திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (44 of 53)
திருடர்களை விரட்டிய பட்டன்
1992-ம் ஆண்டு ஒரு நாள் இரவு நடந்த சம்பம் இது. இந்த பட்டவராயன் கோயில் முகப்பு தோற்றம் சம்பவத்தினை நினைத்தால் தற்போதும் வியப்பாக இருக்கிறது. முத்துப்பட்டன் கோவில் மண்டபத்திற்குள் ஒரு திருடர் கூட்டம் நுழைந்தது. அந்தக் கூட்டம் உண்டியலை உடைத்து காணிக்கைகளை கொண்டு செல்ல முயற்சி செய்தது. அதற்காக அவர்கள் உண்டியலை உடைத்தனர்.
மறுநிமிடம் அந்த இடத்தில் பெரிய ஓசை கிளம்பியது. திருடர்கள் எங்கிருந்து அந்த ஓசை வருகிறது என்று தெரியாமல் அதிர்ந்தனர். அப்போது அவர்கள் எதிர் திசையில் இருந்த கம்புகள் அனைத்தும் குலுங்கியது. அதில் உள்ள மணிகள் ஓசை எழுப்பியது. கம்புகள் அனைத்தும் ஆட்டம்போட்டு அந்த மணிகளை கலகலவென சத்தம் எழுப்ப செய்தது. அதை கண்ட கள்வர்களை முத்து பட்டரே அந்த வல்லயகம்பு வடிவத்தில் வந்து விட்டார் என புரிந்து கொண்டார்.
உடனே அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். ஆனாலும் அந்த வல்லயம் என்று சொல்லக்கூடிய கம்புகள் அவர்களை விரட்டியது. அந்த கள்வர்கள் கையில் எடுத்த காணிக்கையை அப்படியே போட்டு விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்து ஓடி விட்டனர். இது குறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சிங்கம்பட்டி ஜமீன் புகார் கொடுத்துள்ளார். அதற்காக வழக்கு 1521-92 என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவில் அற்புதம் குறித்து ராஜபாளையம் தளவாய்புரம் பூவையா என்ற ராஜமேள கலைஞர் நம்மிடம் கூறியவிவரம்: இது. "நான் 35 வருடமாக இந்த கோவிலுக்கு வந்து செல்கிறேன். இங்கு வந்தால் நினைத்தது நடக்கும். ஆடி அமாவாசை அன்று 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த இடத்தில் பூக்குழி இறங்குவார்கள். இந்த இடத்தினை வில்லிசைக் கலைஞர்கள் தங்கள் தொழிலுக்கே தலைமையிடமாக கருதுகிறார்கள்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு கும்பாபிஷகம் செய்ய இங்கு இருந்து தீர்த்தம் எடுத்து செல்வதை சிறப்பாக நினைக்கறார்கள். நான் வரும் இந்த 35 வருடத்தில் ஒவ்வொரு வருடமும் கூட்டம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. தவிர குறையவே இல்லை”. என்று அவர் கூறினார்.
வில்லு புலவர்
அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த இசக்கியப்பன என்பவர் இந்த கோவில் குறித்து பேசும் போது,”இங்கு கல்லிடைக்குறிச்சி இடைகுடி தெருவை சேர்ந்த முத்து புலவர் மகன் பற்பநாதன் என்பவர் பட்டவராயர் கோவில் வரலாற்றை வில்லுபாட்டு மூலம் படித்து வருகிறார்.. ஆதார நிலை : இங்கு சொரிமுத்து அய்யனார் மூலாதாரம் நிலையில் உள்ளார். இந்நிலையில் சிவபெருமானை திருவாரூரிலும், திருப்பரங்குன்றத்தில் முருகனும் உள்ளனர்.
இந்த பட்டவராயன் கதை குறித்து வனபேச்சியம்மன் கோவில் பூசாரி பிரம்மநாயகம் என்பவர் மேலும் ஒரு சில தகவல்களை கூறினார். பழைய பட்டவராயர் கோயில் இந்த பொதிகை மலையில் தான் உள்ளது. அந்த கோயிலின் அருகே தான் பட்டன் சாமி மாட்டு கிடை போட்ட இடம், 100 கள்வர்கள் சண்டையிட்ட இடம், பொம்மக்கா, திம்மக்கா ஆகியோர் இறந்த இடம் என்று கூறப்படுகிறது. அந்த இடம் தற்சமயம் பட்டவராயர் கோவில் உள்ள இடத்தில் அல்லாமல் சேர்வலாறு அணைக்கட்டு பக்கம் உள்ளது. அந்த இடத்தில் சாஸ்தா கோவில் ஒன்றும் உள்ளது.
பாதை
இந்த பழைய பட்டவராயன் கோவிலுக்கு செல்லும் பாதை சேர்வலாற்றுக்கு முண்டந்துறை வழியாக வர வேண்டும். அல்லதுசொரிமுத்து அய்யனார் கோவில் வழியாக மேலணை வந்தால் இந்த பட்டவராயர் பழைய கோவிலை அடையலாம். இங்கு காச்சி நாய். பூச்சி நாய் பட்டவராயர் சாமி ஆகியோருடைய சிலை இப்போதும் உள்ளது. இந்த இடத்திற்கு செல்ல தற்போது போதிய பாதை வசதி இல்லாத காரணத்தால் அங்கு யாரும் செல்ல இயலவில்லை.
வி.கே.புரம்
பாபநாசத்தினை விட்டு கீழே இறங்கியவுடன் சமவெளி பகுதியில் உள்ள மிகப்பெரிய ஊர் விக்கிரமசிங்கபுரம். இந்த வி.கே.புரத்தில்தான் திருக்குறளுக்கு நாலடி வெண்பா எழுதிய மாதவ சிவஞான சுவாமிகள் பிறந்துள்ளார்கள். திருவாவடுதுறை ஆதினத்தின் 23-வது மகா சன்னி தானம் பிறந்து வளர்ந்த ஊர் இந்த ஊர்தான்.
மேலும் உலகம்மையே மகளாக தோன்றி உணவு பரிமாறிய நமச்சிவாய கவிராயர் பிறந்து ஊர் இந்தஊர்தான். இன்று பொதிகை மலையில் சொரிமுத்து அய்யனார் கோயிலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் முத்துபட்டன் வளர்ந்த ஊர் இந்த விக்கிரசிங்கபுரம் தான். இவர்கள் எல்லாம் வாழ்ந்த இடம் தற்சமயம் வி.கே.புரத்தில் உள்ள வடக்கு ரதவீதி மற்றும் தெற்கு ரதவீதி என்று பிரம்மநாயகம் கூறுகிறார்.
பட்டவராயர் கோயிலுக்கு கடந்து 50 வருடகாலமாக வரும் வயதான பாட்டி சிவனம்மாள் கூறும் போது, "அந்த காலத்தில் இந்த கோயிலுக்கு வர பஸ் வசதியில்லை. எனவே மணிமுத்தாறு ஆத்தை கடந்து சிங்கம்பட்டி வழியாகத்தான் வந்து இந்த கோயிலை தரிசிப்போம். அது மட்டுமல்லாமல் இந்த கோயிலை பொறுத்தவரை வேண்டி வந்தோருக்கு நல்ல பயன் கிடைப்பதால் நாங்கள் பல கஸ்டங்களுக்கு மத்தியிலும் இந்த கோயிலுக்கு வந்து செல்வதை கடமையாக வைத்திருக்கிறோம்.
இப்போது கார் வசதி சாலை வசதி பெருகி விட்டது. எனவே மக்கள் மிக வேகமாக கோயிலுக்கு வந்து விடுவார்கள். நாங்கள் இந்த கோயிலில் வந்து சாமியை வருத்தி வேண்டி செல்வோம். இந்த இடத்தில் தான் மணிமுழுங்கி மரம் உள்ளது. இந்த மரத்துக்கு அடியில் மொட்டை சாமி இருக்கிறார். அகத்தியர் இருக்கிறார். இன்னும் பல தெய்வங்கள் இருக்கிறது. இவர்களுக்கு நாங்கள் பொங்கல் வைத்து படையல் செய்து வணங்கி வருகிறோம். "என்று கூறினார். இந்த கோயில் அருகே தான் "பேராண்மை" என்னும் திரைப்படம் எடுக்க செட் போடப்பட்டு பிரமாண்டமாக எடுக்கப்பட்டது.
மணிமுழுங்கி மரம்
சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஒரு அதிசயம் மணிமுழுங்கி மரம். இந்த மரத்தில் நேர்ச்சைக்காக பக்தர்கள் மணிக்கட்டி போடுகிறார்கள். இந்த மணி அவர்கள் அடுத்த தடவை கோயிலுக்கு வரும் போது மரத்தில் மூழ்கி விடுகிறது. இதை கோயிலுக்கு வரும் மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். அவர்கள் இந்த மரத்தினை "மணி முழுங்கி மரம்” என்றழைக்கிறார்கள். பட்டவராயர் கோயில் முன்பு நேர்ச்சைக்காக கட்டப்பட்ட செருப்பு. அது தேய்ந்து இருப்பதை நாம் பார்க்கலாம்.