» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாகன ஓட்டிகளை அலறவிடும் புதிய தானியங்கி டிரைவிங் டெஸ்ட்... ஒரு மாதத்தில் ஒருவர் மட்டுமே பாஸ்!
புதன் 8, ஜூலை 2026 10:36:02 AM (IST)

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம் நடைமுறைக்கு வந்த ஒரே மாதத்தில், ஒரே ஒரு நபர் மட்டுமே தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் (Driving License) பெற விரும்புவோர், முன்னதாக மோட்டார் வாகன ஆய்வாளர் (MVI) முன்னிலையில் வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும். போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கிறாரா என்பதை ஆய்வாளர் நேரில் பார்த்து உரிமம் வழங்குவது பழைய நடைமுறை.
தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் தானியங்கி கணினி மூலம் ஓட்டுநர்களைத் தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ், தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 2025 - 2026ஆம் ஆண்டு மோட்டார் வாகனத் திட்டத்தின் கீழ், ₹22.11 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தளத்தில் வாகனம் ஓட்டும்போது விளிம்புக் கோட்டில் மோதாமல் செல்லுதல், முன்னோக்கிச் செல்லுதல், நிறுத்துதல், சரியான பாதையில் இயக்குதல் ஆகிய அனைத்தையும் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள சென்சார்கள் (Sensors) மற்றும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் கண்காணிக்கும். இதில் போக்குவரத்து விதிமுறைகள் சிறிதளவு மீறப்பட்டாலும், கணினி உடனடியாக 'தோல்வி' (Fail) என்று காட்டிவிடும். இதில் மோட்டார் வாகன ஆய்வாளரோ அல்லது வட்டாரப் போக்குவரத்து அதிகாரியோ எந்த மாற்றமும் செய்ய முடியாது.
இந்தத் தானியங்கி தேர்வு தளத்தில் "H" வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் ஓடுதளத்தின் மையப்பகுதி, அரசு விதிகளின்படி மிகக் குறைவாக, அதாவது 3.5 மீட்டர் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் குறுகிய இடைவெளியில் வாகனத்தைத் திருப்பும்போது, பக்கவாட்டுக் கோடுகளில் வாகனம் கண்டிப்பாக உரசிவிடுகிறது. இதன் காரணமாக, திறமையாக வாகனம் ஓட்டத் தெரிந்தவர்களும்கூடத் தேர்வில் தோல்வியடைகின்றனர்.
சரிந்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை:
வழக்கமாக வாரத்திற்கு 100 பேர் வரை நான்கு சக்கர வாகன உரிமத்திற்கு விண்ணப்பிப்பார்கள். அதில் 4 அல்லது 5 பேர் மட்டுமே தோல்வியடைவர்; மாதத்திற்குச் சுமார் 400 பேர் உரிமம் பெற்று வந்தனர்.
ஆனால், இந்தத் தானியங்கி தளம் நடைமுறைக்கு வந்த கடந்த ஜூன் 8, 2026 முதல் ஜூலை 7, 2026 வரையிலான ஒரு மாத காலத்தில், வெறும் 28 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தளத்தில் வாகனத்தை இயக்கியவர்களில் 27 பேர் தோல்வியடைய, ஒரே ஒரு நபர் மட்டுமே தேர்ச்சி பெற்று உரிமம் பெற்றுள்ளார்.
பண விரயத்தால் மக்கள் அதிருப்தி:
முதல்முறை தேர்வுக்கு ரூ.1,150 கட்டணம் செலுத்த வேண்டும். அதில் தோல்வியடைந்தால், 7 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ₹650 செலுத்த வேண்டும். அதிலும் தோல்வியுற்றால் 14 நாட்களுக்குப் பிறகும், மீண்டும் தோல்வி அடைந்தால் ஒரு மாதத்திற்குப் பிறகும் தலா ₹650 வீதம் கட்டணம் செலுத்திப் பங்கேற்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால் பணமும் நேரமும் வீணாவதாகக் கருதி, மக்கள் விண்ணப்பிக்கவே தயங்குகின்றனர்.
எனவே, அரசு மீண்டும் பழைய நடைமுறையைக் கொண்டு வர வேண்டும் அல்லது இந்தத் தானியங்கி தேர்வு தளத்தின் அளவுகளைச் சற்று கூடுதலாக மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
எவன்Jul 8, 2026 - 06:52:45 PM | Posted IP 104.2*****
அதற்கு முன்னாடி லஞ்சம் கொடுத்தால் கிடைத்துவிடும்.
PerumalsamyJul 8, 2026 - 02:22:37 PM | Posted IP 172.7*****
Im the only one person who pass the exam in the last month
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு: சுகாதாரத் துறைக்கு அதிரடி உத்தரவு!
புதன் 8, ஜூலை 2026 8:36:10 PM (IST)

பெண்கள், குழந்தைகள் குறித்து அரசுக்கு அக்கறையில்லை: கனிமொழி சாடல்!
புதன் 8, ஜூலை 2026 5:09:17 PM (IST)

இரயில் நிலையங்களில் ₹10 கட்டணத்தில் பேட்டரி கார் வசதி: கோட்ட மேலாளருக்கு கோரிக்கை!
புதன் 8, ஜூலை 2026 4:33:40 PM (IST)

இப்போது தேர்தல் வந்தாலும் விஜய் 180 இடங்களில் ஜெயிப்பார்: வைகோ பேட்டி!
புதன் 8, ஜூலை 2026 4:21:22 PM (IST)

கல்வி கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது : வங்கி மேலாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 8, ஜூலை 2026 4:05:56 PM (IST)

தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!
புதன் 8, ஜூலை 2026 3:22:30 PM (IST)



அழகுJul 8, 2026 - 07:22:07 PM | Posted IP 162.1*****