திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (37 of 53)
அகத்தியரால் தேவார திரட்டு உருவான கதை
தாமிரபரணி கரையில் அகத்தியர் மூலம் தேவார திரட்டு உருவாகியது. சிவாலய முனிவர் என்பவர் அடங்கன் முறை என்ற மூவர் தேவார பதிகங்களை 796-யையும் நாள் தோறும் ஓத வேண்டுமென்று நெடு நாள் தவம் இருந்தார். ஆனால் அது முடியாமலேயே போய்விட்டது.
உடனே அவர் தில்லை (சிதம்பரம்) சென்று அங்குள்ள தில்லையம்பல நடராஜரை நோக்கி தவம் இருந்தார் அவர் தவத்தினை ஏற்று நடராஜர் தோன்றினார். பின் அவர் ‘முனிவரே நீர் நேராக பொதிகை மலை செல்லும். அங்குள்ள அகத்திய முனிவரை அணுகும் உமது கருத்து முடிவுக்கு வரும்’ என்று அருளினார் உடனே சிவாலய முனிவர் பொதிகை மலை வந்தார். அங்கு 3 ஆண்டுகள் தவமிருந்தார். அவருடைய தவம் அகத்தியரின் மனதை உருக்கியது.
உடனே அகத்தியர் அவர் முன் தோன்றினார். பின் சிவாலய முனிவர் எதிர்பார்த்தது போல் அடங்கன் முறை முழுவதையும் பொருள் படக் கூறி அதை அருளினார். அவர் பாடிய 25 பதிகங்களில் திரட்டு எழுதப்பட்டது. இதுதான் சிவநேச செல்வர்கள் ஓதிவரும் அகத்தியர் தேவார திரட்டாகும். இது தோன்றியது பொதிகை மலை என்பது நாமெல்லாம் பெருமைபடக்கூடியது.
வரசித்தி பேச்சியம்மன்
அடுத்து பொதிகை மலையில் உள்ள ஒரு கோயில் பற்றிய விவரத்தினை பார்க்கலாம். இந்த கோயில் காரையார் மலைப்பகுதியில் படகு ஒட்டும் தொழிலாளிகள் வாழும் குடியிருப்பு பகுதியில் உள்ளது. இந்த கோவிலை வரசித்தி பேச்சியம்மன் கோவில என்றழைக்கிறார்கள். இக்கோவிலில் பேச்சியம்மன், பட்டவராயன், பொம்மக்கா, திம்மக்கா போன்ற தெய்வங்கள் உள்ளது.
இக்கோவிலுக்கு குழந்தை இல்லாதவர்கள் வந்து அம்மனை வணங்கி குழந்தை வரம் பெற்று செல்கின்றனர். நோய் தீரவும், பக்தர்கள் இங்கு வந்து அம்மனை வணங்குகின்றனர். இங்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
இந்த கோவில் பூசாரி காந்தி(1999) என்பவரிடம் இக்கோவில் பற்றி கேட்ட போது அவர் கூறியதாவது- உக்கிரன்கோட்டை அருகில் உள்ள அணைக்கரை என்னும் இடத்தில் இருந்து பிடிமண் எடுத்து கொண்டுவரப்பட்டது வரசித்தி பேச்சியம்மன். இப்பகுதியில் மேலணை உருவாக்கும் முன்பு இந்த கோயில் இந்த இடத்தில் இல்லை. அந்த நேரத்தில் இங்கு தோட்ட வேலைக்கு வந்தவர்கள் தான் இந்த அம்மனை பிரதிஷடை செய்தனர். தற்சமயம் மேலணை இருக்கும் இடத்தில் தான் இந்த கோயில் அந்தகாலத்தில் இருந்தது.
அதன் பின் மேலணை கட்டிய போது இந்த பேச்சியம்மனை தற்சமயம் உள்ள இடத்தில் பிரதிஷடை செய்துள்ளனர். இந்த கோயில் மின்சார வாரியத்தின் பராமரிப்பில் உள்ளது. இதே போல் ஒரு கோவில் ஆற்றுக்கு அந்தப்புரம் ஏர்மாள்புரம் என்னும் இடத்தில் உள்ளது. அதை நீலகண்ட வனபேச்சி என்று பெயரிட்டு வணங்கி வருகின்றனர். இந்த கோயிலில் வருடந்தோறும் புரட்டாசி மாதம் கொடைவிழா மிக விமரிசையாக நடந்து வருகிறது என்று கூறினார்.
தற்போது இந்த கோயில் (2009) கும்பாபிசேகம் செய்யப்பட்டு மிக பிரமாதமாக இருக்கிறது. இந்த கோயில் முன்னேற்றம் இந்த பகுதியில் உள்ள படகோட்டிகளுக்கும் முன்னேற்றம் என்கிறார்கள். இந்த கோயிலை தரித்தவுடன் நமக்கு இந்த பகுதியில் உள்ள சித்தர்கள் நினைவு வந்தது. இவர்களை பற்றி பல நூல்கள் நான் எழுதி இருப்பதால் இந்த இடத்தில் அவர்களை பற்றி ஒருசில விவரத்தினை மட்டும் கூறுகிறேன்.
