திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (48 of 53)
120 வருடம் பழமையான கோவில்
அம்பலவாணபுரம் என்னும் இடத்தில் தான் கருணை பிள்ளையார் என்ற உழக்கரிசி பிள்ளையார் உள்ளார். இந்தப் பிள்ளையார் மிகவும் விசேசமானவர். தென் திசையை சிவன் சக்தி திருமணத்தின் போது சமன் செய்ய பொதிகை மலை வந்தார் அகத்தியர். அப்போது பல தெய்வங்களை இந்த பகுதியில் பிரதிட்சை செய்து வணங்கினார் அவர்.
அதுபோலவே அகத்தியர் வணங்கிய பிள்ளையார் தான் அம்பலவணாபுரம் உழக்கரிசி பிள்ளையார். காலங்கள் கடந்தது. இந்தப் பிள்ளையார் இருந்த இடத்தினை யாரும் கவனிக்காமல் விட்டு விட்டனர். இதனால் அவர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது இப்பகுதியில் ஒரு ஆங்கிலேயர் துரை வேட்டையாட வந்தார்.
அவர் இவ்வழியாக வரும் போது வெள்ளத்துரையின் குதிரை கால் பட்டு மீண்டும் வெளிப்பட்டார் உழக்கரிசி பிள்ளையார். அப்போது குதிரையில் குழம்படி பட்டு பிள்ளையார் மீது ரத்தம் பீரிட்டது. இதை கண்ட வெள்ளயன் அரண்டு போய் விட்டான். உடனே அங்கிருந்து மக்களிடம் இந்த பிள்ளையாரை நீங்கள் வைத்து வணங்குங்கள். நான் அதற்கு உதவி புரிகிறேன் என்று கூறினார். மக்கள் சரியென்று அந்த பிள்ளையாரை மீண்டும் பிரதிட்சை செய்து வணங்க ஆரம்பித்தனர்.
அந்த வெள்ளைத்துரை இப்பிள்ளையாருக்கு மானியமாக தினமும் உழக்கு அரிசி கொடுத்தார். ஆகவே இந்த பிள்ளையாருக்கு உழக்கரிசி பிள்ளையார் என்று பெயர் வந்தது. மேலும் இவரை வணங்கும் போது மிக கருணையாய் பக்தருக்கு அருளினார் . ஆகவே அவருக்கு கருணை பிள்ளையார் என்ற பெயரும் வந்தது.
இது குறித்து இப்பிள்ளையார் குறித்து லட்சார்சனை குழுத்தலைவர் எஸ்.கிருஷ்ணன் என்பவர் கூறிய தகவல்: இந்தக்கோவில் 120 வருடம் பழமையானவை. முற்காலத்தில் அகத்தியர், சிவன், சக்தி திருமணக்காட்சியை காண இங்கு வந்த போது அகத்தியர் வைத்து வணங்கிய பிள்ளையார்களில் உழக்கரசி பிள்ளையாரும், நெல்லை சந்தி பிள்ளையாரும் அடங்குவர். இந்தக் கோவில் இரண்டுமே திருவாவடுதுறை ஆதினத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் தான் இக்கோவிலுக்கு நித்திய கட்டளை செய்து வருகிறார்கள்.
வி.கே.புரம் பகுதியில் திருமணம் மற்றும் நல்ல காரியம் எது நடந்தாலும் உழக்கரிசி பிள்ளையாரை வணங்கிய பின்தான் காரியங்களை துவங்குவார்கள். இக்கோவில் லட்சார்ச்சனை குழு என்ற ஒன்று அமைத்து நடத்தி வருகிறௌம். இதில் 1300 மெம்பருக்கு மேல் உள்ளோம். வருடத்திற்கு ஒரு முறை லட்சார்ச்சனை நடைபெறும். சில வருடத்திற்கு முன் லட்சார்ச்சனை குழு மூலம் தட்சணாமூர்த்தி ஒன்றை நிறுவி பிரதிஷ்டை செய்து வந்தோம்.
இதற்கான கும்பாபிஷேக வேலைகளை எல்லாம் திருவாடுதுறை ஆதினம் ஸ்ரீல ஸ்ரீல குரு மகா சன்னிதானம் தனது கரத்தால் செய்தார்கள். ஒரு சமயம் லட்சார்ச்சனை விழாவின் போது 8 பிரசாத கவர்களை பிள்ளையார் காலடியில் வைத்து எடுத்து பக்தர்களிடம் கொடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது முன்னால் நிர்வாகி ஒருவர் திடீரென்று வந்து நீங்கள் எல்லா பிரசாதக் கவர்களையும் பிள்ளையார் பாதத்தில் வைக்கவில்லை|| என்று புகார் கூறினார். உடனே சலசலப்பு ஏற்பட்டது.
ஆயினும் பிள்ளையாரின் சப்ர பவனி துவங்கியது. மன உளைச்சலுடன் நாங்கள் ஊர் சுற்றி வரும் போது புகார் கூறிய நிர்வாகி காலை 3 மணிக்கு கோவில் முன் வந்து உட்கார்ந்திருந்தார். எங்களைப் பார்த்த உடன் ஓடி வந்து, ஷவிநாயகப் பெருமானுக்கு நீங்கள் காலடியில் லட்டு வைத்துக் கொடுத்துள்ளீர்கள். அது தெரியாமல் நான் உங்கள் மீது புகார் கூறினேன். இறைவன் இரவு என்னை தூங்க விடாமல் யானை வடிவத்தில் வந்து (கனவில்) விரட்டுகிறார். அது தான் அதிகாலையில் கோவிலுக்கு ஓடி வந்து விட்டேன்| என்று அவர் கூறினார்.
உழக்கரிசி பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி குழு ஒன்று உள்ளது. அந்தக் குழு துர்க்கை அம்மன் மற்றும் நவக்கிரகத்தை பிரதிட்சை செய்துள்ளனர். வருடத்திற்கு ஒரு முறை விநாயகர் சதுர்த்தி விழாவில் சப்பர பவனி இவர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. முன்பு சிறிய உற்சவர் இருந்தார். தற்சமயம் இந்தக் குழு ஏற்பாட்டில் அந்த உற்சவர் பெரியவராக ஆக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பிள்ளையார் கோவில் வார வழிபாட்டு மன்றம் மூலம் திங்கட்கிழமை தோறும் பக்தி சொற்பொழிவு நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை ஆண்டு விழாவும் நடைபெறும். தொடர்ந்து 20 வருடமாக இந்த வார வழிபாடு மன்றம் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் பௌர்ணமி குழு என்ற ஒரு குழு உள்ளது. இந்தக் குழு மூலம் பௌர்ணமி தோறும் விளக்கு பூஜை நடைபெறும்.
மாதம் ஒரு முறை சங்கடகர சதுர்த்தி விழாவை நடத்தும் குழுவுக்கு சங்கடகர சதுர்த்தி குழு என்று பெயர். இந்தக் குழுவை பொறுத்த வரை 150க்கு மேற்பட்ட விநாயக பக்தர்கள் இந்தப் பணியை மிகத் திறம் பட செய்து வருகின்றனர்.