» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய கோப்பை: சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா

சனி 27, செப்டம்பர் 2025 10:12:52 AM (IST)



ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றது. 

8 அணிகள் பங்கேற்றிருந்த 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 61 ரன்னும், திலக் வர்மா 49 ரன்னும், சஞ்சு சாம்சன் 39 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களமிறங்கியது. குசால் மெண்டிஸ் டக் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு பதும் நிசங்காவுடன் குசால் பெராரா இணைந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது, குசால் பெராரா அரை சதம் கடந்து 58 ரன்னில் அவுட்டானார்.

சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் கடந்து 107 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஒவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. 

இந்த ஆட்டத்தில் அடித்த ரன்களையும் சேர்த்து அபிஷேக் ஷர்மா நடப்பு தொடரில் இதுவரை 3 அரைசதம் உள்பட 309 ரன்கள் (6 ஆட்டம்) குவித்துள்ளார். இதன் மூலம் ஆசிய கோப்பை 20 ஓவர் வடிவில் 300 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற அபார சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்பு பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 281 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

நடப்பு சாம்பியன் இந்திய அணி லீக் சுற்றில் யுஏஇ, பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகளை வரிசையாக வீழ்த்தியது. சூப்பர்4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்திய அணி. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory