திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (52 of 53)

பொருநை நதி மீன்களுக்கும் அறிவு உண்டு

திருவாரூர் தேர் அழகும், திருவிடைமருதூர் தெரு அழகும், பாவ நாசம் படி அழகும் காண்பது ஓர் ஆனந்தம். பாவத்தை போக்கும் இடம் பாபநாசம் படித்துறை.
"பொதும்பர் நிழல் குளிர் தூங்கப் பொலிந்த படிந்துறை’
 
என்று பொய் அறியாப் புலவர் பாடும் புண்ணிய நதியாம் பொருநை நதியில் முனிவர்கள், சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். இவர்கள் தான் பெருமை உடையவர்கள் என்று நாம் பல முறை கூறினாலும கூட இந்த நதியில் வாழும் மீன்களும் அறிவு ஜீவிகளே!
 
இந்த மீன்களைப்பற்றி பல கதைகள் உள்ளது. பாபநாசத்தில் ஒரு முறை ஆங்கிலேய துரை பாபநாசத்தில் மீன்களை பிடித்த போது கண் குருடாய் ஆனார் என்று ஏற்கெனவே கூறினோம். மீன்களை பிடித்த போது துரையின் கண்ணை குருடாக்கியது உலகம்மையின் அருள். அந்த உலகம்மையின் அருள் பெற்றதால் தானோ என்னவோ..மீன்கள் எல்லாம் அறிவுள்ளதாக ஆகிவிட்டது போலும்.
முன்பெல்லாம் மீனை பிடிக்க வலை வீசுவார்கள் அல்லது தூண்டில் போடுவார்கள். தூண்டியலில் மண்புழுவை வைத்து அதை ஆற்றில் வீசி மீனை பிடிப்பார்கள். அப்போது அந்த முள்ளில் மீன் வந்து மாட்டிக் கொள்ளும். ஆனால் தற்சமயம் மண்புழுவை கண்டவுடன் மீன்கள் எல்லாம் "எஸ்கேப்’ ஆகிவிடுகிறது. இதுகுறித்து கன்னடியன் கால்வாய் அருகே மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த புலவன்பட்டி ராஜி என்பவரும் மோசஸ் என்பவரும் நம்மிடம் கூறியதாவது.
"பெரும்பாலும் மண்புழு போட்டாலே முன்பு மீன் கிடைத்துவிடும். சேல், ரோளு, பஞ்சால கெண்டை போன்ற மீன்கள் தான் இப்பகுதியில் தூண்டிலில் சிக்கும். ஆனால் தற்சமயம் மண்புழு போட்டாலே மீன்கள் எல்லாம் தப்பித்து ஓடி விடுகிறது. மனிதனுக்கு மட்டும் ஆறு அறிவு. மற்றவைக்கு ஐந்தறிவு என்று கூறுகிறோம். மனிதர்கள் சிலரை ஐந்தறிவு படைத்தவர்கள் என்று கேலி பேசுகிறோம். ஆனால் மீன்கள் தற்சமயம் மண்புழு தூண்டிலை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்கிறது.
 
ஆனாலும் நாங்கள் சளைத்தவர்களா என்ன? மண்புழுவை ஓரம் கட்டிவிட்டு மீன்களை ஏமாற்ற பசை போன்ற உணவு பொருட்களை குழந்தைகள் தின்பண்டம் போல் செய்து அதை போட்டு மீனை பிடிக்கிறோம" என்று கூறினர்.
"பொன் திணிந்த புனல் பெருகும்
பொருனை எனும் திருநதி ’
என்று கம்பர் தாமிரபரணியின் பெருமையை பாடியுள்ளார்.
இங்குள்ள கோடை மேலழிகியான் அணைக்கட்டு தான் தலை அணை. இந்த அணையில் வடக்கு கோடை மேல் அழகியான் கால்வாய் காட்டாற்று மீது பாலம் கட்டப்பட்டு, அந்த பாலத்தின் வழியாக கால்வாய் செல்கிறது. அந்த காட்டாறு பாபநாசம் சிவன் கோவில் முன்பு தாமிரபரணியுடன் கலக்கும் கோரையாறு ஆகும்.
 
