» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சென்னை-நாகர்கோவில் வழித்தடத்தில் 100% முன்பதிவு: 2025-2026 நிதியாண்டில் 803.86 கோடி வருவாய்!

புதன் 1, ஜூலை 2026 8:14:04 PM (IST)



தெற்கு ரயில்வேயின் கீழ் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் மூலம் கடந்த 2025-2026 நிதியாண்டில் ₹803.86 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு ரயில்வேயின் கீழ் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் மொத்தம் 24 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளிடையே நிலவும் பெரும் வரவேற்பு காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு இவற்றின் வருவாயும் பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 2024-2025 நிதியாண்டில் 54.12 லட்சம் பயணிகள் பயணித்ததன் மூலம் ₹540.65 கோடி வருவாய் ஈட்டப்பட்டிருந்தது. அதுவே, கடந்த 2025-2026 நிதியாண்டில் பயணிகளின் எண்ணிக்கை 77.38 லட்சமாக உயர்ந்து, ₹803.86 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே ஆகிய முதல் இரண்டு மாதங்களிலேயே 15.21 லட்சம் பயணிகள் பயணித்து ₹162.96 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை எழும்பூர் - நாகர்கோவில், மங்களூரு - திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு - திருவனந்தபுரம் ஆகிய வழித்தடங்களில் 100 சதவீதத்திற்கும் அதிகமான பயணிகள் முன்பதிவு பதிவாகி வருகிறது.

நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயிலில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை 1,788 பயணிகள் பயணித்ததன் மூலம் ₹15.51 லட்சம் வருவாய் கிடைத்தது. அதுவே, ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் பயணிகள் எண்ணிக்கை 3,846 ஆக அதிகரித்து, ₹36.34 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதேபோல் மறுமார்க்கமாக, சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் ஏப்ரல் முதல் ஜூன் வரை 1,501 பயணிகள் மூலம் ₹14.36 லட்சமும், ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 2,832 பயணிகள் மூலம் ₹28.98 லட்சமும் வருவாய் கிடைத்துள்ளது.

பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய புதிய முன்பதிவுத் திட்டம் இமாலய வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின்படி, ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை தொடக்க நிலையத்திலோ அல்லது இடைப்பட்ட ரயில் நிலையங்களிலோ காலியாக உள்ள இடங்களைப் பயணிகள் எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 8 ரயில்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், தற்போது அனைத்து வழித்தடங்களிலும் பயணிகளின் எண்ணிக்கையையும் ரயில்வேயின் வருவாயையும் கணிசமாக உயர்த்தியுள்ளதாகத் தெற்கு ரயில்வே அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory