» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குமரியில் இடைவிடாது சாரல் மழை: திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
திங்கள் 20, நவம்பர் 2023 8:03:44 PM (IST)

குமரியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, சிற்றாறு-1 அணைகளில் இருந்து மீண்டும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
வடகிழக்கு பருவ மழை கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிரமாகப் பெய்து வருகிறது. இதில் குறிப்பாக நேற்று முன்தினம் இந்த மழை அணைப் பகுதிகளில் இடிமின்னலுடன் கொட்டியது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து நாகர்கோவில் கன்னியாகுமரி, குலசேகரம், திற்பரப்பு, களியல், கடையாலுமூடு, ஆலஞ்சோலை, ஆறுகாணி, நெட்டா, திருந்திக்கரை, பொன்மனை, சுருளகோடு, தடிக்காரன்கோணம், சித்திரங்கோடு, வலியாற்றுமுகம், திருவரம்பு உள்பட மாவட்டம் முழுவதும் சூரியனையே பார்க்க முடியாத அளவு சாரல் மழை பெய்தது. இதேபோல் அணை பகுதிகளிலும் மழை நீடித்தது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு உள்ளே வரும் கோதையாறு, மயிலாறு, கிளவியாறு, சாத்தையாறு போன்ற ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது.
இதனால் சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் 16 அடியைக் கடந்த நிலையில் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை சிற்றாறு 1 அணையிலிருந்து வினாடிக்கு 129 கன அடி உபரிநீர் மறுகால் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. சிற்றாறு 1 அணையில் உபரிநீர் திறப்பது இந்த ஆண்டு 4-வது முறையாகும்.
இதே போன்று பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44 அடியைக் கடந்த நிலையில் காலை 11 மணிக்கு அணையின் மறுகால் மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 100 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் திறப்பது இது இரண்டாவது முறையாகும்.
மழை மற்றும் சிற்றாறு, பேச்சிப்பாறை அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் சிற்றாறு, கோதையாறு, குழித்துறை, தாமிரபரணியாறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. மேலும் திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகமாகி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அருவியில் தண்ணீரின் இயல்பான நிறம் மாறி கலங்கலாக வந்து கொண்டிருகிறது. அதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி நேற்று மதியம் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அவசரமாக கரையேறினர்.
அதே சமயம் அணைகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீரை தேக்காமல் கூடுதலாக வரும் தண்ணீரை பொதுப்பணித்துறையினர் வெளியேற்றி வருகிறார்கள். எனவே ஆறுகளின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக களியலில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதே போல கொட்டாரம்-25, குழித்துறை-9.2, மயிலாடி-4.2, புத்தன்அணை-4, தக்கலை-9.4, பாலமோர்-2.4, திற்பரப்பு-31.4, அடையாமடை-7.1, முள்ளங்கினாவிளை-4.2, ஆனைக்கிடங்கு-13 என்ற அளவில் மழை பெய்திருந்தது. அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை-58.4, பெருஞ்சாணி-4.8, சிற்றார் 1-32, சிற்றார் 2-42, மாம்பழத்துறையாறு-12, முக்கடல்-20 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 22, அக்டோபர் 2025 11:18:02 AM (IST)

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2¼ அடி உயர்ந்தது!
புதன் 22, அக்டோபர் 2025 8:55:10 AM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைப்பு: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:09:49 PM (IST)

சாராயம் குடித்ததைப் போல ஆடாதீர்கள்: ரசிகர்களுக்கு மாரி செல்வராஜ் அட்வைஸ்!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 3:39:28 PM (IST)

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:12:10 AM (IST)
