» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை ஜாமீன் மனு மீது நவ.27ல் விசாரணை!

திங்கள் 24, நவம்பர் 2025 5:19:39 PM (IST)



மென்பொறியாளர் கவின் ஆணவ படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் தந்தை ஜாமீன் கோரிய வழக்கு மீதான விசாரணையை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மென்பொறியாளர் கவின் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் சுர்ஜித்தின் தந்தை சரவணன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை அது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.

சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இந்த வழக்கில் எனக்கு இல்லை. இந்த வழக்கில் ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆகவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சம்பவம் நிகழ்ந்த அன்று பணியில் தான் இருந்தார். மனுதாரர் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

சிபிசிஐடி தரப்பில், ‘மனுதாரர் சம்பவம் நடந்த நாளில் பணியில் இல்லை. விடுமுறையில் இருந்திருக்கிறார். கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மனுதாரர் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. இதனால் ஜாமீன் வழங்கக் கூடாது’ எனக் கூறப்பட்டது.

கொலையான கவின் தாயார் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘மனுதாரரின் தலையீடு காரணமாக எனது புகார் தாமதமாகவே விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கில் கூடுதல் வாதங்களை முன்வைக்க கூடுதல் அவகாசம் வேண்டும்’ எனக் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணையை நவ.27-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory