திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (39 of 53)
வான தீர்த்தம் பாண தீர்த்தமான கதை
பாணதீர்த்தம் என்பது சரியான பெயரல்ல. வானதீர்த்தம் என்பது தான் சரியான பெயர் என்று நெல்லை ஜில்லா கோவில் வரலாறு கூறுகிறது. அதற்கு காரணம், மும்மலைகளின் பாவம் ஒன்று திரண்டு அது பெரிய கரிய உருவம் கொண்டு தாக்க வந்த போது அம்பிகை தனது கையில் உள்ள விஞ்ஞான பானத்தை ஏவி கரிய உருவம் கொண்ட பாவங்களை வதம் செய்த இடம் தான் பாணதீர்த்தம் என்று நாம் கூறினோம் தற்சமயம் அதற்கு ஈடான அதே நேரம் ஒத்து கொள்ள கூடிய மாற்று கருத்துடன் பாணதீர்த்தம் 50 வருடங்களுக்கு முன் வான தீர்த்தம் என அழைக்கப்பட்டு இருக்கிறது.
அகத்தியர் மொட்டை
இதில் தாமிரபரணி உருவாகும் இடத்தை ஆசிரியர் அகத்தியர் மொட்டை என்று அழைத்துள்ளார். இந்த அகத்தியர் மொட்டையில் சுமார் 6132 அடி உயரத்தில் இருந்து தாமிரபரணி தோன்றி கீழே ஓடி வருகிறது. இது தோன்றும் இடங்கள் சதுப்பு நிலம் என்பதால் தாமிரபரணி தோன்றும் இடம் மட்டுமல்லாமல் பல இடங்களில் ஊற்று ஊறி கொண்டே இருக்கிறது. சிறிது தூரம் ஓடி அது கன்னிகட்டி என்ற இடத்தில் விழுகிறது.
இங்கு இப்போது வழிப்போக்கர்கள் தங்கும் விதமாகவும், அவர்கள் விலங்குகளிடம் இருந்து தப்பிக்கும் வகையாகவும் ...கண்ணாடி பங்களா ஒன்று உள்ளது. அந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி தான் பொருநை வான தீர்த்தமாக விழுகிறது. வானத்திலிருந்து விழுவது போல் மிக உயரத்தில் இருந்து விழுவதனாலே வானதீர்த்தம் என்று பெயர் பெற்றுள்ளது என்றும் அவர் கூறுகின்றனர். தீர்த்தம் என்பதை பற்றி நாம் பலமுறை கூறியிருந்தாலும் தீர்த்தம் என்பதற்கு ஒரு தெளிவான அர்த்தத்தை நெல்லை ஜில்லா கோவில் வரலாறு ஆசிரியர் தெளிவாக கூறியுள்ளார்.
அது நூலகர் ஆவுடையப்பனின் கருத்துக்கு ஒத்த கருத்தாகவே உள்ளது. அதாவது, உடலை பற்றிய அழுக்கை தீர்த்து வைப்பது போல் உயிரை பற்றிய பாவங்களை தீர்த்து வைப்பது தீர்த்தமாகும். இத்தீர்த்தம் பொருநை நதியில் நூற்றுக்கணக்காக உள்ளது என்பது இம்மண்ணில் பிறந்த நம்மை பெருமைப்பட வைக்கிறது.
ஆடிமாதம்
ஆடிமாதம் அமாவாசை அன்று சொரிமுத்து அய்யனார் கோவிலில் இருந்து இங்கு 14 கி.மீட்டர் சாலையில் வாகனம் மூலம் வந்து வானதீர்த்தம் அருகில் உள்ள காட்டு பங்களாவில் தங்கி பிதுர் கடன் கழிக்கும் பக்தர்கள் ஏராளமான பேர் உள்ளனர். குறிப்பாக தன் மூதாதையர்கள் எப்போது இறந்தார்கள். அவர்களுக்கு திதி கொடுக்கவில்லையே என்று நினைத்து மனது உருக்குலைந்து இருக்கும் சந்ததியினர் இந்த ஆடி அமாவாசை அன்று இங்கு வந்து பிதுர் கடன் கழித்து செல்கின்றனர்.
நீலகண்டன் கசம்
இந்த ஆடி அமாவாசையில் பாணதீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும் என்பது ஐதீகம் . இதனால் இங்கு பக்தர்கள் சாரல் மழை கொட்டும் போதும், மார்பு முழுவதும் நனைந்து வாடையில் ஆடிக்கொண்டே பல மலைகளை தாண்டி வானதீர்த்தம் வந்து நீராடி நன்மை பெறுகின்றனர். இந்த தீர்த்தத்தில் தான் இராமன் தனது தந்தை தசரதனுக்கு திதி செய்தார். வானதீர்த்தம் கீழே விழும் இடம் மேலணை. இந்த அணைப்பகுதியில் காரையாறுக்கும், சேர்வலாறுக்கும் இடையே டனால் என்னும் இணைப்பு பகுதி இருக்கிறது என்று ஏற்கனவே கூறினோம்.
இந்த இடத்தில் இருந்த மலைக்கு பெயர் கட்டளை மலை. இந்த கட்டளை மலை பகுதி விளையும் பொருள்களின் வருமானம் கொண்டு தான் பாபநாசம் சிவன் கோவில் பூஜைக்கு பயன்படுத்தி வந்தனர். இதனால் தான் இதற்கு கட்டளை மலை என்று பெயர் வந்தது. இந்த கட்டளை மலையில் தான் காரையாறும் தாமிரபரணி ஆறும் ஒன்றாக கலக்கிறது. இங்கு மேலணை கட்டப்படுவதற்கு முன் கட்டளை மலை தோப்பில் விளையும் பழ வகைகளை சுவைத்துக் கொண்டே பாணதீர்த்தம் நோக்கி பார்த்தால் அதனால் கிடைக்கும் ஆனந்தமே தனி தான்.
அந்த ஆனந்தம் போல் தற்போது படகில் சென்று கொண்டே பாணதீர்த்தினை பார்த்து நாம் ஆனந்தப்படுகிறோம். காரையாறும், தாமிரபரணியும் இணையும் இடத்தில் மிகப் பெரிய கசம் ஒன்று உள்ளது. இந்த கசத்துக்கு நீலகண்ட கசம் என்று பெயர். தற்சமயம் இந்த நீலகண்ட கசம் எல்லாம் மேலணைக்குள் மூழ்கி விட்டது. இந்த மேலணைக்குள் பல தோட்டமும் ஒரு பள்ளிகூடமும் மூழ்கி விட்டது.