» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

365 நாட்களில் இந்தியாவிற்கே முன்மாதிரி கடற்கரை! – தூத்துக்குடியில் அண்ணாமலை உறுதி!

ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 8:52:03 PM (IST)

annamalaitutyi.jpg

கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரையிலான 175 கிலோமீட்டர் கடற்கரைப் பகுதியை 365 நாட்களில் தூய்மைப்படுத்தி, இந்தியாவிலேயே முன்மாதிரி கடற்கரையாக மாற்றும் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வி தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரையிலான கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடி திரேஸ்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொட்டும் மழையிலும் பொதுமக்களின் உற்சாக வரவேற்புக்கு இடையே அமைப்பின் தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: "ஆகஸ்ட் 1 முதல் கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை சுமார் 175 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையை 365 நாட்கள் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளோம். ஓராண்டுக்குப் பிறகு இந்தியாவிலேயே முன்மாதிரி கடற்கரையாக இதனை மாற்றிக் காட்டுவோம். இது வெறும் ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல; மக்களின் பங்களிப்புடன் தொடர்ந்து நடைபெறும் மக்கள் இயக்கம்.

மேலும், இப்பகுதியில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இன்று நாம் செய்த தூய்மைப் பணிக்குக் கூலியாக வருண பகவான் மழையாக நமக்கு ஆசீர்வாதம் வழங்கியுள்ளார். தூத்துக்குடியில் விரைவில் நடைபெறவுள்ள மாநாட்டில் அரசியல் குறித்து விரிவாகப் பேசுவோம்; இன்று அரசியல் பற்றி பேச விரும்பவில்லை" என்றார்.

முன்னதாக கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணியை முடித்துவிட்டு, அண்ணாமலை தூத்துக்குடி மாநகரில் உள்ள திரேஸ்புரம் பகுதிக்கு வந்தார். அங்கு பொதுமக்கள் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணாமலை மேடையில் பேசத் தொடங்கிய நேரத்தில் திடீரெனப் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. 

AnnamalaiChair.jpg

இருப்பினும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படாமல், மழையையும் பொருட்படுத்தாமல் அண்ணாமலை மேடையிலேயே நின்று உரையாற்றினார். மழைக்கு ஒதுங்கிச் செல்லாத பொதுமக்கள், அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளைத் தலையில் குடைபோலப் பிடித்தபடியும், சிலர் மழையில் நனைந்தபடியும் அவரது பேச்சை ஆர்வமுடன் கேட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory