» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் : ஆட்சியர் அழகுமீனா பேச்சு

சனி 29, மார்ச் 2025 5:52:01 PM (IST)



குமரி மாவட்டம் தண்ணீர் நிறைந்த மாவட்டமாக திகழ அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தினார். 

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் உலக தண்ணீர் தினத்தையொட்டி தோவாளை ஊராட்சி ஒன்றியம், பீமநகரி ஊராட்சியில் இன்று (29.03.2025) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து பேசுகையில் - மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் அடிப்படை தேவையான தண்ணீர் தேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்பு கிராமசபை நடத்திட வேண்டுமென ஆணையிட்டார்கள்.

அதன்ஒருபகுதியாக இன்று தோவாளை ஊராட்சி ஒன்றியம் பீமநகரி ஊராட்சியில் உலகத்தண்ணீர் தினத்தையொட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் பற்றியும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும், 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும். தூய்மை பாரத இயக்க திட்டம் குறித்தும், ODF Plus Model village குறித்தும், ஜல் ஜீவன் திட்டம் குறித்தும், ஊரக வீடுகள் சீரமைத்தல் குறித்தும், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்தும் கேட்டறியப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் "பனிப்பாறை பாதுகாப்பு" ஆகும். இந்த பூமியில் 97% நீரானது கடல்களில் நிறைந்துள்ளது. 2.50% நீர் தான் நன்னீராக உள்ளது. அந்த 2.50% தண்ணீரிலும் 1 சதவீத தண்ணீர் ஆறுகள், ஏரிகள், குளம் குட்டைகள், ஆழ்துளை கிணறுகளில் உள்ளன. மீதமுள்ள 1.50% தண்ணீர் பனிப்பாறைகள் மற்றும் பனி ஆறுகளாக உள்ளன. பனிப்பாறைகளை நாம் பாதுகாக்க வேண்டும். 

ஏனென்றால் சமீப காலங்களில் உலக வெப்பமயமாதலால் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதனால் பனிப்பாறைகள் உருகுகின்றன. குறிப்பாக நாம் பயன்படுத்துகின்ற வாகனங்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கார்பன்-டை-ஆக்சைடு கார்பன் மோனாக்சைடு போன்ற வெப்ப வாயுக்களின் அளவு அதிகரிப்பதனால் நமது பூமியின் வெப்பமும் அதிகரிக்கின்றது. பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகரிப்பதனால் கடல் மட்டத்தின் அளவு உயரும். அவ்வாறு உயரும்போது அருகிலுள்ள தீவுகள் மற்றும் அருகில் காணப்படும் நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.

இதுபோன்ற இயற்கை இடர்களை குறைப்பதற்காகத்தான் நமது தமிழ்நாடு அரசு நகர்ப்புறம் மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் குறுங்காடுகள் வளர்ப்பதற்கும், புதிய காடுகள் உருவாக்குவதற்கும் பல்வேறு திட்டங்கள் வகுத்துள்ளார்கள். மேலும் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், தேசிய பசுமை படை உள்ளிட்டவர்கள் அதிகளவில் மரங்கள் வளர்த்து பசுமை ஏற்படுத்திட ஊக்கப்படுத்துவதோடு, மரங்கள் வளர்ப்பதன் வாயிலாகவும் பூமியின் வெப்பத்தை குறைக்க முடியும். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்ற வரையறை உள்ளது. 

அதனடிப்படையில் ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 70 லிட்டர் தண்ணீரும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 90 லிட்டர் தண்ணீரும், சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கக்கூடிய மனிதர்களுக்கு 135 லிட்டர் தண்ணீர் சராசரியாக தேவைப்படும்.

பீமநகரி ஊராட்சியை பொறுத்த அளவில் ஒன்பது குக்கிராமங்களில் 3406 மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு குறைந்தபட்சம் 70 லிட்டர் தண்ணீர் என எடுத்துக்கொண்டால் 2.50 இலட்சம் லிட்டர் தண்ணீர் தினந்தோறும் தேவைப்படும். பீமநகரி ஊராட்சியில் 11 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் காணப்படுகின்றன. அங்கு 4.50 இலட்சம் தண்ணீர் சேமிக்கப்பட்டு, வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

நமது மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி போன்ற பெரிய அணைகளும், 2000க்கும் மேற்பட்ட பெரிய குளங்களும், 800க்கும் மேற்பட்ட சிறிய குளங்களும் காணப்படுகின்றன. சில மாவட்டங்களில் சில இடங்களில் தண்ணீர் இல்லாமல் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலைமை உள்ளது. ஆனால் நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் தண்ணீருக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே நாம் கிடைக்கும் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்தும் வகையில் சேமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பேசினார்கள்.

கூட்டத்தில் உதவி இயக்குநர் சிதம்பரம் (ஊராட்சிகள்), மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்பு இராதாகிருஷ்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜெங்கின் பிரபாகர், துணை இயக்குநர்கள் ஷீலா ஜாண் (தோட்டக்கலைத்துறை), சின்னகுப்பன் (மீன்வளத்துறை), கீதா (வேளாண் விற்பனை), மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் விஜயாமீனா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் ஜெயந்தி, தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயா, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ராஜ்குமார், துறை அலுவலர்கள், செயல் அலுவலர், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory