» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கில், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா அபார சதம்: சரிவில் இருந்து மீண்டு டிரா செய்தது இந்தியா!

திங்கள் 28, ஜூலை 2025 8:57:02 AM (IST)



இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு டிரா செய்தது. சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தினர்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் (150 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (141 ரன்) சதம் அடித்தனர்.

311 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (0), அடுத்து களம் கண்ட சாய் சுதர்சன் (0) ஆகியோர் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல், கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். 4-வது நாள் முடிவில் இந்திய அணி 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 87 ரன்களுடனும், சுப்மன் கில் 78 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 137 ரன்கள் எடுத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் லோகேஷ் ராகுல், சும்பன் கில் தொடர்ந்து பேட் செய்தனர். இருவரும் பொறுமையான ஆட்டத்தை தொடர்ந்தனர். லோகேஷ் ராகுல் 90 ரன்னில் (230 பந்து, 8 பவுண்டரி) பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல்-சுப்மன் கில் இணை 186 ரன்கள் திரட்டியது.

இதைத்தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் வந்தார். நிலைத்து நின்று ஆடிய கேப்டன் சுப்மன் கில் 228 பந்துகளில் தனது 9-வது சதத்தை எட்டினார். நடப்பு தொடரில் அவர் அடித்த 4-வது சதம் இதுவாகும். முன்னதாக அவர் 81 ரன்னில் இருக்கையில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பினார். சதம் அடித்த சற்று நேரத்தில் கேப்டன் சுப்மன் கில் (103 ரன், 238 பந்து, 12 பவுண்டரி) ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சை திருப்ப முயற்சித்து விக்கெட் கீப்பர் ஜேமி சுமித்திடம் சிக்கினார்.

அடுத்து ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்தார். இருவரும் விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்ற நோக்குடன் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். அதேநேரத்தில் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கும் ஓடவிட்டனர். பென் ஸ்டோக்ஸ் வீசிய ஒரு ஓவரில் (அதாவது 112-வது ஓவர்) வாஷிங்டன் சுந்தர் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி அரைசதத்தை (117 பந்துகளில்) கடந்தார். 

அவர் அடித்த 5-வது அரைசதம் இதுவாகும். அதேஓவரில் ரவீந்திர ஜடேஜா பவுண்டரி விரட்டி அரைசதத்தை (86 பந்தில்) எட்டினார். அத்துடன் அணியும் முன்னிலை பெற்றது. நடப்பு தொடரில் அவர் விளாசிய 5-வது அரைசதமாகவும், ஒட்டுமொத்தத்தில் 27-வது அரைசதமாகவும் இது அமைந்தது. அவர் முதல் பந்திலேயே கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிப்பிழைத்ததால் கிட்டிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

123 ஓவர்கள் முடிந்திருந்த போது இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 343 ரன்கள் எடுத்து 32 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. வாஷிங்டன் 66 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 64 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். இந்த ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்தது.

கடைசி செஷனில் 15 ஓவர்கள் எஞ்சியிருந்தது. ஜடேஜா 90 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 84 ரன்களிலும் தங்களது சதத்தை நெருங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களிடம் பென் ஸ்டோக்ஸ் பேசினார். ‘ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம்’ என ஹேண்ட் ஷேக் கொடுக்க முன்வந்தார். ஆனால், அதை இந்திய வீரர்கள் மறுத்துவிட்டனர்.

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு விதி 12.7.6 பிரிவின் கீழ் ‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளில் ஆட்டத்தில் எந்த அணிக்கும் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லையென்றால் இரு அணி கேப்டன்களும் பேசி ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம்’. இதை கடைசி ஒரு மணி நேர ஆட்டம் தொடங்கும்போதோ அல்லது கடைசி 15 ஓவர்கள் வீசப்படும் போதோ செய்யலாம். இதற்கு பரஸ்பரம் இரு அணிகளின் கேப்டன்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். பேட்டிங் செய்யும் அணியின் தரப்பில் களத்தில் உள்ள வீரர்கள் அந்த முடிவை எடுக்கலாம்.

இந்தியா ஆட்டத்தை முடித்துக்கொள்ள மறுத்த நிலையில், ஜடேஜா உடன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் பேசி இருந்தனர். அது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. 

"நீங்கள் சதம் விளாச வேண்டுமென்றால் இதுபோல முன்னதாகவே பேட் செய்திருக்க வேண்டும்’ என இங்கிலாந்து வீரர்கள் தெரிவித்தனர். அப்போது ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என இருவரும் பவுண்டரிகளில் ரன் ஸ்கோர் செய்து கொண்டிருந்தனர்.

ஸ்டோக்ஸ்: ஜட்டு… நீங்கள் ஹாரி புரூக் மற்றும் பென் டக்கெட் பந்துவீச்சில் டெஸ்ட் கிரிக்கெட் சதம் பதிவு செய்ய விரும்புகிறீர்களா?

ஜடேஜா: நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிறீர்கள்? வாக்-ஆஃப் கொடுத்துவிட்டு சென்றுவிடவா?

ஸாக் கிராவ்லி: ‘ஜட்டு… ஹேண்ட் ஷேக் செய்து கொள்ளலாம்’

ஜடேஜா: ‘என்னால் எதுவும் செய்ய முடியாது” என அந்த உரையாடல் இருந்தது.

இதன் பின்னர் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இருவரும் சதம் விளாசினர். அதன் பின்னர் ஆட்டம் டிரா ஆனது. அப்போது இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 425 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டோக்ஸின் ஹேண்ட் ஷேக் விவகாரம் சமூக வலைதளத்தில் விவாத பொருளாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory