» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை மாவட்டத்தில் 4,94,167 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு : ஆட்சியர் துவக்கி வைத்தார்
வியாழன் 9, ஜனவரி 2025 5:15:45 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 4,94,167 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜநகர் அரசு அலுவலர் வீட்டுவசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நியாயவிலைக்கடையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இன்று (09.01.2025) தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கிறித்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த், முன்னாள் சட்டமன்ற பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்கள்.
அதனடிப்படையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை வாயிலாக 700 நியாயவிலைக்கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 97 நியாயவிலைக்கடைகளும், மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக 4 நியாயவிலைக்கடைகள் என 801 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அரிசி குடும்ப அட்டைகள் மற்றும் இலங்கைத்தமிழர் குடும்பங்கள் என மொத்தம் 4,94,167 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், இன்றுமுதல் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி வழங்குவதற்கு ஏதுவாக முதல் நாளில் காலை 100 பேருக்கும், மதியம் 100 பேருக்கும் விநியோகிக்கப்படவுள்ளது. தொடர்ந்து, கடையின் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டாம் நாள் முதல் 150 அல்லது 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.மு.முருகேசன், இணைப்பதிவாளர் –செயலாட்சியர் (திருநெல்வேலி) நா.திலீப்குமார், பாளையங்கோட்டை மண்டல தலைவர் எம்.பிரான்சிஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு லுவலர் சொ.பாக்கியலெட்சுமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மண்டல மேலாளர் வே.காண்டீபன், துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) மு.கார்த்திக் கௌதம், மாநகராட்சி 39-வது வார்டு உறுப்பினர் சீதாபாலன், துணைப் பதிவாளர்கள் சுப்பையா, ராஜேஷ்வரன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் வின்சென்ட், பொன்ராஜ், சங்கர், சந்தனம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.