» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூட்டுறவு வாரவிழாவில் ரூ.20 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்

வெள்ளி 17, நவம்பர் 2023 12:20:09 PM (IST)



திருநெல்வேலியில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் 1724 பயனாளிகளுக்கு ரூ. 20 கோடியே 1 இலட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்து கூட்டுறவு உறுதிமொழியினை ஏற்று 1724 பயனாளிகளுக்கு ரூ. 20 கோடியே 1 இலட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு பல்வேறு தொழில் நிறுவனங்களை கொண்டு வந்து அதன் மூலம் பல்வேறு வேலை வாய்ப்புகள் வழங்கி தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, இந்தாண்டு 7 இலட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கூட்டுறவுத்துறை மூலம் கிராம மக்கள், குக்கிராம மக்கள், மலைவாழ் மக்கள், காணி மக்கள் அவர்களுடைய வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. கூட்டுறவுத்துறை மிகவும் முக்கியமான துறையாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் 11 வகையான கூட்டுறவு நிறுவனங்கள் என மொத்தம் 176 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். 

கூட்டுறவுத்துறையின் வரலாற்றில் முதன் முறையாக பயிர் கடன் அளவு இலக்கான ரூபாய் 12,000கோடியினை தாண்டி 2022-2023 ஆம் ஆண்டில் 1743874 விவசாயிகளுக்கு ரூ.13443.14 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் அக்டோபர் 2023 முடிய பயிர் கடன்களாக 4988 உறுப்பினர்களுக்கு ரூ.6519.36 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நடப்பாண்டில் அக்டோபர் 2023 முடிய நகைக்கடனாக 61330 நபர்களுக்கு ரூ.295.53 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு கடனாக 2224 நபர்களுக்கு ரூ.14.85 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய கால கடனாக 132 நபர்களுக்கு ரூ.1.42 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவி குழுக் கடனாக 905 குழுக்களுக்கு ரூ.76.09 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் மற்றும் வீட்டு வசதி கடனாக 251 நபர்களுக்கு ரூ.10.90 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி கடனாக 104 நபர்களுக்கு ரூ.49.00 இலட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது. வேலை பார்க்கும் மகளிர் மற்றும் தொழில் முனைவோர் கடனாக 225 நபர்களுக்கு ரூ.85.20 இலட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவணிகர்கள் கடனாக 1402 நபர்களுக்கு ரூ.1.69 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ மற்றும் விவசாயிகளுக்கு தானிய ஈட்டின் பெயரில் வழங்கப்படும் கடன் என மொத்தம் 77162 நபர்களுக்கு 18 வகையான கடன்கள் ரூ.609.44 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவுத்திட்டத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான ரவை, சம்பா ரவை, மற்றும் சேமியா ஆகியவை கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு சம்மந்தபட்ட நியாய விலை கடைகள் மூலமாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டுறவு துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி மலை வாழ் மக்களின் பொருளாதாரத்தினை உயர்த்தும் பொருட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் காணிக்குடியிருப்பு வனப்பகுதியில் கூட்டுறவு சங்கம் பதிவு செய்யப்பட்டு 26.04.2023 முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் நடமாடும் ஏ.டி.எம். வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனம் மூலம் 78 பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றனர். இதன் மூலம் அரசு துறை சேவைகள் ஆன பட்டா, சிட்டா, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் சமூகநலத்துறை சேவைகள் ஆகியவைகள் மின் ஆளமை வழியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 45856 சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இன்றைய விழாவில் 1724 பயனாளிகளுக்கு 20 கோடியே 1 இலட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என நிதி மற்றும் மனித மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சொந்த தயாரிப்பில் வாகை மரச்செக் மூலம் எடுக்கப்பட்ட சுத்தமான பொருநை தேங்காய் எண்ணெய் முதல் விற்பனையை நிதி மற்றும் மனித மேலாண்மைத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகக் சிறு கூட்டரங்கில், நடந்த நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 9 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை நிதி மற்றும் மனித மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏ.அழகிரி, திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மா.உமாமகேஸ்வரி, துணைப்பதிவாளர் ஜி.சுப்பையா, திருநெல்வேலி கூட்டுறவு பேரங்காடி தலைவர் திரு பல்லிக்கோட்டை செல்லத்துரை, துணைப்பதிவாளர்கள் வ.மனோகரன், மு.கார்த்திக் கௌதம், செல்வி ரா.சக்திபெமிலா மற்றும் அரசு அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory