திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (53 of 53)
குதிரையில் வந்து வேதபாடம் சொல்லிக் கொடுத்த ரேணியஸ் ஐயர்
சுமார் 200 வருடங்களுக்கு முன்பு கிறிஸ்துவ மதத்தில் ஈடுபாடு இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மிக மிக குறைவாக இருந்தது. இந்த நேரத்தில் தான் வெளிநாட்டில் இருந்து வந்த பிரசங்கிகளின் பார்வை இந்த பகுதியில் உள்ள மக்கள் மீது பட்டது. எனவே அவர்கள் இங்கேயே தங்கியிருந்து கிறிஸ்தவ மதத்தை பரப்பி வந்தனர்.
அப்போது இப்பகுதியில் ரேணியஸ் என்னும் பிரசங்கியார் வாழ்ந்து வந்தார். அவர் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ மதத்தை இப்பகுதியில் பரப்ப மிக உதவியாக இருந்தார். இவர் குதிரையில் வந்து வி.கே.புரம் சேர்வலாறு மற்றும் கருத்த பிள்ளையூர் ஆகிய பகுதியில் பிரசங்கம் செய்தார். முதலில் அவர் பிரசங்கம் சிறுசிறு கோவில்களை கட்டி துவங்கியது. அவரின் பிரசங்கம் ஏழை மக்களின் மனதில் ஆணி அடித்தாற் போல் பதிந்தது. அதனை அடிப்படையாக கொண்டு வி.கே.புரம் பரி.பேதுரு ஆலயம், கருத்த பிள்ளையூர் பரி.தோமா ஆலயம, லோயர் டேம் கிறிஸ்தவ ஆலயம், சேர்வலாறு மறுரூப ஆலயம் ஆகியவை உருவாயின.
பொதிகை மலை சாரலில் இயற்கை எழில் கொஞ்சும் ஊராம் சேர்வலாறு. இப்பகுதியில் இருந்த ஜனங்கள் இயேசுவாகிய வெளிச்சத்தை பெற்று கொள்ள நினைத்தனர். அவர்களால் ஓங்கி உயர்ந்த இடத்தில், 6-3-1983- ம் ஆண்டு கட்டப்பட்டது தான் ஒரு கிறிஸ்துவ ஆலயம். இதை சேர்வலாறு இரு நுhற்றாண்டு நினைவு மறுரூப ஆலயம் என்று பெயரிட்டு அழைத்தனர்.
இது தேவனுடைய வீடே அல்லாமல் வேறல்ல. இங்கு வந்து உபவாசத்தோடு ஜெபித்து செல்கின்ற மக்களின் ஜெபம் கேட்கப்படும் எனபது ஐதீகம். இங்கு பல கிராமங்களிலிருந்து மக்கள் தியானக் கூட்டம் நடத்த வருகின்றனர்.
லோயர் டேம் முழுவதும் மின்சார வாரிய பணியாளர்கள் குடியிருப்பு பகுதியாகும். 1969-ம் ஆண்டு இங்கு சுமார் 50 சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ குடும்பங்கள் இருந்தன. ஆலயம் இல்லாததால் மக்கள் ஞாயிறு ஆராதனைகள் நடத்தாமல் இருந்தனர். இந்த இடத்தில் ஆண்டுதோறும் வி.கே.புரம் சேகர சுவிஷேச ஊழியம் நடைபெறும்.
