» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சைபர் குற்றவாளிகளுக்கு வாடகை வங்கி கணக்கு: தமிழகம் முழுவதும் 837 பேர் அதிரடி கைது!

திங்கள் 10, ஆகஸ்ட் 2026 11:37:07 AM (IST)

கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டுச் சைபர் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டவர்கள், இடைத்தரகர்கள் மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் என 837 பேரை இரண்டு நாட்களில் தமிழகச் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆன்லைன் வாயிலாகப் பண மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள், மோசடி செய்த பணத்தை வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்புவதற்கும், சட்டவிரோதப் பணத்தைப் பெறுவதற்கும் பயன்படுத்தும் வங்கி கணக்குகளைச் சைபர் கிரைம் போலீசார் 'மியூல் வங்கி கணக்குகள்' என அழைக்கின்றனர்.

பொதுமக்களிடம் இருந்து இத்தகைய வங்கி கணக்குகளைச் சேகரித்துச் சைபர் குற்றவாளிகளுக்கு வழங்கக் கமிஷன் அடிப்படையில் இடைத்தரகர்கள் செயல்பட்டு வருகின்றனர். மேலும், சில பொதுமக்களும் கமிஷன் பணத்திற்காகத் தங்களின் வங்கி கணக்குகளை நேரடியாகச் சைபர் குற்றவாளிகளுக்கு வாடகைக்கு விட்டு வந்துள்ளனர்.

இத்தகைய சட்டவிரோதச் செயல்களை முறியடித்து, நாடு முழுவதும் உள்ள சைபர் குற்றவாளிகளின் பிணையத்தை (Network) சீர்குலைக்க மாநிலச் சைபர் குற்றத்தடுப்புப் பிரிவு போலீசாருக்கு டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, சைபர் குற்றத்தடுப்புப் பிரிவு டி.ஜி.பி. பாலநாகதேவி, எஸ்.பி. மீனாட்சி ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். நாடு முழுவதும் பதிவான 9,804 வழக்குகளில், ரூ. 545 கோடி மோசடி செய்யப்பட்டுப் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் நபர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்தனர்.

இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய இரு நாட்களில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையர்கள் மேற்பார்வையில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.

வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டவர்கள், இடைத்தரகர்கள் உட்பட 837 பேர் மீது 601 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், வங்கி கணக்கை வாடகைக்கு விட்டது தொடர்பாகக் கூடுதலாக 150 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைதானவர்களிடம் இருந்து 204 மொபைல் போன்கள், 185 சிம் கார்டுகள், ரூ. 1.02 லட்சம் ரொக்கம், 114 வங்கி கணக்குப் புத்தகங்கள், 29 காசோலைகள், 73 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட 155 மொபைல் எண்கள், 58 வங்கி கணக்கு விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களை ஆய்வு செய்து, நாடு முழுவதும் தலைமறைவாக உள்ள இவர்களின் கூட்டாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory