» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒலிம்பிக் ஆக்கி: ஸ்பெயினை வீழ்த்திய‌ இந்திய அணிக்கு வெண்கலம்!

வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 10:47:17 AM (IST)



ஒலிம்பிக் ஆக்கியில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி மீண்டும் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

ஒலிம்பிக் ஆக்கியில் நேற்று மாலை நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 8-வது இடத்தில் உள்ள ஸ்பெயினை எதிர்கொண்டது. தொடக்க முதலே இரு அணிகளும் தாக்குதல் பாணியை தொடுத்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தது. 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பு கிட்டியது. இதனை அந்த அணியின் கேப்டன் மார்க் மிராலெஸ் கோலாக மாற்றினார்.

30-வது நிமிடத்தில் இந்திய அணி பதில் கோல் திருப்பியது. பெனால்டி கார்னர் வாய்ப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்து கலக்கினார். இதனால் முதல் பாதியில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை நிலவியது. பிற்பாதி ஆட்டம் தொடங்கியதும் (33-வது நிமிடம்) இந்திய அணி மீண்டும் கோல் அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மீண்டும் கோலாக்கினார். நடப்பு ஒலிம்பிக்கில் அவர் அடித்த 10-வது கோல் இதுவாகும். இதனால் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

கடைசி கட்டத்தில் ஸ்பெயின் அணி அதிக நெருக்கடி அளித்ததுடன் பதில் கோல் திருப்ப கடுமையாக மல்லுக்கட்டியது. பெனால்டி கார்னர் உள்ளிட்ட சில வாய்ப்புகளில் அந்த அணி வீரர்கள் கோல் வலையை நோக்கி அடித்த அபாரமான ஷாட்களை இந்திய அணியின் கோல்கீப்பரும், தடுப்பு சுவருமான ஸ்ரீஜேஷ் சூப்பராக தடுத்து அணியை காத்தார்.

முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி மீண்டும் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது. கடந்த (2021) ஒலிம்பிக்கிலும் வெண்கலம் வென்று இருந்தது. இதன் மூலம் இந்திய அணி 52 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் ஆக்கியில் அடுத்தடுத்து பதக்கத்தை வென்று பிரமாதப்படுத்தியுள்ளது.

4-வது முறையாக ஒலிம்பிக்கில் தடம் பதித்த 36 வயது கோல் கீப்பரான ஸ்ரீஜேஷ் இந்த ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதனால் அவருக்கு இதுவே கடைசி சர்வதேச போட்டியாகும். அவர் தனது ஆட்டத்தை என்றும் நினைவு கூறும் வகையில் தித்திப்பாக நிறைவு செய்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜேஷ் 335 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்ததும் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட ஸ்ரீஜேஷ் கோல் கம்பத்தின் அருகே தரையில் விழுந்து தனது கையுறையை வணங்கினார். அதன் பிறகு கோல் கம்பத்தின் மீது ஏறி அமர்ந்து அனைவரையும் நோக்கி கையசைத்து விடைபெற்றார். இந்த வெற்றியை அவருக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்த கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அவரை தனது தோளில் சுமந்தபடி மைதானத்தில் உற்சாகமாக வலம் வந்தார்.

பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், ‘இந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இருப்பது தலைமுறை, தலைமுறையாக போற்றப்படும் ஒரு சாதனை. இந்திய ஆக்கி அணி ஒலிம்பிக்கில் பிரகாசமாக ஜொலித்து வெண்கலப்பதக்கத்தை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. 

இது ஒலிம்பிக்கில் அவர்கள் தொடர்ச்சியாக வென்ற 2-வது பதக்கம் என்பது மேலும் சிறப்புக்குரியதாகும். பெரும் தனித் திறமை, விடாமுயற்சி மற்றும் அணியின் உத்வேகம் ஆகியவை அவர்களுக்கு இந்த வெற்றியை தேடித் தந்துள்ளது. வீரர்கள் மகத்தான மன உறுதியையும், சரிவில் இருந்து மீளும் திறனையும் வெளிப்படுத்தினர். வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் ஆக்கியுடன் உணர்வுபூர்வமான தொடர்பை கொண்டுள்ளனர். எனவே இந்த சாதனை வெற்றி ஆக்கி விளையாட்டை நமது நாட்டு இளைஞர் உள்ளிட்ட அனைவரது மத்தியிலும் மேலும் அதிகமாக பிரபலப்படுத்தும்’ என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory