» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாகக் குடிநீரின்றித் தவிக்கும் கிராம மக்கள்: அதிகாரிகள் அலட்சியம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:41:01 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எட்டயபுரம் அருகே உள்ள குமாரட்டியாபுரம் கிராமத்தில், கடந்த 15 ஆண்டுகளாகக் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், பலமுறை மனு அளித்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
300-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இக்கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரி, எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் என அனைத்துத் தரப்பினரிடமும் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் புறக்கணிப்பு, சுதந்திர தின விழா புறக்கணிப்பு அல்லது சாலை மறியல் போன்ற போராட்டங்களை அறிவிக்கும் போது மட்டும், வட்டாட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு 2 அல்லது 3 நாட்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அதன்பின் மீண்டும் பழைய நிலையே தொடர்வதாகக் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் கிராமத்தில் உள்ள கண்மாய் மற்றும் கிணற்றைத் தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆழ்துளைக் கிணறு மூலம் பெறப்படும் தண்ணீர் கடும் உப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடன் இருப்பதால் அதைக் குடிக்கப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
பெரும்பாலும் விவசாயத்தைச் சார்ந்த வாழும் இக்கிராம மக்கள், விவசாயப் பொய்ப்பால் போதிய வருமானமின்றி விலைக்குத் தண்ணீர் வாங்கிப் பருக முடியாத சூழலில் தவிக்கின்றனர்.
கிராமத்தின் மேற்குப் பகுதியில் 400 மீட்டர் தொலைவில் செல்லும் கோவில்பட்டி - நாலக்கம்பட்டி கூட்டுக் குடிநீர் குழாயில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீரை, மக்கள் கப்புகளில் பிடித்துக் குடங்களில் ஊற்றிப் பயன்படுத்தி வருகின்றனர். பெண்கள் மற்றும் ஆண்கள் தள்ளுவண்டிகளிலும், கைகளிலும் குடங்களைச் சுமந்து கொண்டு சென்று தண்ணீர் எடுத்து வரும் பரிதாப நிலை நீடிக்கிறது.
அதேபோல, சீவலப்பேரி - அருப்புக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் இருந்தோ அல்லது நாலக்கம்பட்டி குடிநீர் இணைப்பில் இருந்தோ தங்கள் கிராமத்திற்கு இணைப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் தொடர்பாக மனு அளித்தால், அதிகாரிகள் கீழ்நிலை ஊழியர்களுக்குப் பரிந்துரைப்பதும், அவர்கள் "கிராமத்திற்குத் தண்ணீர் செல்கிறது" எனப் பொய் அறிக்கை அளித்துத் தப்பிப்பதையுமே வழக்கமாகக் கொண்டுள்ளனர். சில நேரங்களில் 'குமாரட்டியாபுரம்' என்ற கிராமமே இல்லை எனக் கூறுவதாகவும், அதேவேளையில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை மட்டும் அரசு சரியாக வசூலித்துக் கொள்வதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, தமிழக அரசும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் தலையிட்டுத் தங்களின் 15 ஆண்டுகாலக் குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:43:22 PM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்வு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:42:22 AM (IST)

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)


