» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியா - ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள்: மோடி - புதின் முன்னிலையில் கையெழுத்து!
சனி 6, டிசம்பர் 2025 10:39:49 AM (IST)

இந்தியா - ரஷ்யா இடையே பொருளாதாரம், மனித வளம், உரம், கப்பல் கட்டுமானம் தொடர்பாக 16 முக்கிய ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் கையெழுத்தாகின.
இந்திய, ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார். அன்றிரவு ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்து அளித்தார். அப்போது ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட பகவத் கீதையை புதினுக்கு அவர் பரிசாக வழங்கினார்.
இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு நேற்று காலை 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி அவரை வரவேற்றனர். இதன்பிறகு அதிபர் விளாடிமிர் புதின், காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் விளாடிமிர் புதினும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரதமர் மோடி கூறும்போது, "உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையுடன் செயல்படவில்லை. நாங்கள் அமைதியின் பக்கம் நிற்கிறோம். உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் புதின் கூறும்போது, "உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். விரைவில் அமைதி தீர்வு காணப்படும்’’ என்று உறுதி அளித்தார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, இந்தியா - ரஷ்யா பொருளாதார ஒத்துழைப்பு திட்டம் 2030 தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி இரு நாடுகளும் இணைந்து கூட்டு தயாரிப்புகளில் ஈடுபட உள்ளன.
அதன்பிறகு இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: கடந்த 80 ஆண்டுகளாக இந்திய - ரஷ்ய உறவு துருவ நட்சத்திரம் போன்று நிலையாக இருக்கிறது. இரு நாடுகள் இடையிலான உறவு காலத்தால் புடமிடப்பட்டது.
வரும் 2030-ம் ஆண்டு வரையிலான இந்திய, ரஷ்ய பொருளாதார திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. யுரேசியன் பொருளாதார கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. வேளாண்மை, உரம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து யூரியாவை உற்பத்தி செய்யும்.
சென்னை- விளாடிவோஸ்டாக் கடல் வழித்தடம், ஐஎன்எஸ்டிசி வழித்தடம், வடக்கு கடல் வழித்தடம் ஆகிய திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படும். துருவ பகுதிகளில் கப்பல்களை இயக்க இந்திய மாலுமிகளுக்கு ரஷ்யா சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளது. இதன்மூலம் ஆர்டிக் பகுதியில் இந்தியா, ரஷ்யா இடையிலான உறவு வலுவடையும். இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பணியாற்றும். அணு சக்தி, எரிசக்தி, மரபுசாரா எரிசக்தி, அரியவகை தனிமங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும். ரஷ்ய சுற்றுலா பயணிகள் மற்றும் ரஷ்ய குழுவினர் 30 நாட்கள் விசா இல்லாமல் இந்தியாவுக்கு வருகை தரும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது: இந்தியா, ரஷ்யா இடையிலான வர்த்தகம் 96 சதவீதம் உள்ளூர் கரன்சிகளில் நடைபெறுகிறது. இருதரப்பு வர்த்தகம் கடந்த ஓராண்டில் 12% அதிகரித்திருக்கிறது. இந்த வர்த்தகம் 100 பில்லியன் டாலரை எட்டும். இந்தியாவுக்கான கச்சா எண்ணெய், நிலக்கரி ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் தடையின்றி தொடர்ந்து விநியோகம் செய்யப்படும்.
இந்தியாவுடனான வர்த்தக உறவை மேம்படுத்த வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடம் உருவாக்கப்படும். இதன்மூலம் ரஷ்யா, பெலாரஸ் நாடுகளில் இருந்து இந்திய பெருங்கடல் வழியாக இந்தியாவுடன் வர்த்தகம் நடைபெறும். பாதுகாப்பு துறை தொடர்பாக பல்வேறு உடன்பாடுகள் எட்டப்பட்டு உள்ளன. இது இருநாட்டு பாதுகாப்பு உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக எஸ் 400 ஏவுகணைகளை வாங்கவும் ரஷ்யாவின் எஸ் 500 ஏவுகணைகளை இந்தியாவில் தயாரிக்கவும் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய் எஸ்யு ரகத்தை சேர்ந்த 54 போர் விமானங்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்தும் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை- விளாடிவோஸ்டாக் வழித்தடம்: இந்தியா, ரஷ்யா இடையே ராணுவ தளவாட ஆதரவு பரிமாற்ற ஒப்பந்தம் (ஆர்இஎல்ஓஎஸ்) கடந்த பிப்ரவரியில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்துக்கு ரஷ்ய நாடாளுமன்றம் சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது.
இதன்படி ரஷ்ய ராணுவ தளங்கள் மற்றும் இந்திய ராணுவ தளங்களை இரு நாடுகளும் பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக ஆர்டிக் மற்றும் பசிபிக் பகுதிகளில் அமைந்துள்ள ரஷ்யாவின் 40 ராணுவ, கடற்படை, விமானப் படைத் தளங்களை இந்தியா பயன்படுத்த முடியும்.
ஆர்இஎல்ஓஎஸ் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சென்னை- விளாடிவோஸ்டாக் கடல் வழித்தடம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து மும்பைக்கு சரக்கு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடம் 16,000 கி.மீ. தொலைவு கொண்டது. இத்தடத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு சரக்கு கப்பல்கள் வந்து சேர 40 நாட்களாகிறது. இதற்கு பதிலாக சென்னை-விளாடிவோஸ்டாக் கடல் வழித்தடம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த தடத்தில் 16 நாட்களில் ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு சரக்கு கப்பல்கள் வந்து சேரும். இதனால் எரிபொருளும், நேரமும் சேமிக்கப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோயில்களை நிர்வகிக்க சனாதன தர்ம ரக்ஷா வாரியம் தேவை: பவன் கல்யாண் கருத்து
சனி 6, டிசம்பர் 2025 12:12:00 PM (IST)

இண்டிகோ விமான சேவை ரத்து: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காணொலியில் பங்கேற்ற மணமக்கள்!!
சனி 6, டிசம்பர் 2025 8:39:43 AM (IST)

மகாத்மா காந்தி செயல்களின் தாக்கம் இன்றுவரை பொருத்தமானதாக உள்ளது: ரஷிய அதிபர் புதின்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 5:05:25 PM (IST)

இண்டிகோ நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் : விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:38:12 PM (IST)

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகை : பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:25:58 AM (IST)

ஒரே நாளில் 180 விமானங்கள் ரத்து: பயணிகளிடம் மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:49:08 PM (IST)


