» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாஸ்மாக் அமலாக்கத்துறை விசாரணை வழக்கு ஏப்.8-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

செவ்வாய் 1, ஏப்ரல் 2025 4:50:50 PM (IST)

டாஸ்மாக் அமலாக்கத்துறை விசாரணை தொடர்பான வழக்கை வருகிற 8-ம் தேதிக்குத் தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத்துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத்துறையின் இந்த சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் ஆகியோர் விசாரித்து வந்தனர். கடந்த முறை இந்த வழக்கை விசாரித்தபோது, அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டனர்.

மேலும், எந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது என்பது குறித்த விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர். இதற்கிடையே கடந்த மாதம் 25-ம் தேதி அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அறிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியன், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு ஒதுக்கப்பட்டது.

அதன்படி டாஸ்மாக் வழக்கு எஸ்.எம் சுப்ரமணியன், ராஜசேகர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், 60 மணி நேரம் சோதனை நடத்தி பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர். மனித உரிமை மீறல் இது. அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக காவல்துறை இரவில் சோதனை நடத்தியதே இல்லையா? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு நள்ளிரவில் சோதனை நடத்தியதில்லை எனத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்தார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தமிழக அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை பதில் மனுவுக்கு பதில் அளிக்கத் தமிழக அரசுக்கு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை வருகிற 8-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர். மேலும் மக்களுக்காக, ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory