» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தீபாவளி தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்!
சனி 5, அக்டோபர் 2024 3:32:27 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக பட்டாசுகள் கடைகள் வைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்டத்தில் 31-10-2024 அன்று தீபாவளி பண்டிகையையொட்டி வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற 19-10-2024 வரை (https://www.tnesevai.tn.gov.in)- அவ்வாறு விண்ணப்பிக்கும்போது கீழ்க்கண்ட ஆவணங்களை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
* கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான புளு பிரிண்ட் வரைபடம்
* கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் (அ) வாடகை கட்டடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப் பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம்.
* உரிமத்திற்கான கட்டணம் ரூ.500/-ஐ அரசுக் கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான்.
* இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் அட்டை / வாக்காளர் அடையாள அட்டை / குடும்ப அட்டை)
* வரி ரசீது
* புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ்).
எனவே மேற்கூரிய வழிமுறைகளை கடைபிடித்து தற்காலிக பட்டாசு உரிமம் வேண்டுவோர் வரும் 19-10-2024-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தங்களின் ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை முடிவு பெற்றவுடன் ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடனும், தற்காலிக உரிமத்தின் ஆணையினை தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்யலாம்.
மேற்கண்ட தேதிக்கு பின் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும், நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழி முறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்நேர்வில் தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறும் விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிட ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.