» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மாநில ஜூனியர் ஆக்கி போட்டி: தூத்துக்குடி அணி கோப்பையை வென்றது

திங்கள் 28, ஜூலை 2025 8:45:35 AM (IST)



கோவில்பட்டியில் நடந்த மாநில ஜூனியர் ஆண்களுக்கான ஆக்கி போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி முதலிடத்தை பிடித்து பரிசுக் கோப்பையை தட்டி சென்றது.

தமிழ்நாடு ஆக்கி கழகம் மற்றும் தூத்துக்குடி ஆக்கி கழக கிளை சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டியில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடந்தது. லீக் முறையில் நடந்த ஆட்டங்களில் புள்ளிகளின் அடிப்படையில் தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 4 மாவட்ட அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

கோவில்பட்டி கிருஷ்ணாநகர் செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் நேற்று அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடந்தது. காலையில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் விருதுநகர் மாவட்ட அணியும், தூத்துக்குடி மாவட்ட அணியும் மோதின. இதில் 7 -0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி மாவட்ட அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து மதுரை மாவட்ட அணியுடன் ராமநாதபுரம் மாவட்ட அணி மோதியது. இதில் 3 - 2 என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மாலையில் 3, 4-வது இடங்களுக்கான போட்டியில் மதுரை மாவட்ட அணியும், விருதுநகர் மாவட்ட அணியும் மோதின. இதில் 3 - 2 என்ற கோல் கணக்கில் மதுரை மாவட்ட அணி வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது. தொடர்ந்து நடந்த இறுதி போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியுடன் ராமநாதபுரம் மாவட்ட அணி மோதியது. இதில் 6 - 0 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி மாவட்ட அணி வெற்றி பெற்று வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பையை தட்டிச் சென்றது.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமை நாயகம் ஆகியோர் தலைமை தாங்கினர். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக போக்குவரத்து மேலாளர் விமல் பார்க்கவன், தலைமை பொறியாளர் சீனிவாச ராவ் சில்லி ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினர். இதில், ஆக்கி கழக மதுரை தலைவர் கண்ணன், ஆக்கி கழக நெல்லை கிளை தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை ஆக்கி கழக தூத்துக்குடி கிளை செயலாளர் குருசித்ர சண்முக பாரதி, பொருளாளர் ராஜா, துறைமுக ஆக்கி அணி பொறுப்பாளர் ராஜகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory