திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (43 of 53)
பரவசப்படுத்தும் பட்டவராயன் கதை
செருப்பு தைக்கும் தொழில் செய்யும் சக்கிலியர் வம்சத்தைச் சேர்ந்தவர் வாலப்பகடை. இவர் தனது மனைவியுடன் பொதிகை மலையில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் மாடு மேய்ப்பது, செருப்பு தைப்பது போன்ற தொழிலை செய்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி நீண்ட நாள்களாக குழந்தை இல்லை. என்ன செய்வது என்று தவித்த அந்த தம்பதிகள் வனபேச்சியம்மனை வணங்கி கண் கலங்கி நின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல் ஒளவையார் விரதம் இருந்து தங்களுக்கு குழந்தை வேண்டும் என வாலப்பகடை மனைவி விரதம் இருந்தார். அப்போது தினை மாவு, மஞ்சள் மூலம் தயார் செய்யப்பட்ட பண்டங்களை எடுத்து சாப்பிட்டாள். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தாள்.
பொம்மக்கா, திம்மக்கா
இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தது. அந்த குழந்தைகளுக்கு ‘பொம்மக்கா- திம்மக்கா’ என்று பெயரிட்டனர். மிகவும் கனிவுடன் அந்த இரு பெண் குழந்தைகளையும் பாலூட்டி, சீராட்டி வளர்த்து வந்தனர். நாளடைவில் அந்த இரு பெண்களும் பருவம் அடைந்தனர். பருவ மடைந்த பெண்கள் சூரியனை போல அழகாக இருந்தனர். ஆகவே மாடு மேய்க்க செல்லும் பகடைக்கு தங்களது மகளை வீட்டில் விட்டு விட்டு போகவும் பயம்.
அதே நேரம் தொழிலுக்கு செல்லாமலும் இருக்க இயலவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். எனவே பெண்கள் இருவரையும் கரி தடவி அவர்களை கருப்பாக மாற்றினர். பின் அவர்களை வீட்டில் வைத்து விட்டு, காவலுக்கு காச்சி நாய், பூச்சி நாய் என்ற இரு நாய்களை வைத்து விட்டு மாடு மேய்க்க சென்றனர்.
ஆரியர்
அந்த நேரத்தில் பொதிகை மலைக்கு ஒரு வியாபார கூட்டம் வந்தது. அதில் பட்டவராயனும் இருந்தார். பட்டவராயன் என்பவர் பிராமண குலத்தில் பிறந்தவர். முத்து, வைடூரியம் வியாபாரி. இவர் தனது தாய், சகோதரர்களுடன் வாழ்ந்து வந்தார். தற்போது வியாபாரம் செய்ய சகோதர்களுடன் வந்துள்ளார். பட்டன்தான் அந்த குடும்பத்தில் இளைய பிள்ளை. பார்க்க மிகவும் அழகாக இருப்பார். பட்டவராயன் தன் தாயிடம், "தாயே நான்.. முத்து வியாபாரத்துக்கு செல்கிறேன" என்று கூறியவுடன் பட்டனின் தாயார் முதலில் "வேண்டாம்" என்று மறைத்தார். "மகனே! பட்டா ... கேரள வியாபாரம் நமக்கு வேண்டாம். அது எனக்கு பிடிக்கவில்லை||. என்று கூறினார்.
ஆனால் பட்டன் கேட்கவில்லை. ‘அம்மா நமது வியாபாரம் சிறப்பாக நடக்க வேண்டுமென்றால் நான் போய்தான் தீர வேண்டும். ஆகவே என்னை தடுக்காதீர்கள்’. என்று கூறி அவர் தாயிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு தனது சகோதரர்களுடன் கேரளா நோக்கி கிளம்பினார். கண்ணீர் மல்க தாயாரும் விடை கொடுத்தார்.
