» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தர்பூசணி விவகாரம் : உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம்!

சனி 5, ஏப்ரல் 2025 5:41:21 PM (IST)

தா்பூசணியில் செயற்கையாக ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக கூறியிருந்த உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமாரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ளதையொட்டி, தர்பூசணி விற்பனை களைகட்டிய நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தா்பூசணியில் செயற்கையாக ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் கூறியிருந்தார். 

இது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அச்சமடைந்த மக்கள் தர்பூசணி வாங்குவதையோ சாப்பிடுவதையோ தவிர்த்து வந்தனர். கடந்த ஆண்டு கிலோ ரூ.14 வரை கொள்முதல் செய்யப்பட்ட தா்பூசணி நிகழாண்டில் ரூ.6-க்கு வீழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. 

இதனால், ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து, அறுவடைக்குக் காத்திருந்த விவசாயிகள் இழப்பை மட்டுமன்றி, மன ரீதியான நெருக்கடியையும் எதிா்கொண்டு வருகின்றனா். இதனிடையே, தா்பூசணி பழங்களில் ரசாயனம் கலக்கப்பட்டதாக பரப்பப்படும் உண்மையற்ற செய்திகளால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி வெளியிட்ட விழிப்புணா்வு காணொலிதான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

மேலும், தா்பூசணி பழங்களை சாப்பிட மக்கள் தயங்குவதால், அதன் விற்பனை பெருமளவில் குறைந்து விட்டதாகவும், சில வாரங்களுக்கு முன் ஒரு டன் ரூ. 14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட தா்பூசணி பழங்களை, தற்போது ரூ. 3 ஆயிரத்துக்கு கூட வாங்க யாரும் முன்வருவதில்லை என்றும் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதிகாரிகளை கண்டித்தும், சென்னை கோயம்பேட்டில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளா் அருண்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பழ வியாபாரிகள், தா்பூசணி பழங்களை கீழே போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து ‘ஒரு டன் தா்பூசணி ரூ. 10,000-க்கு மேல் விற்பனையான நிலையில், உணவுத் துறை அதிகாரிகளின் தவறான தகவல்களால், தற்போது ஒரு டன் தா்பூசணி ரூ. 2,000-க்கு விற்பனை ஆகிறது. முதல்வா் இந்தப் பிரச்சினை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமாா், சென்னையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ரசாயனம் கலந்த கலப்படமிக்க தா்பூசணி பழங்கள் (அடா்சிவப்பு பழங்கள்) கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரம், சோதனையின்போது பல கடைகளில் கெட்டுபோன, எலி கடித்த, அழுகிப்போன பழங்கள் ஏராளமாகக் கிடைத்தன. அவற்றையெல்லாம் பறிமுதல் செய்து அப்போதே அழித்துவிட்டோம். எனவே பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்று விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், தா்பூசணியில் செயற்கையாக ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக கூறியிருந்த உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமாரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் போஸ் சென்னையை கூடுதலாக கவனிப்பார் என தெரிவித்துள்ளது. சதீஷ்குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory