திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (47 of 53)
135 ஆண்டுகளைக் கடந்தும் உடைக்க முடியாத இரும்பு பாலம்
தாமிரபரணி ஆற்றில் மலையை விட்டு கீழே இறங்கியவுடன் நதி இரண்டு பிரிவாக பிரிகிறது. பின் மீண்டும் ஒன்றாக இணையும் இடத்தில் தான் மில்லிற்கு செல்வதற்கு போடப்பட்ட இரும்புப் பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த இரும்புப் பாலம் 135 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. இந்த பாலத்தை பொறுத்த வரை 100 வருடந்தான் தாங்கும் சக்தி கொண்டது. அதன் பிறகு இதை பயன் படுத்தக்கூடாது . வேறு பாலம் தான் கட்ட வேண்டுமென்று பிரிட்டிஷகாரர்கள் எழுதி வைத்து விட்டு சென்று விட்டனர். இதனால் 100 வருடம் முடிந்தவுடன் பல போராட்டத்திற்கு பிறகு நமது அரசு ஒரு சிமெண்டு பாலத்தை கட்ட முயற்சி செய்தது.
அதன் பின் பழைய இரும்பு பாலம் அருகில் அந்தப்பாலத்தினை கட்டியுள்ளது. புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டவுடன் பழைய பாலத்தில் உள்ள போல்ட்டுகளை கழட்டி பாலத்தை அப்புறப்படுத்தி விடலாம் என்று நினைத்த பொறியாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. போல்டை கழட்ட முடியவில்லை. சரி.... வெல்டிங் மெஷின் மூலமாக துண்டாக வெட்டி எடுத்து விடலாம் என்று நினைத்தால் அதுவும் முடியவில்லை.
இறுதியில் வெடி வைத்துதான் தகர்க்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது வெடி வைத்து உடைத்தால் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலமும் உடைந்து விடும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே அந்தப் பாலத்தினை உடைக்கும் திட்டத்தினை கைவிட்டனர். இதனால் தற்சமயம் 135 ஆண்டுகளை கடந்த இந்த இரும்பு பாலம் தாமிரபரணி ஆற்றில் மில் ரோட்டில் நினைவு சின்னமாக உள்ளது.
கார்வி மில்:
கார்வி என்னும் பிரிட்டிஷகாரரால் கட்டப்பட்ட காரணத்தால் ‘கார்வி மில்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மில் குறித்து மேல சிவந்திபுரத்தை சேர்ந்த பத்திரிகையாளர் பிராங்கிளின் செல்வராஜ் கூறிய தகவல் கூறித்து இனி பார்க்கலாம்: இந்த மில் இருக்கும் இடம் புலவன்பட்டியில் பனையேறும் தொழில் செய்து கொண்டிருந்தார் சமுத்திரவல்லி நாடார்.
இவருக்கு இந்த பகுதியில் மிக அதிகமான இடம் இருந்தது. இவரிடமிருந்து இந்த மில் வைக்க பிரிட்டிஷகாரர்கள் இடங்களை வாங்கிக் கொண்டனர். ஆரம்ப கால கட்டத்தில் இந்த இரும்பு பாலமெல்லாம் கிடையாது. தாமிரபரணியை கடக்க படகு மூலம் பஞ்சு கொண்டு செல்வார்கள். இந்த பஞ்சுகளை கொண்டு வரவே அம்பை ரெயில்வே நிலையம் உருவாக்கப்பட்டது.
இதற்காக ரயில்வே தண்டவாளம் மில் குடோனுக்குள்ளேயே சென்றுவிடும். (தற்சமயம் இந்த தண்டவாளம் துண்டிக்கப்பட்டுவிட்டது. அதை நாம் அம்பையில் இருந்து வி.கே.புரம் செல்லும் பாதையில் இரயில்வே கேட்டை கடந்தவுடன் வலது புறம் பார்த்துக்கொண்டு சென்றால் பார்க்கலாம்). குடோனில் இருந்து மாட்டு வண்டி மூலம் பஞ்சு வி.கே.புரம் கொண்டு வரப்பட்டு அதன்பிறகு படகு மூலம் மில்லிற்கு கொண்டு செல்வர்.