பொதிகை மலை
கேரளாவிற்கு பொதிகை மலை வழியாக பட்டவராயன் தனது சகோதரர்களுடன் சென்று கொண்டு இருக்கும் போது அனைவருக்கும் தண்ணீர் தாகம் எடுத்தது. உடனே என்ன செய்வது என்று தவித்து நீர் சுனைகளை தேடினார்கள். எதுவும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு தூரத்திலே தெரிந்த குடிசை கண்ணில் பட்டது. உடனே அந்த இடத்துக்கு சென்றனர். அங்கு தனது தாய் தந்தையர்கள் மாடு மேய்க்க சென்றவுடன் பொம்மக்கா, திம்மக்கா ஆகிய இருவர் மட்டும் இருந்தனர். பட்டவராயன் தனது சகோதரர்களுடன் அவர்களிடம் சென்று குடிக்க தண்ணீர் கேட்டார். கரிய உருவத்துடன் இருந்த சகோதரிகளைப் பார்த்து சகோதரர்கள் முகம் சுளித்தனர். ஏதோ தாகத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது.
எனவே தண்ணீரை கழிக்க கூடாது என்று தண்ணீரை மட்டும் குடித்து விட்டு திரும்பி வந்து விட்டனர். கடைசியில் தண்ணீர் குடிக்க சென்றார் பட்டன். அவர் அந்த பெண்களிடம் தண்ணீர் வாங்கும் போது ஒரு சொட்டு தண்ணீர் பொம்மக்கா மற்றும் திம்மக்கா கைகளில் விழுந்தது. மறு நிமிடம் அந்த கை மின்னல் போல் ஜொலித்தது. "ஆகா.. கையே இந்த அளவுக்கு அழகாக இருந்தால்.... இந்த பெண் எவ்வளவு அழகாக இருப்பாள்" என்று நினைத்தார். உடனே அங்கேயே தங்கி அந்த இரு பெண்களும் எப்படி இருப்பார்கள் என்று பார்த்து விடுவது என்று முடிவு செய்தார்.
செருப்பு தைத்தார்
சகோதரர்கள் எவ்வளவோ எடுத்து கூறியும் பட்டவராயன் கேட்பதாக இல்லை. தாயிடம் எப்படி பிடிவாதம் பிடித்து வியாபாரம் செய்ய வந்தாரோ, அதே போல சகோதரர்களிடம் பிடிவாதம் பிடித்து அங்கேயே தங்கி விட்டார். பிடிவாதம் பிடித்த பட்டனை சகோதரர்கள் விட்டு விட்டு சென்றுவிட்டனர். அதன் பின் அந்த இரு பெண்களிடமும் சென்று விசாரித்தார்.
உண்மை தெரிந்தது அவர்கள் இருவரின் அழகை கண்டார். உடனே அவர்கள் இருவரையும் மணமுடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அந்த இரு பெண்களும் இது பற்றி எங்களது தாய்தந்தையரிடமே கேளுங்கள் என்று கூறிவிட்டனர். ஆகவே அவர்கள் இருவர் வரும் வரை காத்து இருந்தார் பட்டவராயன். மாலையில் பொம்மக்கா - திம்மக்காவின் தாயும் தந்தையும் மாடு மேய்த்து விட்டு வந்தனர். பட்டன் அவர்களிடம் சென்று பொம்மக்கா - திம்மக்காவை தனக்கு மணமுடித்து தரும்படி கேட்டார்.
உடனே அவர் ‘சாமி நீர் பூணூல் போட்டு இருக்கீங்க. நீங்க பிரமாணர். அது மட்டுமா? உங்க கோத்திரம் வேற. எங்க கோத்திரம் வேற. நீங்க மாமிசம் சாப்பிட மாட்டீங்க. நாங்க மாமிசம் சாப்பிடுவோம். நீங்க கோவிலுக்கு பூஜை செய்யரவங்க. நாங்க மாடு மேய்க்கறவங்க. அதனால் உங்களுக்கும் எங்களுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது| என்று கூறினார். ஆனால் பட்டவராயன் கேட்கவில்லை. "அதுசரி.... நான் உங்க பெண்ணை கட்ட தயராக உள்ளேன். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்|| என்று கூறினார்.