அக்டோபர் மாதம் 2-ஆம் நாள் நடைபெறும் இந்த சுவிஷேச ஊழியத்தில் கிறிஸ்தவ வீடுகளில் மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து வந்தனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடைபெறும். வி.கே. புரத்திலிருந்து ஆண்கள், பெண்கள், வாலிபர்கள் அங்கு சென்று ஓய்வு நாள் பாடசாலை, கிறிஸ்துமஸ் விழா, ஜெபக் கூட்டங்கள் நடத்தி வந்தனர். அப்போது சேகர குருவாக பணியாற்றிய அருட்திருஜேசன் எஸ்.தர்மராஜ், அருளானந்தம் என்ற ஆசிரியரை சபை ஊழியராக நியமனம் செய்தார்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்ப பள்ளியில் வைத்து ஞாயிறு ஆராதனை நடத்தப்பட்டது. கிறிஸ்துமஸ், பெரிய வெள்ளி, ஈஸ்டர், வருடப்பிறப்பு ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெறும். ரெவரென்ட் டாக்டர் எஸ.ஜெயபால்டேவிட் இங்கு சேகர குருவாக பணியாற்றும் போது பேராதரவுடன் சபை ஊழியர், மக்கள் எல்லோரும் முயற்சி செய்து நன்கொடைகள் பிரித்து கிறிஸ்து ஆலயம் கட்டுமான வேலையை ஜெபத்துடன் தொடங்கினார். 7-9-1971 அன்று வீரராகவன் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
பின்னர் 9-5-1979 அன்று சேகர குருவாக எஸ.ஜெயபால்டேவிட் பணியாற்றும் போது நெல்லை பேராயர் ரெவரென்ட் தானியேல் ஆபிரகாம் லோயர் டேம் கிறிஸ்து ஆலயத்தினை பிரதிஷ்டை செய்தார். அதன். பின் ஆலயமணி அமைக்கப்பட்டது. அருட்திரு வேதநாயகம் அய்யர் காலத்தில் மேற்கூரை பழுதடைந்து விட்டதால் அது அகற்றப்பட்டது. அதன்பின் அந்த கூரையில் சிமென்டு ஓடுகள் போடப்பட்டு பேராயர் ரெவரென்ட் ஜேசன் தர்மராஜ் அவர்களால் மறு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அருட்திரு மாணிக்கம் அய்யர் காலத்தில் நவீன கழிப்பிடமும் குளியல் அறையும் கட்டப்பட்டது.
தேவனுக்கு மகிமையாக இந்த ஆலயத்தில் கூட்டங்கள், உபவாச கூட்டங்கள், முழு இரவு ஜெபங்கள் மற்றும் சிறப்பு கூட்டங்கள் ஆண்டு தோறும் நடைபெற்றது. பிரதிஷ்டை பண்டிகையும், அசன பெருவிழாவும், கன்வென்சன் கூட்டங்களும் மிகச் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றது.
மேற்கு மண்டலம்:
தென்னிந்திய திருச்சபையில் மேற்கு மண்டலம் நல்லூரை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. இந்த சிறப்பு வாய்ந்த வி.கே.புரம் ஆலயத்தில் ரேணியஸ் ஐயர் குதிரையில் வந்து கிறிஸ்தவ மதத்தை பரப்பியுள்ளார். அப்போது இங்கு வாழ்ந்து வந்த ஏழை,எளிய மக்களுக்கு கல்வி கொடுக்கவும், இறையறிவை ஏற்படுத்தவும் படாத பட்ட அவர் அதில் வெற்றியும் கண்டார்.
கிறிஸ்தவ மதம் இப்பகுதியில் பரப்பப்படும் போதே, கல்வி அறிவு வெகுவாக வழங்கப்பட்டது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர் என்று அல்லாமல் எல்லோருக்கும் கல்வியறிவு கிடைத்தது. அப்படி கிடைத்தவர்களின் குடும்ப வாரிசுகள் தற்சமயம் தென்திருச்சபை மண்டலத்தில் உள்ள கல்வி கூடங்களில் ஆசிரியர், ஆசிரியையாக பணியாற்றுவதை இப்போதும் காணலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக தாமிரபரணி ஆற்றின் கரையோரம் மேலசிவந்திபுரம் சி.எஸ்.ஐ. சர்ச் உள்ள இடங்கள், திருவாடுதுறை ஆதினத்துக்கு சொந்தமான இடமாகும். ஆயினும் மேற்கு மண்டலத்தில் ஒரு சபையாக விளங்கும் மேலசிவந்திபுரம் சபை சிறப்பான ஆலயத்துடன் அங்கு கம்பீரமாய் காட்சியளிக்கிறது. இந்த காட்சி இந்து- கிறிஸ்தவ மதத்தின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
வி.கே.புரம் சி.எஸ்.ஐ. சேகரம் திருநெல்வேலி மண்டலத் தில் மேற்குசபை மன்றம் நல்லூரை தலைமயிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த மேற்கு மன்றத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது வி.கே.புரம் சேகரம் தான்.