» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)
திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகவும் வனத்துறை பாதுகாப்பிற்காகவும் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் வனத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, தாமிரபரணி ஆறு மற்றும் வனத்தின் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் அரசு அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வாகன அனுமதி மற்றும் கோவில் தங்கக்கூடிய நாட்கள்:
ஆகஸ்ட் 7 & 8: முன்னேற்பாடு பணிகள் நடைபெறுவதால் அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்கள் என எந்த வாகனமும் பாபநாசம் சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
ஆகஸ்ட் 9 (காலை 6:00 - மாலை 4:00): பக்தர்கள் தங்களது உடைமைகள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல மட்டும் பாபநாசம் சோதனைச் சாவடி வழியே வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
ஆகஸ்ட் 10 முதல் 12 வரை (திருவிழா நாட்கள்): பக்தர்கள் பாரம்பரிய சடங்குகளை மேற்கொள்ளவும், கோவிலில் தங்கி வழிபாடு செய்யவும் அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் அகஸ்தியர்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்துகள் மூலமாக மட்டுமே கோவிலுக்குச் செல்ல முடியும். தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
ஆகஸ்ட் 13: குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்.
ஆகஸ்ட் 14 (காலை 6:00 - மாலை 3:00): மலையிலிருந்து பொருட்களைக் கீழே கொண்டு வருவதற்காக மட்டும் பாபநாசம் கோவில் பார்க்கிங் பகுதியில் 'பாஸ்' வழங்கப்பட்டுத் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும். கீழே இறங்கும் பக்தர்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்.
ஆகஸ்ட் 15 & 16: தூய்மைப் பணிகள் மற்றும் உழவாரப் பணிகள் நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் பாபநாசம் சோதனைச் சாவடியைக் கடக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17 முதல்: வழக்கம்போல் பக்தர்கள் கோவிலுக்குச் சென்று வரலாம்.
தடை உத்தரவுகள் & வழிகாட்டுதல்கள்:
பிளாஸ்டிக் & ரசாயனங்கள் தடை: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், கெமிக்கல் சோப்பு, ஷாம்பு, மண்ணெண்ணெய் மற்றும் மாசு ஏற்படுத்தும் பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
மது, குட்கா போன்றவற்றை வனப்பகுதிக்கு எடுத்துச் செல்லும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
கோவில் தவிர்த்த பிற வனப்பகுதிகளுக்கும், தாமிரபரணி ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கும் செல்ல அனுமதி கிடையாது.
திருக்கோயில் நிர்வாகம் சார்பில் மட்டுமே குடில்கள் அமைக்கப்படும். பக்தர்கள் அதில் மட்டுமே தங்க வேண்டும். தனிநபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். வனப்பகுதியில் தனியாகக் குடில் அமைக்க அனுமதி இல்லை.
திறந்தவெளியில் அசுத்தம் செய்யாமல், திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 250 கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மழைக் குறைவு காரணமாகத் தீ விபத்து அல்லது திடீர் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், வனத்துறை மற்றும் காவல்துறையின் பாதுகாப்பு அறிவுரைகளைப் பின்பற்றி பக்தர்கள் திருவிழாவைச் சிறப்பாக நடத்த ஒத்துழைக்குமாறு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)

இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரத்த தானம் செய்ய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 29, ஜூலை 2026 12:47:15 PM (IST)


