» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 2ஆயிரத்தை கடந்தது : மீட்பு பணிகள் தீவிரம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:05:38 AM (IST)

மியான்மர் நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்தது. ஒரே மசூதியில் தொழுகை நடத்திய 700 முஸ்லிம்கள் புதைந்த தகவல் வெளியாகி உள்ளது.
மியான்மர் நாட்டின் 2-வது பெரிய நகரான மண்டலேவில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் மண்டலே நகரம் உருக்குலைந்தது. பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. ஏராளமானவர்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.
சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து முடங்கியது. நாட்டின் முக்கிய அணை, பழமையான அரண்மனை, விமான நிலையங்களும் சேதங்களை எதிர்கொண்டன. முதல் நாளில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் மறுநாள் பலி எண்ணிக்கை 1600-ஐ கடந்தது.
மியான்மரில் ராணுவ ஆட்சியால் மக்கள் திண்டாடி வந்த நிலையில், நிலநடுக்கமும் அவர்களை உலுக்கியதால், உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை அறிவித்தன. இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீட்பு குழுவினரையும், நிவாரண பொருட்களையும் அனுப்பி வைத்தது. இதற்கிடையே மியான்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது.
அதே நேரத்தில் மீட்பு பணிகளும் முழுவீச்சில் நடந்து வந்தன. இந்த நிலையில் மூன்றாவது நாளாக நடந்த மீட்பு பணியில் நிலநடுக்கத்துக்கு பலியானாவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்து விட்டதாக அந்த நாட்டின் ராணுவ அரசாங்கம் நேற்று அறிவித்தது. மேலும் 3 ஆயிரத்து 400 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும், இன்னும் 300 பேர் மாயமாகி இருப்பதாகவும் ராணுவ அரசின் செய்தி தொடர்பாளர் ஜாவ் மின் துன் கூறினார்.
இதற்கிடையே மசூதியில் தொழுகை நடத்திய 700 முஸ்லிம்கள் நிலநடுக்கத்தில் இறந்ததாக தகவல் வெளியானது. முஸ்லிம்களுக்கு ரமலான் மாத வெள்ளிக்கிழமைகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், நிலநடுக்கம் ஏற்பட்ட அன்றும், மண்டலே நகருக்கு அருகே ஒரு மசூதியில் சுமார் 700 பேர் கூடி தொழுகை நடத்திக் கொண்டு இருந்தனர். பூகம்பம் தாக்கியதில் மசூதி கட்டிடம் இடிந்து தொழுகையில் இருந்தவர்கள் மீது விழுந்து அமுக்கியது. அவர்கள் அனைவரும் பலியானது மீட்பு பணியின்போது தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த உயிரிழப்புகள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பலி எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டு உள்ளதா என்பது பற்றி தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த பூகம்பத்தில் மியான்மரில் 60 மசூதிகள் சேதம் அடைந்தன என்று ஒரு இணைய ஊடகம் தகவல் வெளியிட்டது. வீடியோ காட்சிகளையும் வெளியிட்டது.
இதேபோல மண்டலேவின் உ ஹ்லா தீன் மடாலயத்தில் 270 துறவிகள் மத தேர்வில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது நிலநடுக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70 பேர் தப்பிப் பிழைத்தனர். மற்றவர்கள் மாயமான நிலையில் 50 பேர் இறந்தது தெரியவந்தது. 150 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘குட் லேப்’ எனும் செயற்கை அறிவு தொழில்நுட்பம் மூலம் மண்டலே நகரின் செயற்கைக்கோள் படங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. அந்த ஆய்வு முடிவில் 515 கட்டிடங்கள் 80 முதல் 100 சதவீத சேதத்தை எதிர்கொண்டதாக தெரியவந்தது. 1,524 கட்டிடங்கள் 20 முதல் 80 சதவீதம் வரை சேதம் அடைந்துள்ளது. மேலும் 180,004 கட்டிடங்கள் 20 சதவீதத்துக்கும் குறைவான சேதத்தை சந்தித்தன என்று கணித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை : அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
புதன் 2, ஏப்ரல் 2025 12:18:53 PM (IST)

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து சிதறி தீ விபத்து : 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
புதன் 2, ஏப்ரல் 2025 8:30:26 AM (IST)

துபாயில் யூத மத குரு படுகொலை வழக்கு: 3 பேருக்கு மரண தண்டனை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 11:53:15 AM (IST)

அமெரிக்காவில் பல மாகாணங்களை பந்தாடிய பனிப்புயல்: இயல்புவாழ்க்கை பாதிப்பு
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 8:11:12 AM (IST)

ரஷ்ய அதிபர் புதினின் பாதுகாப்பு அணிவகுப்பில் கார் வெடித்து சிதறியது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
திங்கள் 31, மார்ச் 2025 8:26:34 AM (IST)

மியான்மரில் கடுமையான நிலநடுக்கம்: 704 பேர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கானோர் காயம்!
சனி 29, மார்ச் 2025 11:16:32 AM (IST)
