» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஓடும் காரில் திடீர் தீ; சிசுவுடன் இளம்பெண் பலியான கொடூரம் - போலீஸ் விசாரணை!
ஞாயிறு 17, மே 2026 11:49:21 AM (IST)

கோழிக்கோடு அருகே ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணித்த 7 மாதக் கர்ப்பிணி உடல் கருகி இறந்தார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பேராம்பரா அருகே உள்ள செறுவன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் லாலு (34). இவரது மனைவி சோனா (27). இத்தம்பதியினருக்குத் திருமணமாகிச் சில ஆண்டுகள் ஆகும் நிலையில், சோனா தற்பொழுது 7 மாதக் கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு சோனாவிற்கு ஏற்பட்ட உடல்சோர்வு காரணமாக, லாலு தனது மனைவியைக் காரில் பேராம்பரா அருகே கக்காரமுக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவரைச் சந்தித்துவிட்டு, மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கிக்கொண்டு இருவரும் அதே காரில் வீடு திரும்பியுள்ளனர். காரை லாலு ஓட்ட, உடல்நலக் குறைவால் சோனா காரின் பின் இருக்கையில் படுத்து உறங்கியபடி வந்துள்ளார்.
கார் பேராம்பரா அருகே தெய்யபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகக் காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகையுடன் திடீரெனத் தீப்பற்றியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த லாலு, உடனடியாகக் காரைச் சாலையோரமாக நிறுத்திவிட்டு வெளியே குதித்துள்ளார். சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.
காரின் பின் இருக்கையில் படுத்திருந்த கர்ப்பிணி சோனாவை மீட்க லாலு மற்றும் பொதுமக்கள் காரின் பின்பக்கக் கதவைத் திறக்க முயன்றனர். ஆனால், தீ விபத்தின் போது ஏற்பட்ட மின்கசிவு காரணமாகக் காரின் சென்ட்ரல் லாக்கிங் முறை பழுதடைந்து, பின் இருக்கைக் கதவுகள் உள்பக்கமாகக் கச்சிதமாக லாக் ஆகிக்கொண்டன. இதனால் கதவை எக்காரணம் கொண்டும் திறக்க முடியவில்லை.
அதற்குள் தீ கார் முழுவதும் மளமளவெனப் பரவியதால், அங்கிருந்த பொதுமக்கள் அஞ்சி விலகிச் சென்றனர். எனினும், தனது மனைவியைக் காப்பாற்ற லாலு தீயையும் பொருட்படுத்தாமல் போராடினார். அப்போது கார் திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறித் தீப்பிழம்பாக மாறியது.
இதில் காருக்குள் சிக்கியிருந்த சோனா, வெளியில் வர முடியாமல் கண்முன்னே உடல் கருகிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் சோனாவின் வயிற்றில் வளர்ந்த 7 மாதச் சிசுவும் காருக்குள்ளேயே துடிதுடித்து இறந்தது. மனைவியைக் மீட்கப் போராடிய லாலுவுக்கு உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேராம்பரா தீயணைப்புப் படை வீரர்கள், காரில் எரிந்து கொண்டிருந்த தீயைத் தண்ணீரைப் பீய்ச்சியடித்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் காரின் கதவை உடைத்து, உள்ளே கருகிய நிலையில் இருந்த சோனாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட லாலு, தீவிரச் சிகிச்சைக்காக அதே கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவசரச் சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார். முதற்கட்ட விசாரணையில், காரின் முன் பகுதியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து நேரிட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இக்கோர விபத்து கேரளா மற்றும் தென் மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மருத்துவ உலகில் பெரு வியப்பு: 5 நாட்கள் போராடி 4 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த பெண்!
சனி 16, மே 2026 5:24:58 PM (IST)

பிரதமரின் வேண்டுகோளை மீறி வாகன ஊர்வலம்: பாஜக பிரமுகர் மீது ம.பி முதல்வர் நடவடிக்கை
சனி 16, மே 2026 12:44:51 PM (IST)

போர் பதற்றங்களுக்கு இடையிலும் உயர்ந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி: ரிசர்வ் வங்கி அறிக்கை
சனி 16, மே 2026 12:21:02 PM (IST)

மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தோல்வி : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாடல்!
சனி 16, மே 2026 8:32:00 AM (IST)

அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு!
வெள்ளி 15, மே 2026 12:44:50 PM (IST)

செப்.30 வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு உத்தரவு
வெள்ளி 15, மே 2026 12:03:01 PM (IST)



மக்கள்மே 17, 2026 - 12:10:12 PM | Posted IP 162.1*****