வாலை பகடை, " அப்போ நீங்க பூணூலை கழற்றி எரியணும். மாடு மேய்க்கணும். செருப்பு தைக்கணும். அப்போது தான் என பொண்ணுங்களை உங்களுக்கு மணமுடித்து தருவேன்" என்றார் பகடை. இதைக் கேட்டவுடன் பட்டன் தனது பூணூலை கழற்றி எறிந்து விட்டு வெற்று மார்புடன் மாடு மேய்க்கவும், செருப்பு தைக்கவும் தயாராக ஆனார். அவரை கண்டு பகடை அதிர்ந்து போய் விட்டார்.
திருமணம் முடிந்தது
அவர்கள் இட்ட கட்டளையின் படி செருப்பு தைக்கவும் தொடங்கினார். மாடு மேய்க்கவும் சென்றார். கொஞ்ச காலத்தில் முழுக்க முழுக்க பிராமணராக இருந்த அவர் செருப்பு தைக்கும் தொழிலாளியானார். அதை கண்டு மனம் குளிர்ந்து போன வாலை பகடை தன் மகள்களான பொம்மக்கா - திம்மக்காவை அவருக்கே திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களின் வாழ்க்கை மிகவும் சந்தோசமாக சென்றது.
ஆரம்ப காலம்
இவர்களின் வாழ்க்கையில் வசந்த காலமாக இருந்தது. ஆனால் சில காலம் கழித்து பிரச்சனை ஏற்பட ஆரம்பித்தது. பொம்மக்கா - திம்மக்காவின் தாய் தந்தையருக்கு வயதாகவே முத்து பட்டனுக்கு மாட்டு மந்தை, செருப்பு தைக்கும் தொழில் முழுவதும் ஒப்படைக்கப்பட்டது. அவரும் அதை திறன்பட செய்து கொண்டிருந்தார். இவருக்கு காச்சி நாய், பூச்சி நாய் உதவியாக இருந்தது. காலங்கள் கடந்தது. சில காலங்களில் பகடையும் அவர் மனைவியும் இறந்து விட்டனர். அதன் பின் முத்து பட்டருக்கு வேலை அதிகரித்தது.
திருடர்கள்
காலங்கள் கடந்தது. ஒரு நாள் திருடர்கள் சுமார் 100 பேர் முத்துபட்டன் மந்தையை திருடிக் கொண்டு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் காட்டுக்குள் வந்தனர். அப்போது தான் மந்தை காவலை முடித்து விட்டு வீட்டுக்கு கிளம்பினார் பட்டர். தனது காச்சி நாய், பூச்சி நாயை மந்தைக்கு காவலாய் வைத்து விட்டு வீட்டுக்கு முத்துபட்டன் கிளம்பினார். வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு, பொம்மக்கா திம்மக்காவிடம் ஆனந்தமாக பேசிவிட்டு வீட்டு வாசலில் தலை வைத்து படுத்தார். அவருக்கு தூக்கம் கண்ணை கட்டிக்கொண்டு வந்தது. மெதுவாக கண்அயர்ந்தார். அப்போது தான் அந்த சத்தம் கேட்டது.
மாடுகள் களைவது போலவும், தனது இருநாய்கள் குழைப்பது போலவும் சத்தம் கேட்டது. திருடர்கள் வந்து மந்தையை களவாடுகிறார்கள் என்று முத்து பட்டனுக்கு புரிந்துவிட்டது. உடனே முத்துபட்டன் தனது ஆயுதத்துடன் மந்தைக்கு ஓடிச் சென்றார். அங்கே 100 கள்வர்களை பார்த்தார். அவர்கள் வேல், கத்தி மற்றும் ஆயுதங்களுடன் முத்துபட்டன் மீது மோதினர். ஆனால் பட்டன் அவர்களை விட வில்லை. அவர்களோடு போரிட்டு விரட்டினான். அனைவரும் ஓடி ஒளிந்தனர்.