» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் 1873 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்!

திங்கள் 5, ஜனவரி 2026 8:36:39 PM (IST)



திருநெல்வேலியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தில் 1873 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில் உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு முதல்கட்டமாக மடிக்கணினிகள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தலைமையில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலையில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் "உலகம் உங்கள் கையில்” என்னும் மாபெரும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
 
இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற "உலகம் உங்கள் கையில்” என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. 

முதல் கட்டமாக அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் கட்டமாக மொத்தம் 24 கல்லூரிகளை சார்ந்த 9374 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கடிணினிகள் வழங்கப்படவுள்ளது. 

இன்றையதினம் முதல் கட்டமாக திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரி,, அண்ணா பல்கலைக்கழகம், அம்பை கலை கல்லுரி, திருநெல்வேலி தட்சண மாற நாடார் சங்க கல்லூரி, ராதாபுரம் அரசு தொழில் பயற்சி நிறுவனம், திசையன்விளை அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், திருநெல்வேலி, அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், அம்பாசமுத்திரம் அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவமனை, கல்லுரியிலிருந்து 1873 மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு அரசின் "உலகம் உங்கள் கையில் திட்டத்தில்" மடிக்கணினிகள் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். மீதமுள்ள கல்லூரி மாணாக்கர்களுக்கும் தொடர்ந்து மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

"கல்வி அனைவருக்கும், உயர்வு ஒவ்வொருவருக்கும்” என்ற நோக்கத்துடன் தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த டெல், ஏசர், எச்பி போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக்கணினிகளில் 8 ஜிபி ராம், 256 ஜிபி எஸ்எஸ்டி உள்ளிட்ட மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக எம்எஸ் ஆபிஸ் 365, மேலும் "அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்” என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது.

அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகள், கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி ஆதாரமாக உதவுகின்றன. டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறை, மென்பொருள் உருவாக்கம், தரவு உள்ளீடு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல், வரைகலை வடிவமைப்பு, குறியிடுதல், வலை வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு கருவிகள், சுயாதீன வேலை போன்ற துறைகளில் "புதிய வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை” என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட உதவுகிறது. இதனால் குடும்ப வருமானம் உயர்ந்து, கிராம-நகர இடைவெளி குறைந்து, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில் முயற்சிகளும் உருவாகும் வாய்ப்பு அமையும் என தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் பி.லதா, மடிக்கணினி ஒருங்கிணைப்பாளர் முனைவர் பேராசிரியர் செ.மெய்யராஜ், அமைப்பியல் துறை தலைவர், இயந்திரவியல் துறைத் தலைவர் முனைவர் பேராசிரியர் தே ஜெபகனி மற்றும் பல்வேறு ஆசிரியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள், அடிப்படைப் பணியாளர்கள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory