» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து அணி சாம்பியன்!

திங்கள் 21, அக்டோபர் 2024 11:04:41 AM (IST)



மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி துபையில் உள்ள துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் பேட் செய்தது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அமெலியா கெர் 38 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ப்ரூக் ஹால்லிடே 38 ரன்களும், சூஸி பேட்ஸ் 32 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் நன்குலுலேகோ மிலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அயபோங்கா காஹா, ச்லோ டிரையான் மற்றும் நாடைன் டி கிளர்க் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கேப்டன் லாரா 33 ரன்கள் எடுத்தார். டாஸ்மின் 17 ரன்களும், ஸ்லோ டிரையன் 14 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில் அசத்தலாக பந்து வீசிய ரோஸ்மேரி, அமேலியா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

உலகக் கோப்பைக்கு முன்னதாக தொடர்ச்சியாக 10 போட்டிகளில் தோற்றிருந்த நியூசிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவிர்த்து அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ஆட்டநாயகி விருது மற்றும் தொடர் நாயகி விருதை நியூசிலாந்து அணியில் அமேலியா கெர் வென்றார்.

தென்னாப்பிரிக்காவுக்கு தொடரும் சோகம்: அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சியளித்த தென்னாப்பிரிக்க அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கைக்கு வந்த வாய்ப்பை நழுவவிட்டுள்ளது. ஒருகட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில் பின்வரிசை வீராங்கனைகளில் சொதப்பலால் கோப்பையை இழந்தது.

ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பையை தொடர்ந்து மகளிர் டி20 உலகக்கோப்பையிலும் தென்னாப்பிரிக்க அணி தோல்வியைத் தழுவி இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory