» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் பிரதமர் மோடி அறிவிப்பாரா? பயணிகள் கோரிக்கை

ஞாயிறு 6, ஏப்ரல் 2025 10:44:42 AM (IST)

கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி,ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை உள்ள கிழக்கு கடற்கரை ரயில் பாதை ராமேஸ்வரம் வரும் பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவிக்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தென் மாவட்டங்களில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, தொழில் வளர்ச்சி இல்லாமை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தென்தமிழகத்தின் பல மாவட்டங்களில் பின்தங்கிய நிலையில் உள்ளன. போதிய வேலைவாய்ப்பு வசதிகள் எதுவும் இல்லாத காரணத்தால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களில் விருதுநகர் - மானாமதுரை, திருநெல்வேலி – திருவனந்தபுரம் பாதை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள ரயில் பாதைகள் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது ஆகும். திருநெல்வேலி – நாகர்கோவில் 74 கி.மீ புதிய அகல ரயில்பாதை 08-04-1981-ம் தேதியும், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் 87 கி.மீ புதிய அகல ரயில்பாதை – 15-04-1979 அன்றும் விருதுநகர் - அருப்புகோட்டை மீட்டர்கேஜ் பாதை 01-09-1963 இன்னும் அருப்புக்கோட்டை – மானாமதுரை மீட்டர்கேஜ் பாதை 02-05-1964-ம் பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. 

இந்த திட்டங்கள் மட்டுமே இந்தியா சுதந்திரம் அடைந்த 1947க்கு பிறகு தென் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்ட இருப்பு பாதைகள் ஆகும். அதன் பிறகு இதுவரை எந்த ஒரு புதிய பாதையும் தென்மாவட்டங்களில் அமைக்கப்படவில்லை. பாரத பிரதமர் மோடி அவர்கள் 2014 தேர்தலுக்கு முன்பாக கடந்த 75 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் அரசு எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் செய்யவில்லை என்று பலமுறை தேர்தல் பிரச்சாரங்களில் பெரிதாக பேசப்பட்டது. இதனால் மோடி அவர்கள் பிரதமர் ஆனால் இந்த கிழக்கு கடற்கரை பாதை திட்டத்தை கண்டிப்பாக அறிவித்து செயல்படுத்துவார் என்று மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. 

ஆனால் ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த திட்டம் இதுவரை அறிவிக்கப்படாதது தென்மாவட்ட மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறைந்த பட்சம் இந்த திட்டம் ரிசர்வே மறுமதிப்பீட்டுக்கு கூட அறிவிக்கப்படவில்லை. பிரதமர் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த 2014 அல்லது 2015 –ம் ஆண்டுகளில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் தற்போது இந்த திட்டம் செயல்வடிவம் பெற்று பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கும்.

கிழக்கு கடற்கரை ரயில் பாதை:-

கிழக்கு கடற்கரை ரயில் பாதை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி வரை ரயில் மூலம் இணைக்கப்பட வேண்டும் என்று தென் தமிழ்நாடு மக்களின் கோரிக்கை வலுத்து வருகிறது. கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் போது இந்த வழி தடத்தில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்துடன் நேரடியாக ரயில் வழி பாதை மூலம் இணைக்கபட்டுவிடும். 

இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்த பகுதியில் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். தற்போது கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயிலில் பயணிக்க வேண்டுமானால் நாகர்கோவில்,திருநெல்வேலி வழியாக 136 கி.மீ பயணித்த சுற்று பாதையில் தான் செல்ல முடியும். கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கப்ட்டால் பயணதூரம் 70 கி.மீ மட்டுமே ஆகும்.

குலசேகரபட்டினம் ரயில் பாதை:-

திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் உடன்குடி – கே.பி.என் சந்தைக்கு ஆங்கிலேயர் காலத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆங்கிலேயர்கள் தூத்துக்குடி, குலசேகரப்பட்டினம், கொற்கை ஆகிய துறைமுகங்களின் வாயிலாக பன்னாட்டு வணிகத்தில் கிழக்கிந்திய கம்பெனியினர் ஈடுபட்டனர். 

குலசேகரப்பட்டினத்தில் சர்க்கரை ஆலையை தொடங்கிய 1914ம் ஆண்டு "பாரி அன் கோ' எனும் நிறுவனம் மூலம் குலசேகரப்பட்டினத்திலிருந்து திசையன்விளைக்கு 16.5 மைல் தூரத்திற்கு ரயில் பாதை அமைத்தனர். அப்பாதையில் 18.07.1915 முதல் பயணிகள் ரயில் ஒன்றும், சரக்கு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது. இந்த ரயில் பாதை 1929ம் ஆண்டு திருச்செந்தூர் வரை மேலும் 27 மைல்கள் நீட்டிக்கப்பட்டது. 

திசையன்விளையில் இருந்து இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரன்பட்டினம், ஆலந்தலை வழியாக திருச்செந்தூருக்கு தினமும் மூன்று ரயில்களும், திசையன்விளை வாரச்சந்தை நாளான வெள்ளிக்கிழமை அன்று அதிகப்படியாக சிறப்பு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது. திசையன்விளைக்கு திருச்செந்தூருக்கும் இடையிலான பயணக்கட்டணம் 13 அனாவாக இருந்தது. இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக 4.2.1940 ல் இந்த ரயில் சேவை முற்றிலும் முடங்கி போனது. தற்போது அந்த பகுதியில் ரயில்கள் இயக்கப்ட்டதங்கான எந்த அறிகுறியும் இன்றி காணப்படுகிறது.

கன்னியாகுமரி – காரைக்குடி புதிய ரயில் பாதை:-

கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர்,தூத்துக்குடி, காயல்பட்டினம்,ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை புதிய ரயில்வே இருப்பு பாதை தடம் அமைக்க 2008-09 ரயில் நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி செய்ய அறிவிக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை புதிய ரயில் இருப்புபாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி முடிவடைந்து திட்ட மதிப்பீடை ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே சமர்ப்பித்துவிட்டு. இந்த ஆய்வுப்பணி இரண்டு பிரிவுகளாக நடந்தது.

காரைக்குடி – தூத்துக்குடி:

காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய ரயில் பாதை அமைக்க ஆய்வு பணி நடைபெற்றது. இந்த ஆய்வு பணியில் 214.81 கி.மீ தூரம் ரயில் பாதை அமைக்க 879 கோடிகள் தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் தேவகோட்டை, தேவிப்பட்டிணம்,கீழக்கரை, ஏர்வாடி,சாயல்குடி,சூரங்குடி, குழத்து வழியாக தூத்துக்குடி சர்வெ செய்யப்பட்டது.

தூத்துக்குடி - கன்னியாகுமரி:-

கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியிலிருந்து தூத்துக்குடி வழியாக ராமநாதபுரம் வரை பாதை அமைக்க நடைபெற்ற ஆய்வு பணியில் இந்த திட்டம் 247.66 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க 1080 கோடிகள் தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரபட்டினம், மணிநகர், திசையன்விளை,நாவலடி,கூடங்குளம், மகாராஜபுரம்,பெருமாள்புரம் வழியாக கன்னியாகுமரிக்கு செல்லும்.

மொத்த ரயில் நிலையங்கள்:-

காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களை சேர்த்து ; 462.47 கி.மீ தூரத்தில் 1965.763 கோடிகள் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சரின் அறிவிப்பு

திருச்சியில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அவர்கள் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி நடைபெற்றி விழாவின் போது சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை வழியாக கன்னியாகுமரிக்கு இருப்பு பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள். இந்த திட்டத்துக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்பதையும் தெரிவித்தார்.

ரேட் ஆப் ரிட்டன்:-

பொதுவாக ரயில்வே வாரியம் மற்றும் திட்ட குழு ஒரு புதிய ரயில்வே இருப்பு பாதை திட்டத்தை பல கோடிகள் முதலீடு செய்து செயல்படுத்தும் முன்பு அந்த திட்டம் பொருளாதார அளவில் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் திருப்பி கிடைக்கும் என்பதை கணக்கில் கொண்டு திட்டத்தை அறிவிப்பார்கள். இதற்கு ரேட் ஆப் ரிட்டன் என்று கூறுவார்கள். இந்த கிழக்கு கடற்கரை பாதை ரயில்வே திட்டம் துறைமுகம், மின்திட்டங்கள், சரக்கு போக்குவரத்து,சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் என பல்வேறு வழிகளில் வரும் பொருளாதார வருமானங்களை கணக்கில் கொண்டு இந்த டேட் ஆப் ரிட்டன் கணக்கீடு செய்யப்படும். இந்த கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்தில் காரைக்குடி – தூத்துக்குடி மைனஸ் -8.35% ரேட் ஆப் ரிட்டன் ஆகவும் தூத்துக்குடி - கன்னியாகுமரி பாதை -8.88% ரேட் ஆப் ரிட்டன் ஆகவும் உள்ளது. இவ்வாறு குறைவாக ரேட் ஆப் ரிட்டன் உள்ளதால் இந்த திட்டம் செயல்படுத்துவதில் பெரும் சிக்கல் உள்ளது. இவ்வாறு குறைவாக ரேட் ஆப் ரிட்டன் வரும் திட்டங்களை ஆய்வு செய்து விட்டு கைவிட்டு விடுவார்கள். இவ்வாறு கைவிடப்பட்ட திட்டங்கள் பல உள்ளன. ரேட் ஆப் ரிட்டன் குறைவாக உள்ள காரணத்தால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த ரயில்வே வாரியம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இந்த திட்டம் சர்வே செய்யும் 2009 முதல் 2011 வரை இந்த பகுதிகள் பெரிதும் கண்டுகொள்ளப்படாமல் இருந்து வந்தது. தற்போது இந்த கிழக்கு கடற்கரை ஓரமாக பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலையம், குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம், கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டலம், மின் திட்டங்கள் என பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் கேரளா தமிழ்நாடு எல்லை அருகே விழிஞம் என்ற இடத்தில் புதிய துறைமுகம் அமைக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கிழக்கு கடற்கரையில் உள்ள தூத்துக்குடி மற்றும் மேற்கு கடற்கரையில் உள்ள விழிஞம் துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்துக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக திட்டமாக இருக்கும்.

இந்த நிலையில் இந்த இருப்பு பாதை திட்டத்தை மீண்டும் ரிசர்வே செய்ய வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஏனென்றால் ரிசர்வே செய்தால்தான் தற்போது இந்த திட்டத்தின் நிதி எவ்வளவு ஆகும், வருவாய் எவ்வளவு கிடைக்கும் என முழு விவரங்கள் தெரியவரும். ஆனால் ரயில்வே நிர்வாகம் இந்த திட்டத்தை ரிசர்வே செய்ய கூட தயாராக இல்லை. தென்மாவட்ட மக்கள் முதலில் இந்த திட்டத்தை ரிசர்வே செய்ய கோரிக்கை வைத்தார்கள். அதற்கு கூட மத்திய அரசு தயாராக இல்லை.

கிடப்பில் திட்டம்

ரயில்வே வாரியம் கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற ஆய்வு அறிக்கையை பொதுமக்களுக்கு இணையதளத்தில் வெளியிட்டது. இந்த அறிக்கையின் படி இந்த கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் ரேட் ஆப் ரிட்டன் குறைவாக இருக்கின்ற காரணத்தால் கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தென்மாவட்ட பயணிகள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தென்மாவட்ட வளர்ச்சிக்கு வேண்டி இந்த கிழக்கு கடற்கரை ரயில் பாதை ராமேஸ்வரம் வரும் சிறப்பு திட்டத்தின் கீழ் பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவிக்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory