திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (49 of 53)
புலவன்பட்டி பெயர் வரக் காரணம்
கிராமப் பஞ்சாயத்து என்றாலே குறிப்பிட்ட ஜனத்தொகை மட்டும் தான் இருக்கும். ஜனத்தொகை பெருகினால் அதை பேரூராட்சியாக மாற்றி விடுவார்கள் ஆனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சிவந்திபுரம் மிகப்பெரிய பஞ்சாயத்தாக விளங்குகிறது. இங்கு 12,000 க்கு மேற்பட்ட மக்கள் 2001ஆம் ஆண்டு கணக்குப்படி வசித்து வந்தனர்.
இந்தப் பஞ்சாயத்திற்கு இன்னொரு பெயர் சிவந்திநாடார்புரம். இந்தப் பஞ்சாயத்தில் பல குக்கிராமங்கள் உள்ளது. அவை ஆறுமுகம் பட்டி, அகஸ்தியர் பட்டி, மேலசிவந்திபுரம் (புலவன்பட்டி) உள்பட பல கிராமங்களாகும். இவர்கள் விவசாயம் மற்றும் கால்நடைகளை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இந்தப் பஞ்சாயத்துக்குட்பட்டு ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் புலவன்பட்டி மிகவும் சிறப்பு வாய்ந்த ஊராகும்;. இந்த கிராமத்தினை பற்றி பார்க்கலாம்.
சேரன்மகாதேவி அருகே புலவன் குடியிருப்பு என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் கிராமியப் பாடல்கள் இயற்றி படிப்பவர்கள் மிக அதிகமாக இருந்தனர். அப்போது உழைக்கும் உழவர்கள் அலுப்பு தீர கதிரருக்கும் இடத்திலும், கதிர் அடிக்கும் களம் அருகிலும் பாடகர்களை கூப்பிட்டு பாடச் செய்வது வழக்கம்.
ஏற்கெனவே இந்தப்;பகுதி பொன் விளையும் பூமி. இந்த பூமியில் களத்து மேட்டு பாடல் பாட வந்தவர்கள் அப்படியே இங்கேயே தங்கி விட்டனர். ஆகவே அவர்கள் தங்கிய கிராமத்திற்கு "புலவன் பட்டி" என்ற பெயர் வந்தது. அதாவது புலவர்கள் வாழும் பட்டி புலவன் பட்டியாக மாறியது என்று இப்பகுதியில் வாழும் பத்திரிக்கையாளர் பிரங்கிளின் செல்வராஜ் கூறினார்.
இதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் நாடார் கூறிய போது, "இங்கு முதன் முதலில் வந்து குடியேறிய கால சுப்பிரமணியன் கால பெருமாள், அமிர்தம், ஜெ.டி. சாமுவேல் போன்ற எங்களுடைய மூதாதையர் தீராத தமிழ்ப் புலமையுடன் பேசுவார்கள். இவர்கள் பேசிய பேச்சை வைத்து இப்பகுதியினர் அவர்களை "புலவர்" என்று கூப்பிடுவார்கள். அவர்கள் குடும்பம் வசிக்கும் இப்பகுதியை "புலவன்பட்டி" என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர் என்று கூறினார்.
இவர்களுக்கு முன்னோடியான காலசாமி நாடார் புலவன்குடியிருப்பு பகுதியில் இருந்து இங்கு வந்து பனை தொழில் செய்து வந்தார். அவரின் வகையராக்கள் தங்கள் ஊரில் உள்ள தெய்வமான காலன்- மற்றும் தூதனை பிடி மண் எடுத்து வந்து இப்பகுதியில் பிரதிட்சை செய்து வணங்கினார்கள். அந்த கோயிலைதான் இங்குள்ள கிராம மக்கள் தற்சமயம் "காலசாமி கோவில் " என்று வணங்கி வருகின்றனர்"; என்றும் கூறினார்.
புலவன்பட்டியில் ஒரு பகுதியில் இருக்கும் கிராமத்தின் பெயர் வெயிலு முத்தன்பட்டி. இந்தக் கிராமத்திற்கு இப்பெயர் வரக் காரணம் இங்கு வெயிலு முத்து நாடார் என்;பவருடைய வகையராக்கள் வாழ் ந்து வருவதால் இந்தப்;பெயர் வந்தது என்று கூறுகிறார்கள். இங்கு நாராயணசாமி கோவில் ஒன்று உள்ளது. எல்லா ஊரிலும் போக்குவரத்திற்கு பஸ்சை பயன்படுத்துவார்கள்.
விவசாயத் தொழிலுக்கு மாட்டுவண்டி, டிராக்டர் போன்ற வாகனங்களை பயன்படுத்துவார்கள். ஆனால் இங்கு விதி விலக்காக விவசாயிகள் போக்குவரத்திற்காக வித்தியாசமான முறையில் படகை பயன்படுத்துகிறார்கள். அதை பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம். அதற்கு முன்பு தாமிரபரணியில் நடைபெறும் ஒரு திருவிழா குறித்து பார்க்கலாம்.