திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (33 of 53)
மும்மலைகள் மூவரசர் ஆன கதை
பொதிகை மலையைப் போல தாமிரபரணி தோன்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் சைய மலையும், தருத்தர மலையும் கம்பீரமாய் இருந்தது. இதில் பொதிகை மலை உயர்ந்தது. அதே போல் சைய மலையும், தருத்தர மலையும் பொதிகை மலைக்கு ஈடாக இருந்தது. அப்போது அங்கு வந்த நாரத முனிவர் கலகம் ஒன்றை ஏற்படுத்தினார். நாரதரின் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள்.
அதே போல் நாரதர் இம் மூன்று மலைகளையும் பார்த்து, ‘ஏ’ மலைகளே உங்கள் உயர்வான தோற்றமும், வலிமையும், பெருமையும் அழகும் யாருக்குமே தெரியவில்லை. உங்களை ஒருவரும் வாயார வாழ்த்திப் பாட மாட்டேன்கிறார்களே. காரணம் என்ன? என்று கேட்டார். மும்மலைகளும் மாமுனிவரின் கேள்வியை கேட்டு திகைத்தன. அவர்களுக்கு போதிய விளக்கம் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆகவே நாரதரை வணங்கி ஐயா, எங்கள் பெருமையை வெளியே அனைவரும் புகழ் செய்ய வழி கூறுங்கள் என கேட்டனர்.
‘மலைகளே! நீங்கள் சிவ பெருமானை வணங்குவதில்லை. அதனால் தான் இந்த நிலை’. அப்படியா.... என்றன மலைகள். ஆம். இவ்வுண்மையை வடக்கே இமயத்தில் யாம் கூறிவிட்டே இங்கு வந்துள்ளோம். சிவபெருமானை வணங்கினால் உங்கள் பெருமையைப் புகழ்ந்து பாடுவார்கள் என்றார் நாரத முனிவர்.
நாரத தீர்த்தம்
உடனே மலைகள் நாரதரே! நாங்கள் சிவனை வணங்க என்ன வழி என்று கூறுங்கள் என்று கேட்டனர். நாரதர் தன் கையில் இருந்த குண்டிகை தீர்த்தத்தை தெளித்து மலைகளை வாழ்த்தினார். அதன்பின் மலைகள் மெய்ஞானம் பெற்றது. அந்த நாரதர் தெளித்த குண்டிகை தீர்த்தமே நாரதர் தீர்த்தமாகிவிட்டது. நாரதர் மலைகளுக்கும், மறுமைக்கும், இம்மைக்கும் உதவக்கூடிய பஞ்சாக்கரம் என்னும் ஐந்து எழுத்து மந்திரத்தை உபதேசித்தார். ஏன் என்றால் இந்த மந்திரமே, எல்லா மந்திரங்களுக்கும் ஆதியானது ஆகும்.
பின்பு மலைகளுக்கு சிவபூஜை செய்யும் வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்தார். மலைகளும் முறையாக சிவனை வணங்கி வந்தது. ஆவணி மாதம் ஒரு வெள்ளிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி நாளில் மலைகள் விநாயகரை சிறப்பாக வழிபட விரும்பினர். ஆகவே வேத தீர்த்தத்தில் நீராடின். (தாமிரபரணி தோன்றும் முன் இருந்த நதியின் பெயரில் உள்ள தீர்த்தம்) பின்பு கரையில் வட திசையை பார்த்து உட்கார்ந்து மண்ணால் உருவம் ஒன்று செய்து அதில் விநாயகரை வரவழைக்க வேண்டினர்.
பட்டாடைகள், சந்தனமலர் சாத்தி, அருகம்புல் கட்டி பற்பல பொங்கல் மற்றும் சர்க்கரை பணியாரங்கள், பழ வகைகள் படைத்து தீபம் காட்டி வழிபட்டனர். மலைகள் பூஜை செய்கிறது என்று கூறும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் புராணங்களில் ஐம் பூதங்களையும் மற்ற இயற்கைப் பொருட்களையும் தேவர்களாகக் கருதி நிகழ்ச்சிகளை அமைத்து பல தத்துவங்களையும், அறநெறிகளையும் கூறுவர் முன்னோர்கள்.
குறிப்பாக அக்னி, வருண, வாயு, சூரிய பகவான்களை தேவர்கள் என்று புராணத்தில் கூறும் போது நிச்சயம் மும்மலைகளை தேவர்கள் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
பனி பொதித்த விநாயகர்
மும்மலைகள் வழிபாட்டை கண்ட விநாயகர் பால் போன்ற வெண்ணிறமாக பெரிய உருவத்தால் பனி பொதித்த நிலையில் தோன்றியது. அதை கண்ட மலைகள் கண்ணீர் விட்டு வணங்கினர். மும்மலைகளைப் பார்த்து ஆனந்தப்பட்ட விநாயகர், உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.
மும்மலைகள் எங்களுக்கு உங்கள் மீதுள்ள அன்பு என்றும் நீங்கக் கூடாது. தற்சமயம் தாங்கள் எங்கள் முன் காட்டிய உருவத்தை எப்போதும் பக்தர்களுக்கும் காட்ட வேண்டும். என்று கேட்டன. ‘நன்று’ என்று விநாயகரும் அருள் புரிந்தார். இந்த விநாயகப் பெருமான் தற்போதும் வேத தீர்த்தக் கரையில் உள்ளார் ‘வேறு என்ன வேண்டும்’ என்று விநாயக பெருமான் மும்மலைகளை நோக்கி மீண்டும் கேட்க ‘எங்களுக்கு சக்தி அருள் வேண்டும்’ என்று கேட்டனர்.
