» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மருத்துவமனை லிஃப்ட்டில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!

வியாழன் 18, ஜூன் 2026 8:27:23 AM (IST)

வண்ணார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை லிஃப்ட்டில் இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநரை, நெல்லை மாநகரின் புதிய 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படையினர் அதிரடியாகப் பிடித்துப் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

நெல்லை மாநகரப் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்யும் விதமாக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் தங்களுக்கு ஏதேனும் அவசரப் ஆபத்து அல்லது அத்துமீறல் ஏற்பட்டால் உடனடியாக தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் மாநகரக் காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படையினரை அவசரக் கட்டுப்பாட்டு எண் மூலம் தொடர்பு கொண்டு, தனக்கு நேர்ந்த அவதி குறித்துப் புகார் அளித்தார். அவர் கொடுத்த துல்லியமான முகவரியை வைத்துச் சம்பவ இடத்திற்கு அதிரடிப்படையினர் சில நிமிடங்களிலேயே விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, அந்த இளம்பெண் தனது நெருங்கிய உறவினர் ஒருவரின் அவசரச் சிகிச்சைக்காக நெல்லை வண்ணார்ப்பேட்டையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு தரைத்தளத்தில் இருந்து மேல் தளத்திற்குச் செல்வதற்காக அவர் மருத்துவமனை 'லிஃப்ட்'டில் ஏறியபோது, உள்ளே இருந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் மிக மோசமாகப் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு அத்துமீறியது விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அதிரடிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில், பெண்களிடம் அத்துமீறிய அந்த நபர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (49) என்பதும், அவர் அதே தனியார் மருத்துவமனையில் தற்காலிக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக (Ambulance Driver) வேலை பார்த்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்துத் தங்களிடம் சிக்கிய பாஸ்கரை அதிரடியாகக் கைது செய்த 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படையினர், அவரைப் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்படி ஒப்படைத்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் பாஸ்கர் மீது பெண்க வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையிலடைத்தனர்.

நெல்லை மாநகரில் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்ட பிறகு பதிவு செய்யப்பட்டுள்ள முதல் அதிகாரப்பூர்வ வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் நெல்லை மற்றும் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory