஜய்யின் பிரமாண பத்திரங்களில் பெரம்பூரில் 52 வயது என்றும், திருச்சி கிழக்கில் 51 வயது எனவும் வெவ்வேறாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக அந்த மனுக்களில் குழப்பம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே, பெரம்பூர் தொகுதியில் விஜய் தாக்கல் செய்த மனுவின் நிலை என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்தது.

இது குறித்து, பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்து களை தெரிவித்து வந்தனர். மேலும், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த மனு விஜயால் திருத்தப்படாமல் போனால், அவரது மனு நிராகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்தநிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 4-ந்தேதி பெரம்பூர் தொகுதியில் விஜய் சார்பில் புதிதாக திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் திருச்சி வேட்புமனு பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள, கொளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ததாக தன் மீதும், சுமார் 5 ஆயிரம் பேர் மீதும் சென்னை பெரவள்ளூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற வழக்கும்,

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் விஜய் நடைமேடையில் நடந்து வரும் போது, ஆர்வத்தில் வாலிபர் ஒருவர் நடைமேடையில் ஏறியதாகவும், அப்போது 10 பவுன்சர்கள் அவரை இடித்து தள்ளியதாகவும், அதில் நெஞ்சில் உள்காயம் ஏற்பட்டதாகவும் புகார்தாரர் அளித்த புகாரில் மதுரை கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற வழக்கும் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், பெரம்பூர் தொகுதி வேட்புமனு தாக்கலில் 52 வயது என்று உள்ளதை, திருச்சி கிழக்கு தொகுதி மனுவில் உள்ளதுபோல 51 என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத் தப்பட்ட பிரமாண பத்திரத்தை த.வெ.க. வக்கீல் சூர்யபிரகாஷ் மற்றும் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சிவா ஆகி யோர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார்கள்.

வேட்புமனுவில் உள்ள தவறு உடனடியாக சரிசெய்யப்பட்ட தால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பு இல்லை என்றும், இந்த விவகாரத்தில் இனி எந்த சிக்கலும் வராது என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, திருச்சி கிழக்கு தொகுதியிலும் த.வெ.க. நிர்வாகிகளால் திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விஜய்யின் மனு ஏற்கப்பட்டுள்ளது. விஜய் மனு ஏற்கப்பட்டதற்கு திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதைபோல கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேட்பு மனு ஏற்க்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனு ஏற்க்கப்பட்டுள்ளது. சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory