திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (51 of 53)
மலைமீதுள்ள சுனையில் உருவாகிய முருகன்கோவில்
புலவன்பட்டி கிராமத்திற்கு கம்பீர தோற்றம் தருவதே ஒரு மலைக் குன்றுதான். இந்த மலைக் குன்றில் நின்று கீழ்ப் பகுதியில் பார்த்தால் மணிமுத்தாறு அணை நமக்கு தெரியும். தென்பகுதியில் அழகான தோற்றத்துடன் கிராமங்கள்காட்சியளிக்கிறது. அருகில் மலை அடிவாரத்தில் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம் மிகவும் பழமை வாய்ந்ததாக தோன்றுகிறது. இதில் மலை மீதுள்ள சுனையில் உருவாகிய முருகன் கோயில் குறித்து புலவன்பட்டி ஆறுமுக நாடார் கூறியதாவது.
ஸ்ரீகுமார சுப்பிரமணிய சுவாமி கோவில் சுமார் 50 வருடங்களுக்கு முன் இந்த இடத்தில் கிடையாது. இங்கு குன்றின் மீது பாறையின் நடுவே ஒரு நீர் சுனை மட்டுமே இருந்தது. இந்த சுனையில் சிறுவர்கள் விளையாடுவது, குளிப்பது என்றுதான் இருந்தார்கள். இந்த குமரனுக்கு முன் இங்கு முதல் கடவுள் விநாயகர்தான் தோன்றினார். அந்த விநாயகர் கிடைத்த கதை மிகவும் சுவையானது.
இப்பகுதியில் வசித்த அருணாசல நாடார் என்பவர் கனவில் விநாயகர் தோன்றி, "குன்றின் மேல் உள்ள சுனையை தோண்டி உள்ளே நீண்ட காலமாக இருக்கும் என்னை எடுத்து வணங்கு" என்று கூறி மறைந்து விட்டாராம். உடனே தள்ளாத வயதில் இருந்த அருணாச்சல நாடார் சுனையை தோண்டி தூர் வாரினார். அப்போது கனவில் குறிப்பிட்டபடி விநாயகர் சிலை கிடைத்தது. அந்த விநாயகரை சுனைக்கு கீழ்ப்பக்கம் வைத்து கும்பிடடார். இவர்களுடன் ராமசாமி என்ற தோல் போத்தி, சங்கரநாராயணர், வெயிலு முத்தன்பட்டி ஆண்டபெருமாள், மாடசாமி உட்பட பலரும் சேர்ந்து கொண்டனர்.
இப்பகுதியில் உள்ள கிராமங்கள் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமானது. ஆகவே இங்குள்ள வீடுகளுக்கு பட்டா வரி எதுவும் கிடையாது. இந்தக் குன்றும் திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தம். இதற்கிடையில் இந்த சுனை அருகே திருவாவடுதுறை சார்பில் முருகன் கோவில் கட்டப்பட்டது. அதன் பிறகு இந்தக் கோவிலில் திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடக்க ஆரம்பித்தது.
இந்த கோயிலில் மாசித் திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. இதே போல் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது. கோவிலுக்கு ஏறி செல்ல மெயின் ரோட்டில் இருந்து அழகான படிக்கட்டு அமைக்கப்பட்டது. அதன் மேல் பாதை பரப்பில் மிகவும் நேர்த்தியான முருகன் கோவில உள்ளது. இந்த கோயிலில் வேல்படம் வரையப்பட்ட கல்வெட்டு சுவர் சுனையின் அருகே உள்ளது.
அதனருகே ஒரு ஆலமரம். அந்த ஆலமரத்தின் வேர் சுனையில் தண்ணீருக்குள் நீட்டிக் கொண்டிருக்கும் அற்புத காட்சி. இதில் விசேஷம் என்னவென்றால் இந்த ஆலமரத்தின் வேர் தண்ணீருக்குள் இருப்பது யானை தன் துதிக்கையால் தண்ணீர் குடிப்பது போல் இருக்கிறது. இந்தக் கோவிலில் குன்றுக்கு மறுபுறம் உள்ள பாறை உடைக்கப்பட்டு வேலி கற்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பாறையை பொறுத்த வரை சைஸ் கல், வேலிகற்கள், கல்தூண்கள் செய்ய நல்ல பாறை இந்தக் குன்றில் உள்ளதால் இப்பணி நடைபெற்று வருகிறது.
புலவன்பட்டியில் 3 இடத்தில் ஐயா வழி சாமி கோவில் உள்ளது. ஐயா வைகுண்டரின் தொண்டர்கள் புலவன்பட்டியில் மிக அதிகமாக உள்ளனர். மாசி, ஆவணி, பங்குனி ஆகிய மாதங்களில் 11 நாள் இந்த கோயில்களில் திருவிழா நடைபெறும். இதில் 8-வது நாள் கருடவாகனத்தில்; ஐயா எழுந்தருளியும், 10-வது நாள் நாகவாகனத்தில் எழுந்தருளியும் பக்தர்களுக்கு அருட்காட்சி அளிப்பார்கள். இங்கு நாராயணசாமி பக்தர்கள் அருள்வாக்கு கூறுவது மிகவும் விசேஷமானது.
இப்பகுதியில் வேட்டையாடும் தொழில், விறகு வெட்டும் தொழில் எல்லாம் முன்பு நடைபெற்று வந்ததாம். தற்சமயம் அரசு சட்ட திட்டங் களை கடுமையாக்கியது. ஆகவே இப்பகுதி மக்கள் அந்த இரண்டு தொழிலையும் விட்டு விட்டனர். தற்சமயம் மில் தொழில், மேன் பவர் குறைந்ததால் தொழிலாளர்கள் அங்கும் குறைந்து விட்டனர். ஆகவே இங்கு விவசாய கூலிகளே மிக அதிகமாக உள்ளனர்.
இவர்கள் அனைவருமே விவசாயத்தினை நம்பியே உள்ளனர். இவர்களின் மற்றொரு முக்கிய தொழில் மீன் பிடித்தல். வலை போட்டு மீன் பிடிப்பது குறைந்து தற்சமயம் துhண்டில் போட்டு மீன் பிடிப்பது வழக்கமாக உள்ளது.