» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திங்கள் 17, மார்ச் 2025 12:06:15 PM (IST)

நெல்லையில் பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் உடல் நலக்குறைவால் காலமானார்.  அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் (64) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இதையடுத்து இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாறும்பூநாதன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். நாறும்பூநாதன் நெல்லை வட்டாரத்தை மையப்படுத்திய தனது இலக்கியப் படைப்புகளாலும், சமூகச் செயற்பாடுகளாலும் நன்கு அறியப்பட்ட முற்போக்கு இயக்க எழுத்தாளராக விளங்கியவர் ஆவார். நமது அரசு நடத்தும் பொருநை இலக்கியத் திருவிழாவிலும் அவர் மிக முக்கியப் பங்காற்றினார் என்பதை நன்றியோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.

நாறும்பூநாதன் இலக்கியப் பங்களிப்புகள், சமூகச் செயற்பாடுகள், பள்ளி மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவதற்கான அவரது முன்னெடுப்புகள் ஆகிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி அவருக்கு 2022-ம் ஆண்டுக்கான உ.வே.சா. விருதினை நமது அரசின் சார்பில் வழங்கியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துயர்மிகு தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கும், அரசியல் -இலக்கியத் துறை நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்தவர் நாறும்பூநாதன் (65). பிரபல எழுத்தாளரான இவர் தற்போது நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகரில் வசித்து வந்தார்.  அவரது மறைவுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாறும்பூநாதன் இறுதிச்சடங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகியான நாறும்பூநாதன், வேணுவன மனிதர்கள், திருநெல்வேலி (நீர்-நிலம்-மனிதர்கள்), இலை உதிர்வதைப் போல் உள்ளிட்ட சிறுகதைகள், கட்டுரைகள் என பல நூல்களை எழுதியுள்ளார்.

இதுதவிர வங்கியிலும் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அந்த வேலையில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டு முழு நேர எழுத்தாளராக மாறினார். இவர் இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வந்தார். இவருக்கு தமிழக அரசு 2022-ம் ஆண்டு உ.வே.சா விருது வழங்கி கவுரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory