» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தனியார் கல்லூரியில் பாலியல் தொல்லை புகார்: பேராசிரியரை தாக்கிய மாணவர்கள் 4 பேர் கைது!

சனி 11, அக்டோபர் 2025 10:25:46 AM (IST)

சேரன்மாதேவியில் தனியார் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பேராசிரியரை தாக்கிய 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் ஸ்காட் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சமீபத்தில் ‘இண்டஸ்ட்ரியல் விசிட்’ என்ற பெயரில் இந்த கல்லூரியில் இருந்து மாணவ, மாணவிகள் பேராசிரியர் ஒருவரின் தலைமையில் சில இடங்களுக்கு சுற்றுலாவுக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

அப்போது அந்த பேராசிரியர், ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சுற்றுலா முடிந்து கல்லூரிக்கு வந்ததும், மாணவி இதுகுறித்து சக மாணவிகளிடம் கூறியுள்ளார். இந்த தகவல் கல்லூரி முழுவதும் பரவிய நிலையில், நேற்று முன்தினம் மாணவர்கள் சிலர் சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அவரை மாணவர்கள் கும்பலாக சேர்ந்து சரமாரி தாக்கினர். தகவலறிந்ததும் சேரன்மாதேவி போலீசார் விரைந்து சென்றனர். விசாரணைக்காக 4 மாணவர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணை முடிவில் பேராசிரியரை தாக்கியதாக 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அவர்களை கைது செய்தனர்.

மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று காலையில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சேரன்மாதேவி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகளிடம் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

இதையடுத்து மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட 4 மாணவர்களையும் போலீசார் நேற்று மாலையில் சேரன்மாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையறிந்த மாணவர்களின் பெற்றோர் நீதிமன்றத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தங்களின் மகன்களை கைது செய்தது ஏன்? எனக்கூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory