» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்

புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)



தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பைத் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மண்டல அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு இன்று (11.03.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமார் இப்பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்காக மொத்தம் 155 மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியர் வழங்கிய அறிவுறுத்தல்கள் பின்வருமாறு:

இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை எவ்வித சுணக்கமுமின்றி முறையாகப் பின்பற்ற வேண்டும். மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் சோதனை ஓட்டம் (Mock Drill) மேற்கொண்டு, தூரம் மற்றும் வழித்தடங்களைக் கண்டறிய வேண்டும். மேலும், வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, குறைபாடுகள் இருப்பின் உள்ளாட்சித் துறை மூலம் சரிசெய்ய வேண்டும்.

தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் பணிகளை மிகுந்த கவனத்துடன் தொடங்க வேண்டும். பதற்றமான மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ள வாக்குச்சாவடிகள் குறித்து முன்கூட்டியே முழுமையாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறை குறித்து அளிக்கப்பட்ட பயிற்சிகளை முறையாகச் செயல்படுத்த வேண்டும். வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள், வாக்குப்பதிவு நாள் மற்றும் நிறைவு நாளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தபால் மூலம் வாக்களிப்பது குறித்துத் தகுந்த செயல்திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். பயிற்சி வகுப்பின் இறுதியில், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேடுகள் மண்டல அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் அனிதா (பொது), சுப்பிரமணியன் (தேர்தல்), தேர்தல் வட்டாட்சியர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory