» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி ஆய்வு

புதன் 16, அக்டோபர் 2024 4:16:11 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.
 
திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அரசின் அறிவுரைகளின்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்துத் துறை வாரியாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சி மனகாவலம்பிள்ளை நகர் மருத்துவமனை புதிய கால்வாய் பணிகள், மாநகராட்சி அலுவலகத்தில் பேரிடர்களின் பயன்படுத்தக்கூடிய இயந்திரங்களின் நிலை, நெல்லை கால்வாய் தூர்வாரும் பணிகள், கோபாலசமுத்திரம் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகள், சேரன்மகாதேவி, முக்கூடல், கொலுமடை பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் /தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், ஆகியோர் இன்று (16.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

திருநெல்வேலி மாநகராட்சியின் மூலம் வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மனக்காவலம்பிள்ளை நகர் பகுதியில் உள்ள சுகாதார மையம் வளாகத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் சுகாதார மையத்தின் இருபுறமும் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழை நீர் கால்வாய் பணிகளையும், திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் இயற்கை பேரிடர் காலங்களில் பயன்படுத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் மற்றும் மீட்பு பொருட்களின் நிலை குறித்தும், திருநெல்வேலி டவுண் குன்னத்தூர் சாலை பகுதியில் நெல்லை கால்வாயில் அமலைச் செடிகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதையும், பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். 

மேலும், சேரன்மகாதேவி வட்டம், கோபாலசமுத்திரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாளையங்கால் வாய்கால் கரைகளை நிரந்தர வெள்ள தடுப்புத் திட்டத்தின் கீழ் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினையும், சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பேரிடர் காலங்களில் பயன்படுத்துவதற்காக அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கம்புகள், கொசு மருந்து தெளிப்பான் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்டதோடு, முக்கூடலில் பருவமழை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். 

தொடர்ந்து, கொழுமடை பகுதியில் கன்னடியன் கால்வாயில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட அதி கனமழை வெள்ளத்தினால் உடைப்பு ஏற்பட்டு, தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாடு அரசின் ஆணையின்படி, நிரந்தர வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் கால்வாய் உடைப்புகள் கான்கிரீட் சுவராக கட்டப்பட்டு, நிரந்தரமாக சரிசெய்யப்பட்டு, சீராக விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். 
 
ஆய்வில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் என்.ஓ.சுகபுத்ரா, துணை மேயர் கே.ஆர்.ராஜீ, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.அம்பிகா ஜெயின், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, நீர்வளத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண் அடித்துக் கொலை: கணவர் வெறிச்செயல்!

வியாழன் 17, அக்டோபர் 2024 8:56:49 AM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory