திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (46 of 53)
நேரு உருவாக்கிய ஏவுகணை
ஒரு சமயம் இந்தியா மீது குண்டு போட அயல்நாட்டவர்கள் முயற்சி செய்தார்கள். அப்போது சுதந்திரம் வாங்கிய புதிது. எனவே இந்தியாவிடம் போதிய ஆயுத பலம் கிடையாது. ஆகவே இந்தியவை சுலபமாக வென்று விடலாம் என்று எதிர் நாட்டார் திட்டம் தீட்டினார்களாம்.
அதை கேள்விப்பட்ட நமது பிரதமர் நேரு எதிர் சவாலாக பத்திரிகையில் செய்தி வெளியிட்டாராம். இந்தியா மீது குண்டு போட அயல்நாட்டவர்கள் முயற்சி செய்தால் எங்கள் இந்தியாவின் தென்பகுதியில் நாங்கள் புதிதாக ஏவுகணை தயாரித்து விண்ணை நோக்கி செலுத்த தயாராக வைத்துள்ளோம். அந்த ஏவுகணை எதிரி விமானம் எங்கள் நாட்டுக்குள் புகுந்த உடனேயே அவர்களை வீழ்ந்துவிடும் என்று சவாலாக கூறியிருந்தாராம்.
அதன் பிறகு தாமிரபரணி படுகையில் உள்ள பனை மரங்களில் எல்லாம், குருத்தை மட்டும் மேல் நோக்கி விட்டு விட்டு மீதி ஓலைகளை எல்லாம் வெட்டி விட்டார்கள். இதனால் மேலி ருந்து பார்க்கும் போது பனைமரங்கள் பெரிய ஏவுகணைகள் போன்று தோன்றியது. இதை வேவு பார்த்த அயல்நாட்டவர்கள் தங்கள் வாலை சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டனர். இது போன்ற கதைகளை நான் தாமிரபரணி கரையில் பெரியவர்கள் சொல்ல நான் கேட்டு இருக்கிறேன். அந்த அளவிற்கு தாமிரபரணி ஆற்றில் பனை மரங்கள் அயல் நாட்டவர்களை கூட கதிகலங்க செய்து விடும்.
ஆனால் தற்சமயம் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள பனைமரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கில் இருந்த பனை மரங்கள் எல்லாம் லட்சமாக குறைந்து வருகிறது. தற்போது இந்த நூல் வெளியிடும் போது அதன் எண்ணிக்கை மிக மிக குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சில இடங்களில் சேம்பர் சூளைக்கு மண் அள்ளும் போது பனை மரங்களை வெட்டி விட்டு தேவையானவற்றை எடுத்துவிட்டு மீதியை சூளையில் போட்டு எரித்து விட்டனர்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த பனை மரத்தில் பதநீPர் கொட்டுவது விசேஷமானது. ஒரு மரத்தில் ஒரு டின், 2 டின் (தவரம்) என்று பதநீPர் இறக்குவதை சிறு வயதிலேயே நானே பார்த்துள்ளேன். தற்சமயம் பதநீர் இறக்க பனையேறுபவர்கள் இல்லாமல் இருப்பதையும், பனைமரங்கள் அழிக்கப்படுவதையும் ஜீரணிக்க முடியவில்லை. இந்த பனை மரங்கள் குறித்து பாளையங்கோட்டையை சேர்ந்த எழுத்தாளர் ஆர்.எஸ். ஜேக்கப் என்பவர் பனையண்ணன் என்ற ஒரு நூலை 7.11.2009 ல் பேராயர் நீல் ஸ்டிபன் கலையரங்கில் வைத்து வெளியிட்டார்.
இதில் திருவாளர் நல்லகண்ணு மற்றும் ஆய்வாளர் நெல்லை நெடுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நாவலில் அவர் பனைமரம் ஓங்கி வளர்ந்து இருந்த கதையையும், அந்த பனை தொழில் நசிந்து போவதை மிக அழகாக எழுதியுள்ளார். பழம்பெரும் எழுத்தாளரான அவரது ஏக்கம் தான் தற்போது தாமிரபரணி கரையில் மட்டுமல்லாமல் அனைத்து பகுதியிலும் பனை மரத்தினை பற்றி தாக்கம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. வரும் காலத்தில் அருங்காட்சியகத்தில் இது தான் பனை மரம் என்று காட்ட வேண்டிய காலம் வந்து விடுமோ என பயமாக உள்ளது.
உலக ரட்சகர் ஆலயம்:
பொதிகை மலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் பல உள்ளன. ஏற்கனவே அணையின் உள்ளே இருந்த ஆலயங்கள் பள்ளி கட்டிடம் நீருக்குள் மூழ்கி இருந்தது. இது கடந்த 2003ம் ஆண்டு தண்ணீர் வற்றியபோது வெளியே தெரிந்தது. இதை அப்போது அனைத்து தினசரி நாளிதழிலும் வெளியிட்டு இருந்தார்கள். அதே போல் லோயர் கேம்ப்பில் வனபேச்சியம்மன் ஆலயத்தின் அருகில் உள்ள உலக ரட்சகர் ஆலயம் உள்ளது.இந்த ஆலயம் பொதிகை மலையடிவாரத்தில் செக்க செவேல் என்று காட்சியளிக்கிறது.
அற்புதமான இந்த கிறிஸ்தவ ஆலயத்தில் உள்ள மாதா கெவியையும், மலைப் பாறையை தொட்டுள்ள மற்றொரு கெவியும் பார்ப்போர் மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு பிரமாதமாக உள்ளது. இந்த ஆலயத்தில் ரம்மியமான தென்றல் வீச மாதா, ஏசு நாதரை வணங்கினால் மன அமைதி கிடைக்கிறது . இந்த ஆலயம் இருதய குளம் பங்குக்கு உள்பட்ட ஆலயம். இந்த ஆலயத்தில் தினமும் ஆராதனை நடக்கவில்லை.(2003) ஆனால் வருங்காலத்தில் ஆராதனை நடக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.