முன்பெல்லாம் தலை அணை கட்டப்படவில்லை. முதல்முதலில் கட்டப்பட்ட தடுப்பு அணையாக கன்னடியன் அணை மட்டும் தான் இருந்தது. இடையில் கட்டப்பட்ட இந்த தலை அணைக்கு பெயர் காரணம் என்ன என்று கேட்டபோது பலருக்கும் பதில் சொல்ல தெரியவில்லை.
 
ஆனால் ஒருவர்மட்டும் கோடை காலத்தில் இங்கு தண்ணீரை தேக்கி வைத்து இருப்பார்கள். இந்த தண்ணீர் இருக்கும் இடம் பார்க்க அழகாக இருக்கும். பாபநாசம் சிவன் கோவிலில் இருந்து பார்க்கும் போதும், மலையின் உச்சியில் இருந்து இந்த அணையின் அழகைக் கண்டு ரசித்தவர்களும் இந்த அணைக்கு "கோடை மேலழிகியான் அணை’ என்று பெயர் வைத்து விட்டனர் என்று கூறினர்.
 
இந்த அணையில் இருந்து தான் விக்கிரமசிங்கபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பெரும்பாலுமே வறட்சியான நாட்களில் கூட வற்றாத ஜுவ நதியாம் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். ஆனால் 2003-ஆம் ஆண்டில் மேலணையில் 25 அடிக்கு கீழ் தண்ணீர் சென்ற போது படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட காலத்தில் குடிநீர் வற்றிய நிலையில் காணப்பட்டது. அதை எனக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நல்ல மழை பெய்து அணை நிரம்பி இருக்கும் காட்சியையும் என்னால் பார்க்கமுடிந்தது.
 
எதிர் பக்கத்தில் உள்ள பெண் குறிப்பை படித்தவுடன் அவரை பற்றி அறிய ஆசை உங்களுக்கு பிறக்கும் அல்லவா?.. அந்த ஆசை தீர அந்தப்பெண் குறித்து பாபநாசம்கோவில் முன்பு கடை நடத்தி வரும் தொழிலதிபர் கோபால் என்பவர் கூறியதாவது இந்தப் பெண் இங்கு வந்து 10 வருடமாகிறது. இவர் குளிப்பது கிடையாது. மாற்றுத் துணி மாற்றியது கிடையாது. கண்ட இடத்தில் எல்லாம் படுத்துக் கிடப்பார். ஆனால் இவர் மீது துர்வாசம் வீசாது.
மாற்றுத் துணி கூட மாற்றாத இந்த அம்மாவுக்கு இது வரை நோய் வந்தது கூட கிடையாது. அது மட்டுமா? ஒரு சமயம் ஒருவர் இவரை கல்லால் அடித்து விட்டார். மண்டையில் இரத்தம் பீறிட "வீல்’ என்று அலறியடித்துக் கொண்டு அந்தப் பெண் ஓடினார். இன்றோடு அவருக்கு உயிர் போய்விடும் என்று நாங்கள் நினைத்தோம்.
ஆனால் மறுநாள் காயம் ஏதும் இன்றி "மாயா’ பெண் வந்தார். 60 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணை அடித்த நபரோ மிகவும் கஷ்டப்படுகிறார். மொழியே பேசத் தெரியாத இந்தப் பெண்ணை வெளியிடத்திலிருந்து சிலர் போட்டோ எடுத்துச் சென்று வீட்டில் வைத்து அவர்கள் வணங்கி வருகிறார்கள். ஆனால் காலங்கள் கடந்தது. அந்த பெண் தற்போது எங்கே போனார் என்று தெரியவில்லை.
 
ஆனால் யாருடமுமே பிச்சை கேட்காத அந்த பெண் சில நேரம் சில கடைகளில் வந்து கை நீட்டினால் உடனே வியாபாரிகள் அந்த பெண்ணுக்கு தேவையான பொருள்களை கொடுத்து விடுவார்கள். அன்று அந்த கடையில் நல்ல வியாபாரம் பெருகும். அதை நான் கண்ணால் பார்த்துள்ளேன். அனுபவித்தும் உள்ளேன்" என்று அவர் கூறினார்.


Favorite tags



Tirunelveli Business Directory