பெரும்பாலுமே தெய்வங்களை கும்பிடும் முறை வேறு வேறாக இருந்தாலும் அதன் முடிவும் நிலையும் ஒன்றாக உள்ளது. குறிப்பாக சித்தர்கள் பலர் பொதிகை மலையில் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் உண்ணாமல் காற்றை மட்டுமே அருந்தி வாழ்வதாகவும் கூறுகிறார்கள் இந்த கூற்றுக்கு சான்று உள்ளது என்கிறார்சேலம் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் விஜயகுமார்.
இவரை நான் பொதிகை மலையில் கல்யாண தீர்த்தம் அருகில் உள்ள கோடி லிங்கேஸ்வரர் லோகாயகி அகஸ்தியர் கோவிலில் தியானம் செய்து வரும் போது பார்த்தேன். அவர் சித்தர்களிடம் பேசவும் முடியும் என்கிறார். அவர் பேசும் போது கடவுள் ஒளி வடிவமான உருவம் என்று சித்தர்கள் கூறுகின்றனர். சித்தர் உலகத்தில் மதம் என்று எதுவுமே கிடையாது. என்றும் கூறுகிறார். இனி நமது பொதிகை மலையை பற்றிய சில நூல் தொகுப்புகள் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
வரலாறு
1947-ல் நமது நாடு சுதந்திரம் அடைந்தது. அப்போது தான் பாபநாசம் மேலணை கட்டி முடிக்கப்பட்டிருந்தது. 1948 டிசம்பர் மாதம் சென்னை பட்டணம் அறநிலைய பாதுகாவல் கழக தலைவராக இருந்த சின்னையா பிள்ளை என்பவர் முயற்சியால் திருநெல்வேலி ஜில்லா கோவில் வரலாறு என்ற நூல் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நூல் 23-07-1949 அன்று வெளியிடப்பட்டது. அந்த நூலில் பல அரிய தகவல்கள் சொல்லப்பட்டு இருந்தன. அந்த தகவல்கள் நாம் இது வரை சொன்னதை விட வித்தியசமானதாக இருந்தது.
அதில் உள்ள ஒரு சில தகவல்கள்:
இமயமலை
உலகத்திலேயே முதன்மை பெற்று விளங்குவது நமது இந்திய நாட்டு மலைகளே. குறிப்பாக கங்கை, சிந்து போன்ற பெரிய ஆறுகளின் பிறப்பிடம் இமயமலை தான். இங்குள்ள மிகப்பெரிய சிகரம் சிரபுஞ்சி என்பதும் எல்லோருக்கும் தெரியும். அதாவது இமயம் என்பது பனி. பனி என்றால் நடுங்கச் செய்வது என்று பொருள். நடுங்கச் செய்யும் பனி முதிர்ந்த நிலையை அடையும் போது கண் இமையாது நிற்போம்.அதனால் தான் இமயம் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இமை - இமைப்பு இரண்டுமே ஒரு பொருள் தரும் சொல். இமைப்பு என்பது ஒரு பேரொளி.
காலை கதிரவன் கதிர் பட்டவுடன் இமயமலை பேரொளி பட்டு மின்னுகிறது. எனவே இமயம் என்னும் மலைக்க வைக்கும் மலை இமயமலை என்று இமயமலைக்கு பெயர் வந்தது. இந்த இமயமலை விசேஷமான மலையாக இருந்தாலும் கூட அங்குள்ள கல்களை ஆராய்ச்சி செய்யும் போது அறிஞர்கள் பல நுர்ற்றாண்டுகளுக்கு முன் இமயமலை கடலுக்குள் மூழ்கி இருந்தது. ஒரு பெரிய கடல் கோள் வந்த பின்னர் தான் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது என்று கடல்வாழ் உயிரினங்களின் உடல்களை காட்டி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த இமயமலைக்கெல்லாம் மேலாக உலகத்திலேயே முதலில் தோன்றியது எந்த மலை என்று அந்த ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டால் அவர்கள் கூறுவது உலகத்திலேயே மிக முதிர்ந்த மலை பொதிகை மலையே என்று கூறியுள்ளனர். தமிழகத்திலேயே பரப்பில் பாதி பொதிகை மலை (மேற்கு தொடர்ச்சி மலை) தான். இங்குதான் முதல் உயிரும் தோன்றியுள்ளது. இவ்வளவு அற்புதம் வாய்ந்த ஆற்றில் சேரும் நதிகளில் ஒன்று காரையார் ஆகும்.