» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழகத்தில் மக்கள் சேவை அறியும் உரிமைச் சட்டம்: முதலமைச்சருக்கு எம்பவர் இந்தியா கோரிக்கை!

திங்கள் 10, ஆகஸ்ட் 2026 12:00:20 PM (IST)

தமிழ்நாட்டில் மக்கள் சேவை அறியும் உரிமைச் சட்டம், மற்றும் சேவை உரிமை ஆணையம் அமைக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. 

தமிழ்நாட்டில் அரசு சேவைகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொதுமக்கள் பெறுவதை உறுதிசெய்யும் 'மக்கள் சேவை அறியும் உரிமைச் சட்டம்' மற்றும் 'சேவை உரிமை ஆணையம்' அமைப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றக் கோரி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு 'எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம்' சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 'சேவை பெறும் உரிமைச் சட்டம்' நிறைவேற்றப்படும் என்று அரசு அறிவித்ததை நுகர்வோர் அமைப்பினர் வரவேற்றுள்ளனர். இந்தியாவில் முதன்முறையாக 2010-ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் இயற்றப்பட்ட இச்சட்டம், தற்போது 22 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.

ஊழல் ஒழிப்பு, நிர்வாகக் கால தாமதத்தைத் தவிர்த்தல் மற்றும் அரசு அதிகாரிகளின் பொறுப்புடைமையை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இச்சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழ் 3 நாட்கள், வருமானச் சான்றிதழ் 7 நாட்கள், மின் இணைப்பு 10 நாட்கள், குடிநீர் இணைப்புக்கு 30 நாட்கள் என சான்றிதழ்கள் மற்றும் அரசுச் சேவைகளைப் பெறச் சட்டப்பூர்வக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவை வழங்கப்படாவிட்டால், அது 'கருதப்பட்ட மறுப்பு' எனக் கொள்ளப்பட்டு, தானாகவே மேல்முறையீட்டு உரிமைக்குச் செல்லும் வழிவகை செய்யப்பட வேண்டும்.

நியாயமற்ற மறுப்பு அல்லது கால தாமதத்திற்குப் பொறுப்பான அலுவலருக்கு நாளொன்றுக்கு ரூ. 500 வீதம் அதிகபட்சமாக ரூ. 50,000 வரை அபராதம் விதிக்க வேண்டும். புகார்கள் மற்றும் மேல்முறையீடுகளைத் தீர்மானிக்கத் தனி 'சேவை உரிமை ஆணையம்' அமைக்கப்பட வேண்டும். இதன் தலைவராகத் தொண்டு நிறுவனத் தன்னார்வலரையும், உறுப்பினர்களாக நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் நியமிக்க வேண்டும்.

இவ்வாணையம் ஆண்டுதோறும் பெறப்பட்ட மனுக்கள், தீர்க்கப்பட்ட வழக்குகள் மற்றும் விதிக்கப்பட்ட அபராதங்கள் அடங்கிய அறிக்கையைச் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இச்சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பவர் இந்தியா அமைப்பின் செயல் இயக்குநர் ஆ. சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

KARNARAJ RAMANATHANAug 10, 2026 - 08:02:21 PM | Posted IP 162.1*****

GOOD EFFORT. NEEDED ESSENTIALLY

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory