» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பட்டா மாறுதலுக்கு ரூ.10 லட்சம் மோசடி: போலி பெண் அதிகாரி கைது; ஏட்டுவும் சிக்கினார்!
ஞாயிறு 6, அக்டோபர் 2024 10:43:20 AM (IST)
பட்டா மாறுதலுக்கு ரூ.10 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக போலி பெண் அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த போலீஸ் ஏட்டுவும் சிக்கினார்.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள கீழக்கலங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகராஜ் (வயது 41). இவர் நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் ஏட்டுவாக வேலை செய்து வருகிறார். இதனால் இவர் தனது குடும்பத்தினருடன் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் வசித்து வருகிறார்.
இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த வளர்மதி (40) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வளர்மதி பாளையங்கோட்டை மகாராஜநகரில் வாடகை வீட்டில் குடியேறினார்.
இதற்கிடையே வளர்மதி, தன்னை மாவட்ட வருவாய் அலுவலர் என்று கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அதாவது நிலத்துக்கு பட்டா பெற்றுத்தருவதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளார்.
இந்த நிலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான சசிகுமார் (40) என்பவர் ஒரு நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய முயற்சி செய்துள்ளார். இதையறிந்த முருகராஜ், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் என்று கூறி வளர்மதியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர் நெல்லையைச் சேர்ந்தவர் என்றும், அவரிடம் பணம் கொடுத்தால் பட்டா மாறுதல் செய்து தந்து விடுவார் என்றும் கூறி உள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய சசிகுமார் பட்டா மாறுதல் செய்ய வளர்மதியிடம் ரூ.10 லட்சத்தை கொடுத்தார். ஆனால் பல மாதங்களாகியும் பட்டா மாறுதல் செய்யவில்லை. இதுகுறித்து வளர்மதியிடம் கேட்டும் எந்த பயனும் இல்லை. அவரிடம் பணத்தை திரும்ப கேட்டபோதும் கொடுக்கவில்லை.
இதுகுறித்து சசிகுமார், போலீஸ் ஏட்டு முருகராஜிடம் தெரிவித்தார். மேலும் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு தொடர்ந்து கேட்டு வந்தார். இதையடுத்து முருகராஜ் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை சசிகுமாரிடம் வழங்கினார். அந்த காசோலை மூலம் பணம் எடுப்பதற்காக வங்கியில் செலுத்தியபோது, அந்த வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியது.
இதையடுத்து வளர்மதி, முருகராஜ் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து சசிகுமார் விசாரித்தார். அப்போது வளர்மதி போலி மாவட்ட வருவாய் அலுவலர் என்பதும், அவர் முருகராஜூடன் சேர்ந்து ரூ.10 லட்சத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகுமார் இதுகுறித்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் விசாரணை நடத்தினார். விசாரணையில், வளர்மதி, முருகராஜ் ஆகியோர் சேர்ந்து இதுபோல் பலரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வளர்மதி, முருகராஜ் ஆகியோரை நேற்று அதிரடியாக கைது செய்தனர். கைதான வளர்மதி மீது தேவர்குளம், பெருமாள்புரம் உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் புகார்கள் உள்ளன என்றும் போலீசார் தெரிவித்தனர்.