படகு சர்வீஸ் மிக கடினமாக உள்ளது என்றுதான் இரும்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் கம்பீரத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். இடையில் ஒரே ஒரு தூண் போடப்பட்டு அதன் மேல் இந்த இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வி.கே.புரத்தில் இயங்கும் கார்வி மில் தண்ணீர் மூலம் ஏற்படும் விசையை கொண்டு இயங்கும் மில். இதற்காக பாபநாசம் மேல் அணையில் இருந்து தனியாக பைப் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
இந்த தண்ணீரின் விசையில் தான் எந்திரங்கள் இயங்குகிறது. இங்கு 7 ஆயிரம் பேர் வேலை பார்த்து வந்தனர். தற்சமயம் 1500-க்குள் குறைந்து விட்டனர்.( இது 2003ம் வருட கணக்கு) இங்கு பிளிச்சிங், டையிங், நூற்கண்டு, பெரிய நூல் உள்பட பல வகைகளில் உற்பத்தியாகிறது. முன்பு இந்த மில்லில் இருந்து வரும் கழிவு நீர் ஆற்றில் கலக்கப்பட்டது. இதற்கு இந்த பகுதியில் உள்ள மக்கள் மூலம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
எனவே லாரி மூலம் வெளியிடத்திற்க்கு இந்த கழிவு நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த மில் சுமார் 75 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த மில்லில் வேலை செய்பவர்கள் இங்கேயே குடியேறிவிட்டனர். அதற்கு காரணம் நல்ல சுகாதாரம். குடிநீர் மற்றும் வேலை வாய்ப்பு. இதனால் இப்பகுதியில் ஜனத்தொகை பெருக ஆரம்பித்தது.
இதற்கிடையில் புலவன்பட்டியை சேர்ந்த செல்லத்துரை என்பவர் மில்லில் கேஷியராக வேலை பார்த்தார். அவருக்கு சொந்தமான 10 ஏக்கர் தோப்பை பிரிட்டிஷ அரசு வாங்கியது. அந்த தோப்பில் தொழிலாளர் வசிக்க ஒரு குடியிருப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஷகேஸ் கீப்பர் தோப்பு | என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த கிராமம் இப்போதும் அதே பெயரை உச்சரித்துக்கொண்டிருக்கிறது.
இந்த மில் குறித்து மில்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற புலவன்பட்டி யை சேர்ந்து ஆறுமுகம் என்பவர் கூறியதாவது : முதலில் மில் ஆரம்பித்த காலத்தில் மேலணை கட்டப்படவில்லை. ஆகவே தண்ணீருக்காக பிரிட்டிஷகாரர்கள் காரையாறு ஆற்றில் குளம் ஒன்றை தயார் செய்தனர். அங்கிருந்து தண்ணீரை மில்லிற்கு கொண்டு வந்தனர். அந்த தண்ணீரின் அழுத்தம் மூலம் தான் மில் ஓட ஆரம்பித்தது. மில் ஓடும் போது ஷவாட்டர்" மூலம் ஓடிய காரணத்தால் ஷவாட்டர் மில்" என்றழைக்கப்பட்டது.
பின் பிரிட்டிஷ ஆட்சி காலத்திற்கு பின் நமது ஆட்சி வந்த போது இந்த மில் விரிவுபடுத்தப்பட்டது. இங்கு வீவிங் மில் (தறி மில்) ஓட்ட 2 ஆயிரம் ஏக்கரில் இடம் பார்க்கப்பட்டது. அதில் அன்டர் கிரவுன்ட் தயாரிக்கப்பட்டு 1000 வாட் மூலம் தறி ஓடும் இடமாக மாற்றினார்கள். இந்த மில்தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய தறி ஓடும் மில் ஆகும. இதற்காக 1960-ல் தூண்களே இல்லாத ராட்சத செட் போடப்பட்டது.
இந்த மில்லில் அதிக பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக கழிவுநீரை தாமிரபரணியில் கலக்க தமிழக அரசு ஒத்துக் கொண்டது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால், ரவிவர்மன் எம்.எல்.ஏ. காலத்தில் அந்த தண்ணீரை ஆற்றில் கலக்காமல் இருக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த மில் ஆசியாவிலேயே மிகப் பெரிய மில்லாக இருக்கும் காரணத்தினால் அகஸ்தியர்பட்டி என்னும் இடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைத்தனர். இதில் வெளிநாட்டு விஞ்ஞானிகள் மற்றும் இந்த மில்லிற்கு காரணகர்த்தாக்கள் வந்து இறங்கினர்.
இவர்கள் மில்லை பார்த்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின் நாளடைவில் இந்த மில்லின் உற்பத்தி குறைய குறைய வெளிநாட்டினர் வரத்தும் குறைந்தது. ஆகவே ஹெலிகாப்டர் வந்து செல்வதும் குறைந்தது. ஆனால் தற்போதும் அந்த ஹெலிகாப்டர் தளம் இப்போதும் உள்ளது. இந்த மில்லை வைத்து தான் விக்கிரசிங்கபுரம் மிகப்பெரிய தொழில் நகரமாக மாறியது.
பழமையான இந்த நகரத்தில் புதுமையும் சேர்ந்து கொள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையை செம்மையாக அமைத்துக்கொண்டனர். தங்கள் குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்தனர். என்று புலவன்பட்டி ஆறுமுகம் கூறினார்.