» சினிமா » செய்திகள்
வேட்டையன் படத்தில் அரசு பள்ளி குறித்து அவதூறு : இயக்குநர் மீது போலீசில் புகார்!
ஞாயிறு 13, அக்டோபர் 2024 9:15:49 AM (IST)
கோவில்பட்டி அரசு பள்ளிக் குறித்து அவதூறு பரப்பியதாக வேட்டையன் திரைப்பட இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட மாணவர் அணி தலைவர் மாரிமுத்து ராமலிங்கம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், தமிழ் திரைப்பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள வேட்டையன் என்ற திரைப்படத்தின் ஒரு காட்சியில் கோவில்பட்டி காந்திநகர் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியையை ஆபாசமாக பதிவு செய்த காணொளி வலைதளங்களில் பரவியதால் "சர்ச்சை" என்ற காட்சி வருகிறது.
இதன் மூலம் அதில் படிக்கும் மாணவர்கள் மீதும், ஏற்கனவே பயின்ற என்னைப் போன்ற முன்னாள் மாணவர்கள் மீதும் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடும். இதனால் பள்ளி குறித்து தமிழ்நாடு முழுவதும் தவறான கருத்து ஏற்படும். இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் நன்கு படித்து வருகின்றனர். இப்பள்ளி 2009-10 ஆண்டில் தமிழ் நாட்டிலேயே சிறந்த அரசு பள்ளி என்ற விருது பெற்ற பள்ளி ஆகும்.
இன்று வரை 10ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்று வரும் பள்ளி. ஆகையால் அரசுக்கும், அரசு ப்பள்ளி மாணவர்கருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் காட்சியை அமைத்த இயக்குநர் ஞானவேல் மீது சட்டடப் படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேட்டையன் திரைப்படத்தில் அந்த ஒரு குறிப்பிட்ட காட்சியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.