» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 28, மே 2025 10:54:25 AM (IST)
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த ஞானசேகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஞானசேகரன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர். அதன்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. அப்போது, ஞானசேகரனுக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து ஞானசேகரன் சார்பில் ஆஜராக வக்கீல்கள் கோதண்டராமன், ஜெயபிரகாஷ் ஆகியோரை சட்டப்பணி ஆணைக்குழு நியமித்தது.
கடந்த ஏப்ரல் 23-ந்தேதி சாட்சி விசாரணை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடந்தது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. போலீஸ் தரப்பில் வக்கீல் எம்.பி.மேரி ஜெயந்தி ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு மே.28-ந்தேதி வழங்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி கடந்த வாரம் உத்தரவிட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட உள்ள நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, இருதரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்திற்கு வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ராஜலட்சுமி பிறப்பித்தார்.
இதன்படி ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகி உள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். மேலும் ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டும் என்றும், தண்டனை விவரம் வெளியாகும் வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார்.
தற்போது மகளிர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வரும் நீதிபதி எம்.ராஜலட்சுமி சென்னை பெருநகர முதலாவது கூடுதல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பளித்ததும் அவர் புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிராக மொத்தம் 35 குற்றவழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், அதில் பல வழக்குகளில் தண்டனையும், சில வழக்குகளில் விடுதலையும் பெற்றுள்ள ஞானசேகரனுக்கு எதிராக தற்போது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தபால்காரர் மூலம் விளம்பரப் பிரசுரங்கள் அனுப்பும் சேவை அறிமுகம்: அஞ்சல் துறை அழைப்பு!
திங்கள் 2, ஜூன் 2025 5:44:18 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 385 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 2, ஜூன் 2025 4:44:59 PM (IST)

புதிய வகை வைரஸ்களால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது: விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி
திங்கள் 2, ஜூன் 2025 4:28:28 PM (IST)

தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 2, ஜூன் 2025 4:10:55 PM (IST)

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ ஓய்வு : தமிழக அரசு தகவல்
திங்கள் 2, ஜூன் 2025 4:05:26 PM (IST)

திமுக ஆட்சி அமைவதற்கு சூளுரை ஏற்போம் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
திங்கள் 2, ஜூன் 2025 3:18:05 PM (IST)