உடனே ‘மும்மலைகளே! நீங்கள் முன்பு பெற்ற பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் திரண்டு இருள் போன்ற கரிய பெரிய யானை உருவமாக ஒரு மாதத்திற்குள் தோன்றும். அந்த நேரத்தில் நீங்கள் மூவரும் பராசக்தியை நோக்கி வணங்கினால் அன்னையின் ஆசியும், அருளும் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறி மறைந்தார்.
மும்மலைகளும் தொடர்ந்து சிறு பூஜை செய்து வந்தனர். ஒரு நாள், அவைகளின் பாவம் எல்லாம் திரண்டது. அது கரிய பெரிய மலை போன்ற பயங்கரமான யானை உருவத்தில் தோன்றியது. மலைகளுக்கு பயம் கொடுத்தது. ஐயோ, என்ன செய்வோம் என்று மலைகள் பயந்து நடுங்கின. இதற்கிடையில் விநாயகரின் அருள் வாக்கு மலைகளுக்கு நினைவுக்கு வந்தது. உடனே அன்னை பராசக்தியை வேண்டின.
பராசக்தி தோன்றினார். மலைகள் மூன்று அன்னையின் காலில் விழுந்து எங்களை பாவங்களில் இருந்து காக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். கரிய மிகப் பெரிய யானை உருவத்தில் இருந்த பாவங்கள் மும்மலை யைத் தாக்கும் முன்பே தேவி தனது பாச கயிற்றால் அதை கட்டினார். அதனால் பாவ யானையும் நின்றது. நிம்மதி பெருமூச்சு விட்டது மும்மலைகள். பாச கயிற்றால் யானையை பராசக்தி நிறுத்திய நாள் புரட்டாசி மாதம் நவராத்திரி முன்தினம் ஆகும்.
இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்பட்ட நாளில் இருந்து மும்மலைகள் அன்னையை தொழுது வர ஆரம்பித்தனர். இதற்கிடையில் தேவர்கள் 9 ராத்திரியும் சிவனையும் சக்தியையும் வணங்குவதைக் கண்ட மும்மலைகளும் அதன்படியே வணங்க ஆரம்பித்தது.
பாணதீர்த்தம்
இதனால் மனமுருகிய சக்தி வன்னிமரம் ஒன்றின் அடியில் தோன்றி தன் வாகனமாக சிம்மத்தையும், பாணமாகிய விஞ்ஞான பாணத்தையும் ஏவினதால் அந்த பாணம் பாவ யானையை அழித்தது. இதற்கிடையில் யானை மீது சிங்கம் பாய்ந்த இடம் சிங்க தீர்த்தம் என்றும் விஞ்ஞான பாணம் பாய்ந்த இடம் பாணதீர்த்தமாகவும் இப்போது அழைக்கப்படுகிறது.
சிங்க தீர்த்தம்
சிங்க தீர்த்தம் என்று கூறுகிறோமே அது தான் கல்யாண தீர்த்தம். முன்பு சிங்க தீர்த்தமாக இருந்த இடம் சிவன் சக்தி திருமண காட்சியை அகத்தியருக்கு காட்டிய காரணத்தால் கல்யாண தீர்த்தம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள பாறைகளில் சிவன் சக்தி திருமண காட்சி செதுக்கப்பட்டு இருப்பதை இப்போதும் காணலாம்.
அரசன்
மலைகள் தனது பாவங்கள் தீர்ந்த பின்பும் சக்தியை விட வில்லை. ‘அன்னையே நாங்கள் மனித உருபெற வேண்டும். மனித உருவில் சிவபெருமானை வழிபட வேண்டும். அதற்கு நீங்கள் அருளாசி வழங்க வேண்டும்’ என்று கேட்டனர். அன்னையும், நீங்கள் பாபநாசத்தில் தவம் புரிந்து கொண்டு இருங்கள். மாசி மாதம் சிவராத்திரி அன்று முக்காளநாதர் தோன்றி மும்மலைகளை சேர, சோழ, பாண்டியர் ஆக்கி அருள் செய்வார் என்று கூறி மறைந்தார். மும்மலைகளும் மீண்டும் தவத்தை தொடர்ந்தன. உறக்கம், உணவு இன்றி தவமிருந்தன.
மாசி மாதம்
சிவராத்திரி அன்று சிவபெருமான் கண்ணைப் பறிக்கும் ஒளியில் தோன்றினார். மும்மலைகளும் வணங்கி நின்றனர். அடிமுடி காண முடியாத உருவில் நின்ற சிவனை பார்த்து கண் கலங்கின மலைகள். உடனே சிவபெருமான் மும்மலைகளை சேர, சோழ, பாண்டியனாக ஆக்கினார். அதன்படி பொதிகை மலை பாண்டியனாகவும், சையை மலை சோழனாகவும், தருத்தர மலை சேரனாகவும் தோன்றியது.
பட்டாடை, பொன் அணிகள், செங்கோல், மணிமுடி, அரியாசனம் வெண்குடையுடன் சேர, சோழ, பாண்டியர்கள் அவரவர் நாடுக்கு கிளம்பினர். மும்மலைகள் சேர, சோழ, பாண்டியர்களாக தோன்றியதில் இருந்து மூவரும் சகோதரர்கள் என்ற கருத்தை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.