» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கார்கள் நேருக்கு நேர் மாேதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பலி
திங்கள் 28, ஏப்ரல் 2025 9:06:47 AM (IST)
ள்ளியூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மாேதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று மாலையில் காரில் சிலர் புறப்பட்டு சென்றனர். வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரம் கீழூர் பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக நாற்கரசாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் கார் பயங்கரமாக மோதியது. பின்னர் நாற்கரசாலையின் வலதுபுறத்தில் குறுக்கே கார் பாய்ந்தது.
அப்போது அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் இரு கார்களும் அப்பளம் போன்று நொறுங்கின. கார்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஏர்வாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
காரின் இடிபாடுகளை அகற்றி படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 7 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் நெல்லை பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரத்தைச் சேர்ந்த தனுஷ்லாஸ் (65), அவருடைய மனைவி மார்க்ரெட் மேரி (60), இவர்களுடைய மகன் ஜோபர்ட் (40), இவருடைய மனைவி அமுதா (35), இவர்களுடைய மகன் ஜோஹன், பெண் குழந்தை ஆகிய 6 பேரும் பரிதாபமாக இறந்தனர்.மேலும் மற்றொரு காரில் இருந்த கூடங்குளம் அருகே கண்ணங்குளத்தைச் சேர்ந்த மெல்கிஸ் (50) என்பவரும் உயிரிழந்தார்.
விபத்தில் பலத்த காயமடைந்த கூடங்குளம் அருகே கண்ணங்குளத்தைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி அன்பரசி (36), அவர்களுடைய மகன்கள் பிரவின் (10), அசின் (8), உறவினர்களான அட்சயாதேவி (19), தாணுமூர்த்தி மனைவி பாலகிருஷ்ணவேணி (36), அவருடைய மகள் பிரியதர்ஷினி (23), மகன் சுபி சந்தோஷ் (21) மற்றும் டக்கரம்மாள்புரத்தைச் சேர்ந்த ஜோபர்ட்டின் மற்றொரு மகள் ஆகிய 8 பேரையும் நாகர்ே்காவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் படுகாயமடைந்த மாரியப்பனை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக நெல்லை- நாகர்கோவில் நாற்கரசாலையில் சுமார் 1 மணி ேநரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தனுஷ்லாஸ், மெல்கிஸ், ஜோபர்ட் மகள் ஆகிய 3 பேரின் உடல்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. மார்க்ரெட் மேரி உள்ளிட்ட 4 பேரின் உடல்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
தனுஷ்லாசின் பூர்வீக ஊர், கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் செம்மண்விளை ஆகும். கட்டிட காண்டிராக்டரான இவர் நேற்று குடும்பத்துடன் பூர்வீக ஊருக்கு சென்று விட்டு உறவினர்களை பார்த்து விட்டு வந்தபோது விபத்து நிகழ்ந்தது.
இதேபோன்று மெல்கிஸ் உறவினர்களுடன் காரில் மதுரையில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு நெல்லை வழியாக திரும்பியபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. வள்ளியூர் அருகே கார்கள் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்ததால் டக்கரம்மாள்புரம், கண்ணங்குளம், செம்மண்விளை பகுதிகள் சோகத்தில் மூழ்கின.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடுகள் இழப்பிற்கான இழப்பீடு நிதியுதவி: ஆட்சியர் சுகுமார் வழங்கினார்
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:56:46 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி மது விற்பனைக்கு தடை : ஆட்சியர் உத்தரவு
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:36:09 PM (IST)

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:35:26 PM (IST)

ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் : ஆட்சியர் தகவல்
திங்கள் 28, ஏப்ரல் 2025 10:30:19 AM (IST)

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)

நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 26, ஏப்ரல் 2025 3:26:36 PM (IST)
