» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்குப் பழங்குடியினர் நிதி மடைமாற்றம்: டிடிவி தினகரன் கண்டனம்!

வியாழன் 23, ஜூலை 2026 5:13:34 PM (IST)

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யப் பழங்குடியினர் முன்னேற்ற நிதியிலிருந்து ₹6 கோடி ரூபாயைப் பயன்படுத்துவது சமூக அநீதி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காகப் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் ₹343.55 கோடி செலவிட நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்ட விரிவாக்கத்திற்காகப் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல் திட்ட நிதியிலிருந்து சுமார் ₹6 கோடி ரூபாயைப் பயன்படுத்துவதாக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்றளவும் தரமான கல்வி, குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்காத நிலையில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றம் செய்வது அவர்களின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தும் செயலாகும். 

காலை உணவுத் திட்டம் மிக முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றுவது சமூக அநீதியின் வெளிப்பாடாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 19.34 லட்சம் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெற்று வந்த இக்காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான 12.87 லட்சம் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory